Muslim History

இந்தியாவின் Waqf மசோதா – கூறுவது என்ன ?

இந்தியாவின் Waqf மசோதா - கூறுவது என்ன ?

இந்தியாவின் வக்பு மசோதா – கூறுவது என்ன ? முஸ்லிம்கள் உட்பட எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வரை எதற்காக எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றன ?

நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிசிஜு வக்ப் திருத்த மசோதா 2024 ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் சட்டத்தில் 44 திருத்தங்களை இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

ஆனால் சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும் சிறுபான்மையினருக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்தும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பரிசோதனைகளுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது முஸ்லிம்களை நோக்கி முன்வைக்கப்படும் மசோதாக்கள், நாளை ஏனைய சமூகங்களை நோக்கியும் பாயும் என சிறுபான்மையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக வக்ப் என்பது இஸ்லாத்தை நம்பும் எந்த ஒரு நபரும் மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்கும் அசையும் அல்லது அசையா சொத்தை குறிக்கும்.

நாடு முழுவதும் வக்ப் வாரியத்தின் 872,00 அசையா சொத்துக்கள் உள்ளன. மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 3.56 லட்சம் எஸ்டேட்களும் உள்ளன.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய ரயில்வே துறை அமைச்சு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்களை வைத்திருப்பது வக்பு வாரியம் ஆகும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக இந்த பொறுப்பு கலெக்டர் அல்லது துணை ஆணையரிடம் வழகப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தில் யாரும் எந்த அசையும் அசையாத சொத்தையும் நன்கொடையாக அளிக்கலாம் என்று உள்ளது.

திருத்தப்பட்ட மசோதாவில் இஸ்லாத்தை குறைந்தது 5 ஆண்டுகள் பின்பற்றும் நபர்களால் தான் நன்கொடைகள் வழங்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய சொத்தின் மீது அவருக்கு உரிமை இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு நபரும் சொத்தின் சட்டபூர்வ உரிமையாளராக இல்லாவிட்டாலோ அல்லது சொத்தை அர்ப்பணிக்கவும் அல்லது மாற்றும் தகுதி இல்லாவிட்டாலோ வக்ப் வழங்க முடியாது என சட்ட திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

மத்திய வக்ப் கவுன்சிலிலும் மாநில அளவிலான வக்ப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களின் கீழ்
போரா மற்றும் ஆகாகனி சமூகத்தின் பேரில் தனி வக்ப் வாரியம் அமைப்பது பற்றியும் பேசப்பட்டுள்ளது.

வக்ப் சொத்துக்கான பதிவு மத்திய போர்ட்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். வக்ப் சொத்துக்களை பெறுபவர்கள் இதன் மூலம் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். இதனுடன் ஆண்டு வருமானம் 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக உள்ள சொத்துக்களுக்கு வக்ப் வாரியத்துக்கு செலுத்த வேண்டியது, ஏழு சதவீதத்திலிருந்து 5% வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு சொத்து வக்ப்புக்கு கீழ் வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்ப் வாரியத்தின் அதிகாரத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய முன்மொழிவின்படி தற்போதுள்ள 3 உறுப்பினர்களைக் கொண்ட வக்ப் தீர்ப்பாயமும் 2 உறுப்பினர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாக கருதப்படாது. தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

வரம்புச் சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க புதிய மசோதாவில் விதிமுறைகள் உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கு மேலாக வக்ப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக மாற முடியும்.

மேலும் ஒரு முக்கிய திருத்தமும் இந்த மசோதாவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரோ, அல்லது பின்னரோ வக்ப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட அரச சொத்து, வக்ப் சொத்தாக கருதப்பட மாட்டாது.

அத்தகைய சொத்துக்களில் அரசு சொத்துக்கள் ஏதேனும் உள்ளனவா என கேள்வி எழுந்தால் சொத்து அமைந்த பகுதியின் அதிகாரம் உள்ள கலெக்டருக்கு இந்த விவகாரம் பரிந்துரைக்கப்படும்.

அவர் விசாரணையை மேற்கொண்டு அந்த சொத்து அரசாங்க சொத்தா இல்லையா என்பதை முடிவு செய்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கலெக்டர் அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை அந்த சொத்து வக்பு சொத்தாக கருதப்பட மாட்டாது.

வக்ப் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், “வக்ப் சட்டம் 1995 முழுமையான சட்டமாக இருக்கின்றது. இதற்கு சட்ட திருத்தம் தேவையில்லை. வக்ப் சொத்துக்களை பாதுகாக்கும் அதிகாரமுள்ள வக்ப் வாரியத்தை பலவீனமாக்கக்கூடியதாக புதிய சட்ட திருத்தங்கள் அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.

“பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முஸ்லிம் செல்வந்தர்கள் கொடுத்த சொத்துக்களை பள்ளிவாசல்கள் தர்காக்கள் மூலம் பாதுகாக்க வேண்டும். அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் ஆரோக்கியமானதாக இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top