வித்தியாலயம் குறித்து…
அரும்பணியும் பெரும்பணியும் புரிவோர் பெரு மகன்களாகவும் பெரு மகான்களாகவும் இருப்பர். தனது சேவைக் காலத்தில் தனக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்பை மிகவும் கனகச்சிதமாக பயன்படுத்தி விஞ்ஞான பூர்வமான வரலாற்று ஆவணமாக பெரும் பொக்கிஷமாக வடிவமைத்துள்ளார் புத்தளம் தமிழ் மொழிப்பிரிவின் வலயக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய ஓய்வு பெற்ற Z.A. ஸன்ஹிர் sir அவர்கள். முதலில் அவரை வாழ்த்துகிறேன்.
இப்படிப்பட்ட கல்வியியல் துறை சார்ந்த வரலாற்று ஆவணம் ஒன்றை வடிவமைத்து பலருக்கும் முன்மாதிரியாக இருந்து முன்மாதிரி ஒன்றை விட்டுசென்றமை அவரது மகிழ்வான ஓய்வு காலத்தினை இரட்டிப்பு மகிழ்வுக்கு உட்படுத்தும்
பேருவளை ஜாமியா நளீமியா உயர் கற்கைகளுக்கான கலாபீடத்தின் ஆரம்பத் தொகுதி மாணவர்களுள் ஒருவராகிய Z. A. ஸன்ஹிர் sir அவர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி, ஹிந்து கல்லூரி போன்றவற்றில் நீண்ட கால கற்பித்தல் அனுபவம் பெற்றவர். பொருளியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவர். உயர்தர மாணவர்களுக்காக பொருளியல் தொடர்பான இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். சமூகக் கல்விப் பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகராக, தொலைகாட்சி நிகழ்ச்சி வளவாளராக, அதிபராக, முகாமையாளராக, கல்வி நிர்வாகியாக என பன்முக தளத்தில் பணியாற்றி இப்பொழுது ஓய்வுநிலையில் வரலாற்றுத்துறைக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது மகத்தான பணியை இறைவன் அங்கீகரிக்கட்டுமாக.
அதிபராக இருந்த தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் கட்டிக்காத்த வரலாற்று ஆவணங்களை நூல்களை எல்லாம் அழகுற பயன்படுத்தி அருமையான வரலாற்று ஆவணமொன்றை வடிவமைத்துள்ளார்.
வாசிப்பு ஆர்வமும் வரலாற்று உணர்வும் தேடலும் கொண்ட இந்த அறிய பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு கல்வி வலயமும் அந்தந்த வலயங்களின் கல்விப்பணிகள், வரலாறுகள் குறித்த நீண்ட நெடிய ஆவணமொன்றை தயாரிக்க மாதிரியாக கொள்ளுமளவு அதனது கனதி மற்றும் உள்ளடக்கம் வடிவமைப்பு அமைந்துள்ளது.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய (குருநாகல) U.M.B. JEYANTHILA அவர்கள் நூல் அறிமுக விழாவில் உரையாற்றிய போது இமாம் புகாரி கல்விக்காக அலைந்து திரிந்தது போல இந்நூலை ஆக்க நூலாசிரியர் அலைந்து திரிந்துள்ளார் என்று சிலாகித்துள்ளார். உண்மையில் அப்படியான ஒரு பெரும் பணிதான் இது.
நூலில் உள்ள கலைசார், தொழிநுட்பம் சார் சிறப்பம்சங்கள்.
“வித்தியாலயம்” எனும் சொல் தரும் ஆழமான கருத்தை தலைப்பின் வடிவமைப்பு சுட்டிக்காட்டுகிறது. முதல் எழுத்தான v/வி/වී மும் மொழிகளுக்கும் பொருந்தி வரும் வகையில் அமையப் பெற்றுள்ளது. “வித்தியா” என்பதே மிக ஆழமான பொருள் தரும் அறிவார்ந்த, கற்ற, புலமைத்துவம் சார், புத்திஜீவித்துவ அர்த்தங்களை தருகின்றது. லயம் என்பது சீரான, செவ்வையான, சிறப்பான எனும் அர்த்தங்களை தருகிறது. நூலும் பெயர் போலவே சிறப்பாகத்தான் உள்ளது.
அட்டை வடிவமைப்பு, அட்டைப்படம், binding, தாள்களின் தரம், இணைக்கப்பட்டுள்ள படங்கள், கறுப்பு வெள்ளைப்படங்கள் வரலாற்றின் தொன்மையை சான்று பகர்வதான உணர்வை மேலிட வைக்கும், அதே போல நிறப்படங்கள் நிகழ்காலத்தை கண் முன்னே கொண்டு வரும் வகையில் உள்ளது. 567 பக்கங்கள் கொண்ட கொழுத்த நூலின் முற்பகுதி கனங் காத்திரமான கல்வியியல் கட்டுரைகளும், ஆவணங்களும் நிறைந்த தொகுப்பாக உள்ளது. பின் பகுதி புத்தள பாடசாலைகள் குறித்த ஆவணமாக உள்ளது. மலராசிரியராக இருந்து இப்படி ஒரு பெருத்த வரலாற்றுப் பணியை தன் சேவைக்காலத்தில் முன்மாதிரியாக செய்து அதிலே வித்தியாலயத்தின் குரலெனும் குறிப்புரையுடன் 51 பக்கங்கள் வரை நீளும் நெடும் ஆய்வுக்கட்டுரை மூலம் இலங்கையின் கல்வி வரலாற்றை முஸ்லிம் கல்வி வரலாறு சகிதம் புத்தளம் கல்வி நிலையையும் அழகுற ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார்.
சமுகவியல் நோக்கில் புத்தளம் மாவட்டத்தில் நவீன கல்வியின் அறிமுகம் எனும் ஆய்வுக்கட்டுரையை பேராசிரியர் MSM Anas sir எழுதியுள்ளார். புத்தாயிரம் ஆண்டும் புத்தளம் பிரதேச கல்வி நிலையும் எனும் ஆய்வை ஓய்வு பெற்ற முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் M. A. M. A Jawad Maraikkar எழுதியுள்ளார். யுத்தத்தால் இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் வாழும் வடபுல மாணவர் கல்வி-ஓர் அனுபவப்பகிர்வு எனும் தலைப்பில் பன்னூலாசிரியர் பழுத்த அனுபவம் மிக்க சமூக சிந்தனையாளர் முன்னைநாள் அதிபர் A.M நஹியா ஆசிரியர் நீண்ட நெடிய கட்டுரை பேசுகிறார். புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் MHM நவாஸ் அவர்கள் புத்தளத்தில் ஆசிரியர் கல்வி எனும் தலைப்பில் உரையாடுகிறார். புத்தள கல்வி வலய ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வெ. அருணாகரன் அவர்கள் “ஆரம்பக் கல்வியின் வாசிப்பு, எழுத்து திறன், இடை நிலை அடைவு மட்டத்தில் செலுத்தும் செல்வாக்கு எனும் தலைப்பில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளை மையப்படுத்திய ஆய்வு ஒன்றை அழகாக முன்வைக்கிறார்.
கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபா செலவளித்து இந்த பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வலயத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ஒரு புத்தகத்தையேனும் கொள்வனவு செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் நிறைவேறியுள்ளது. அதே நேரம் நிதிச் செலவுகளை புத்தளப்பகுதியில் உள்ள வெளிநாடுகளில் பணியாற்றும் மாணவர்கள் பொறுப்பெடுத்துள்ளனர்.
நூல் உலக நாடுகளுக்கும் உடனுக்குடன் அறிமுகமாகி அமெரிக்க இங்கிலாந்து ஆஸ்திரேலிய பிரபல பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுள்ளது.
சுவடிக்கூடம் போல உள்ள சான்றதாரங்கள் உண்மையில் வரலாற்றுத் தொன்மையை கண் முன்னே கொண்டுவருகிறது. ஆய்வு மரபுகள் பக்கத்துக்கு பக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரலாற்றுத்தகவல்கள் மிகவும் கவனமாக இரட்டிப்பாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. பல நூறு தடவைகள் சுவடிக்கூடத்துக்கு ஏறி இறங்கி தகவல் திரட்டியுள்ளார். புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு அடிக்கடி பயணம் செய்து தான் மேலதிக வரலாற்றுத் தகவல்களை திரட்டியுள்ளார்.
அலுப்பில்லாத நூல் வாசிப்பில் நூலின் எழுத்து வடிவமைப்பு (font) மற்றும் தளக்கோலம் மிகவும் முக்கியம். நூலை தடவுகையில் பிரபல குமரன் புத்தக இல்லத்தின் வாடை துலாம்பரமாகும். உண்மையில் சுவடிக்கூடம் அங்கீகரித்துள்ள பதிப்பகங்களுள் குமரன் சிறப்பிடம் பெறுகிறது. குமரனின் வழிகாட்டல் மற்றும் விசேட font இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளதை நூலாசிரியர் மூலம் உறுதி செய்தேன். அவ்வாறே சுவடிக்கூடமும் இதன் 5 பிரதிகளை பெற்று ஆவணப்படுத்தியுள்ளது. அவ்வாறே கொழும்பு தேசிய நூலகமும் இதன் ஒரு பிரதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாறு பேணி பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக அண்மைக் காலங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வருடாந்த மீலாத் தின சிறப்பு நிகழ்வன்று மாவட்டமட்ட முஸ்லிம்களின் வரலாற்றை தொகுத்து வெளியிட்டது. அதற்கு நிகராக ஒவ்வொரு கல்வி வலயமும் அந்தந்த மாவட்ட கல்வி வரலாற்றை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றுடன் இணைத்து ஆய்வுக்கூடாக ஆதாரங்களின் அடிப்படையில் முன்னெடுத்து ஆவணமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எமது வித்தியாலங்கள் எனும் தலைப்பில் புத்தளம் மாவட்ட அணைத்து பாடசாலைகளும் 9 criteria அடிப்படையில் பரந்த hierarchy ஒன்றின் மூலம் தொகுக்கப்பட்டு இறுதியில் தயாரித்தவர் பரிசீலித்தவர் உறுதி செய்தவர் எனும் வகையில் அற்புதமாக இணைக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் கலையில் உள்ள திறனாய்வு கலை போல மிகவும் கவனமாக இருந்து செய்துள்ளார் என்பது மட்டும் உண்மை.
பொதுவாக கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் விடப்படும் ஒரு தரப்பாக ஆசிரிய ஆலோசகர்கள் அமைவர். ஆனால் இங்கு அவர்களையும் புகைப்படங்களுடன் இணைத்து ஆவணப்படுத்தி பாதுகாத்துள்ளார் நூலாசிரியர். ARCHIVE எனப்படும் சுவடிக்கூடம் மூலம் வரலாற்றின் தொன்மையை Antiquity நோக்கி நாம் அழைத்துச் செல்லப்படுகின்றோம். கறுப்பு வெள்ளைப்படம் என்பதால் அதே உயிரோட்டம் மிக்க உணர்வு எம்மை ஆட்கொள்ளும். பாடசாலையின் சம்பவ திரட்டு புத்தகம் log book பயன்படுத்தி இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இணைப்புசெய்யப்பட்ட அத்தாட்சிப் பத்திரங்களும், இடமாற்ற கடிதங்களும் ஒருவித வரலாற்றுணர்வை தரும்வகியில் உள்ளன.
குறிப்பாக புத்தளத்தை சேர்ந்த மௌலவி பாஸில் முஹம்மது அபூ பக்ர் ஆலிம் அவர்களால் 1925 களில் 62 பக்கங்களில் எழுதப்பட்ட ஸூரா அஸ்ர்க்கான அரபுத்தமிழில் தப்ஸீர் இந்தியாவின் லக்னோவில் உள்ள இஷாஅதுல் இஸ்லாம் பதிப்பகம் மூலம் வெளியப்படுள்ளமை சிறப்பான தகவல்.
ஒவ்வொரு பழைய நூல்களையும் கட்டடங்களையும் ஊர்களையும் அதன் பாதைகளையும் புதைகுழிகளையும் கடக்கும் போது வரலாற்றின் பின்னைய காலங்ககளை நோக்கி எம்மை அறியாமலே செல்லும் உணர்வு ஏற்படும். அக்கால மனிதர்களின் மொழி, பண்பாடு, கலாசாரம், உணவுப்பழக்கம், பொருளாதாரம், மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அவை நீளும். அவை புகைப்படங்களாக வருகையில் இன்னும் நெருக்கமான உணர்வைத்தரும். ஒரு வரலாற்றுப் பணிக்கூடாக வரலாற்றுணர்வை கிண்டி கிளறி அதனை நோக்கி செல்லவும் இருப்பவற்றை தேடிப்பெற்று கட்டிக்காத்து கையளிக்கவும் வேண்டும் எனும் ஆத்மார்த்த பாடத்தை எமக்கு நூலாசிரியர் தருகிறார்.
கறுப்பு வெள்ளைப் புகைப் படங்களும் கலர் படங்களும் கடந்த காலத்தையும் கடந்து வந்த காலத்தையும் உடனிகழ் காலத்துடன் சங்கமிக்க வைக்கிறது. இரண்டுக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் எமது வரலாற்றுப்பணி இமாலய பணி. இதனை உணர்ந்து பொறுப்புடன் பணியாற்றி வரலாறு படைத்தவர்களாக அறிவுச்சமூகம் மாற வேண்டும் எனும் உயர்ந்த பொறுப்பை மிகவும் கவனமாக எம்முள் ஊடுருவ விடுகிறது Z.A. ஸன்ஹிர் sir தலைமயில் வெளியிடப்பட்ட வித்தியாலயம் எனும் வரலாற்று ஆவணம்
நூல் வெளிவர எல்லா வகையிலும் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
M.M.A.BISTHAMY.