Sri Lankan Muslim

இலங்கை முஸ்லிம்களது வரலாற்று வரைவியலை மறுவாசிப்புக்கு உட்படுத்தல்.

இலங்கை முஸ்லிம்களது வரலாற்று வரைவியலை மறுவாசிப்புக்கு உட்படுத்தல்.

வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர், நூல் திறனாய்வாளர், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர், பன்முக செயற்பாட்டாளர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் எழுதிய . . . 

இலங்கை முஸ்லிம்களது வரலாற்று வரைவியலை/ வரலாறு எழுதியலை மறுவாசிப்புக்கு உட்படுத்தல்.

Revisiting the historiography of Sri Lankan Muslims.

ஒரு வரலாற்று மாணவனாக, இலங்கை முஸ்லிம்களது எழுதப்பட்ட வரலாற்றை அணுகுகின்றபோது, பல வகையான சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன.

இவற்றுள் அநேகமானவை வரலாறெழுதியல்/ வரலாற்று வரைவியல் (Historiography) சார்ந்த பிரச்சினைகள் என்பதை, நுணுகி நோக்கும் எவரும் நன்கு உணர்ந்து கொள்வர்.

அநேகமான நூல்கள் அறபுப் பூர்வீகத்திற்கே அழுத்தம் கொடுத்துப் பேசுகின்றன. இதற்கு ஒரு வரலாற்று நிகழ்வே பின்புலமாக அமைந்துள்ளது.

பொன்னம்பலம் இராமநாதன், Royal Asiatic Society இதழில் எழுதிய Ethnology of Ceylon Moors’ என்ற கட்டுரையில், இலங்கை முஸ்லிம்கள் தனியான ஓர் இனக்குழு அல்ல, அவர்கள் சாதிப் படிநிலையில் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்கள் மதம் மாறியதால் உருவானோரே என வாதித்தார்.

அப்போதிருந்த படித்த முஸ்லிம்கள் இதனை மறுத்தனர். அறிஞர் சித்திலெப்பையின் மாணவரான ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் ‘On ethnology of Ceylon Moors’ என்றொரு பதில் கட்டுரையை எழுதினார். இதில் பொன். இராமநாதனின் கட்டுரையிலிருந்த வாதங்களை மறுத்துரைத்தார்.

குறிப்பாக முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல, அறபுப் பூர்வீகம் கொண்டோர் என வாதிட்டார். அப்போதிருந்த சட்ட நிரூபண சபையில், முஸ்லிம்களுக்கென்று தனியான பிரதிநிதித்துவம் தேவை என்ற அரசியல் கோரிக்கையோடு, இந்த வாதம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தது. அந்தவகையில் இதற்கு அரசியல் பரிமாணமும் (Political dimension) இருந்தது.

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் Nuhman Mohamed Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity என்ற நூலில், இதுபற்றிப் பேசியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக, இதுவே முஸ்லிம் அறிவுஜீவிகள் மத்தியிலும் பொதுத் தளத்திலும், செல்வாக்கு மிக்க கருத்துநிலையாக ஆழப் பதிந்திருக்கிறது.

எழுதப்பட்ட வரலாறுகளின் வரலாற்று வரைவியலை, மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன்னே உள்ளது.

இது நமது உண்மையான வேர்களைத் தேடுவதற்கான முனைப்பின் வெளிப்பாடாகும்.

இலங்கை முஸ்லிம்களின் அறபுப் பூர்வீகம் பற்றிய வாதம், மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதே எனது பார்வை.

“தந்தையர் அறபிகள், தாய்மார் சுதேசிகள்” என்ற பொதுக் கருத்தும் இந்தப் பின்புலத்திலேயே உருவாகி நிலைபெற்றுள்ளது.

உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் பன்முகப் பாங்கான பூர்வீகம் கொண்டவர்கள். இந்தக் கலப்புப் பூர்வீகம் (Mixed origin) தொடர்பில் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்பட வேண்டும்.

அறேபியர், வட ஆபிரிக்கர்கள், கிழக்காபிரிக்கர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர், பாகிஸ்தானிகள், வங்காளிகள், இந்தியர்கள், தென்கிழக்காசியர்கள்
(இந்தோனேசியா/மலேசியா), சீனர்கள் என்று இலங்கை முஸ்லிம்களது பூர்வீகம் விரிந்து நோக்கப்பட வேண்டும்.

இப்படிச் சொல்லும்போது இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டும். பெருவாரியான இலங்கை முஸ்லிம்களை விதேசிகளாகவும் வந்தேறு குடிகளாகவும் அடையாளப்படுத்துவது எந்தளவு சரியாக அமையும்?

இலங்கை மண்ணிற்கே உரிய பூர்வ குடிகளான இங்குள்ளோர் மதம் மாறியதன் விளைவாக, இலங்கை முஸ்லிம்களில் கணிசமானோர் சுதேசிகள் என்ற கருதுகோள் (Hypothesis) மிகவும் கருத்தூன்றி ஆராயப்பட வேண்டும்.

பொன். இராமநாதனின் வாதம் முற்று முழுக்க தமிழராகவே இலங்கை முஸ்லிம்களை நோக்கத் தூண்டுகிறது. அது தவறான வாதம்.

அதேவேளை இலங்கையின் ஆதிக்குடிகள், சிங்களவர், தமிழர் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவியமையால் முஸ்லிமான முன்னோர்களும் கணிசமாக உள்ளனர்.

தென்னிந்தியர்கள் – குறிப்பாக மலையாள முஸ்லிம்களும் தமிழகக் கடலோரக் கிராம முஸ்லிம்களும்- இலங்கை முஸ்லிம்களது பூர்வீகத்தோடு மிகவும் நெருக்கமான தொடர்புகள் கொண்டவர்கள்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரம்பரை அலகுகள் தொடர்பான ஆய்வுகள் சில, இதனை வலுப்படுத்துகின்றன. ‘இலங்கையில் சிங்களவர்கள்’ என்ற நூலில் பக்தவத்சல பாரதி இதை சான்றாக எடுத்துக் காட்டுகிறார்.

உடற் தோற்றம், பரம்பரை அலகுகளை ஆராய்வதன் மூலம், இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

நமது நாட்டினது வரலாறு பெருமளவு அரசியல் வரலாறாகவே (Political history) இருந்து வந்துள்ளது. அதனால்தான் சமூக வரலாற்று (Social History) நோக்கில் நமது கவனத்தைக் குவிக்க வேண்டியுள்ளது.

அறபுப் பூர்வீகத்தை நான் மறுக்கவில்லை. எனது தந்தை வழிப் பூர்வீகம் கூட, யெமன் தேசத்தோடு நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறது. ஆயினும், நாம் நினைக்கும் அளவுக்கு அறபுப் பூர்வீகம் பெருவாரியானதல்ல என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கையின் சுதேச மக்கள் மற்றும் தென்னிந்தியாவுடனான இறுக்கமான தொடர்புகள் சார்ந்து, நமது ஆராய்ச்சிகளின் கவனம் திரும்ப வேண்டும். அப்போது நமது பூர்வீகம் தொடர்பான தீர்க்கமான மறுவாசிப்பு இடம்பெறும். அது புதிய வெளிச்சங்களைத் தரும்.

நடைபெறவுள்ள முஸ்லிம் வரலாற்று ஆய்வரங்கில் இந்த விடயப் பரப்பையே ஆய்வுக்காக எடுத்துள்ளேன்.

இலங்கை முஸ்லிம்களது வரலாற்றை, முதல் மனிதரான ஆதம் நபியோடு தொடங்கும் ஒரு போக்கும், அறேபியரோடு தொடங்கும் இன்னொரு போக்குமாக, இருவகை வரலாற்று நோக்குகள்/ போக்குகள் உள்ளன.
நான் மூன்றாவது நோக்குநிலையொன்றை முன்வைக்க முயல்கிறேன் – விரும்புகிறேன்.

இது குறித்து கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரியோடும் இன்னும் சிலரோடும் உரையாடி இருக்கிறேன்.
எனக்கு நெருக்கமான சிலரிடமும் இது குறித்துப் பேசி வந்திருக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறேன். இது நிச்சயமாக வாதப் பிரதிவாதங்களை உருவாக்கும். அதை முன்னுணர்ந்தே இக் கருத்துகளை முன்வைக்கிறேன். இது காலம் வேண்டி நிற்கும், அவசியமான வாதம் என்பதே எனது நம்பிக்கை

வரலாற்று ஆய்வரங்கில் இன்னும் விரிவாகப் பேசலாம்; உரையாடலாம்; வாதிக்கலாம்.

பேரன்புடன்
சிராஜ் மஷ்ஹூர்
07.04.2023

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top