Article

இலங்கைச் சோனகர் தமது வரலாறு பற்றிப் பெருமிதமடைய முடியும். – ஸைரஸ் டீ . எப் . அபயகூன்

இலங்கைச் சோனகர் தமது வரலாறு பற்றிப் பெருமிதமடைய முடியும். - ஸைரஸ் டீ . எப் . அபயகூன்

1949 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் திகதி – த சிலோன் ஒப்சவர் – ஞாயிறுப் பத்திரிகையில்  – ஸைரஸ் டீ . எப் . அபயகூன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ்வடிவமே இவ் வரலாற்று ஆவணமாகும்.

இன்று நாடு முழுவதும் இலங்கைச் சோனகர் தங்கள் முதல் தேசிய தினத்தைத் தமக்கே உரித்தான முறையில் கொண்டாடுகின்றனர். சோனகரின் ஆரம்பக் குடியேற்ற வாசிகள் அரேபியாவிலிருந்து வந்தனராயினும் அகில இலங்கைச் சோனகர் சங்கம் தமக்கென ஒரு தனித்துவமும் பெயரும் இருப்பதைப் பறைசாற்றுகின்றது .

இலங்கைச் சோனகரின் ஆரம்பத்தை கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை அறியக் கூடியதாக இருக்கின்றது.

அப்துல் மாலிக் பின் மர்வானின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிய சில அறபியர் இலங்கையை (செரந்தீப்) அடைந்து, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், கொழும்பு, பேருவலை, காலி ஆகிய பிரதேசங்களிற் குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொண்டனர். மாக்கல எனும் கப்பல்துறை, சிங்களவர்கள் நன்கு அறிந்திருந்த ஓர் இடமாதலால் புதிதாக வந்தவர்களை அவர்கள் “மரக்கல”, எனப் பெயரிட் டனர். தமிழர்கள் அவர்களைச் “சோனகர்” என அழைத்தனர். ஹிஜ்ரி 402 இல் அரேபியாவிலிருந்து இன்னொரு குடி பெயர்ச்சி ஏற்பட்டது. சிங்கள மன்னர்கள் சோனகர்களை மோசமாக நடாத்தவில்லை. எனவே, அவர்களிற் பெருந் தொகையானோர் பேருவலையை அடைந்தனர். அவர்களின் முன்னேற்றத்தை எவரும் தடுக்கவில்லை. கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை அவர்கள் தம்மை வர்த்தகத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்டனர். கி. பி. 1350 ஆம் ஆண்டளவில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வருமானவரி செலுத்தியதன் மூலம் அவர்கள் மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு சமுதாயமாக விளங்கினர்.

பேருவலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது அப்பாஸிய காலத்தினதான பாரசீக நாணயங்கள் புதுமையான பொறிப்புக்களைக் கொண்டனவாக விளங்குகின்றன . உதாரணமாக,

“அள்ளாஹ்வின் அருளாலே அப்பாஸ் ஸானி பெயராலே சாம்ராஜ்ய நாணயமே பாரெங்கும் பரந்ததே ” என்னும் வரிகள் அந்நாணயங்களில் காணப்பட்டன.

ஏறக்குறைய இக்காலகட்டத்தில் (கி. பி. 1350) மரிக்னொல்லி என்பார் குப்லாய்கானின் தர்பாரிலிருந்து உரோமாபுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பேருவலைக்கருகாமையில் அவரது கப்பல் நொறுங்கியது. அவர் “வெறுக்கப்பட்ட சரஸனான” சோனகத் தலைவன் கோயா ஜானால் கொள்ளையடிக்கப்பட்டார். கோயா ஜான் பெரும் ஐசுவரியங்களுக்கு அதிபதி என்றும் முறையற்ற விதத்திலேயே அதிகாரத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. பரெவி சந்தேசய எனும் காவியமானது 15 ஆம் நூற்றாண்டில் பேருவலையில் வாழ்ந்த சோனகர் கொடிய, கட்டுப்பாடற்ற மக்கள் எனக் குறிப்பிடுகின்றது.

பெரும் வருகை

வரலாற்றின்படி சோனகரின் மிகப் பெரும் வருகையானது முதலாம் புவனேகபாகுவின் எட்டாம் ஆளுகை ஆண்டான கி. பி. 1280 இலே நடைபெற்றது. இந்த மன்னன் அப்புதியவர்கள் புத்தளத்திலிருந்து பேருவலை வரையிலான கடற்கரையோரக் கிராமங்களில் குடியமரவும் “நைதே” குலப் பெண்களை மணக்கவும் அனுமதியளித்தான்.

அதுகாலவரை சோனகர் வருகையை எவரும் எதிர்க்க வில்லை. ஆனால் , 1505 இல் ஒரு பெருந்தொகையான இந்தியக் கரைச்சோனகர் பலாத்காரமாக சிலாபத்திலிருந்து உள்நோக்கி ஊடுருவல் செய்ய முயன்றபோது ஒன்பதாம் பராக்கிரமபாகுவால் தாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டனர்.

ஆரம்ப இலங்கைச் சோனகர் பெருகினார்களெனினும் அவர்கள் பின்னர் அறபுப் பெண்மணிகளை அழைத்து வந்தனரா, இல்லையா என்னும் விபரங்கள் பதிவுகளில் பதியப் படவில்லை. ஆனால், “பர்தா” முறை காரணமாக இது நடைபெற்றிருக்கும் என்பது சந்தேகமே. இனப்பாத்தியதை எவ்வாறாயினும் அவர்கள் வழித்தோன்றல்கள் ஒரு வரலாற்றுப் பின்னணிக்கு உரிமை கொண்டாட முடியும்.

இலங்கைச் சோனக அதிகாரிகள் பெரும்பாலும் “ஹிமி” எனும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தனர். இது அனோமாக புராதன அறபு இராச்சியமான ‘ஹிமியர்’ அல்லது ‘யெமன்’ என்பதுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம். சிங்களச் சோனக மன்னனான வஸ்து-ஹிமி என்பான் இரண்டாம் புவனேகபாகு (கி . பி . 1288-90) எனப் பெயர் கொண்டு இலங்கையை ஆண்டதை நாம் அறிவோம்.

சோனக மன்னன்

முதலாம் புவனேகபாகுவுக்கும் (கி.பி. 1272 – 1283) அவனுடைய இரண்டாவது இராணியான, குருநாகல் நகருக்கருகாமையில் உள்ள மெதகெட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரபுத்துவ சோனகப் பெண்மணி (யகட தோலிய)க் கும் பிறந்தவனே வஸ்து – ஹிமியாவான் எனக் ‘குருநாகல் விஸ்தரய’ கூறுகின்றது.

மகாவமிசம் அம்மன்னனை, “அறம் செய்வதன் மூலம் நன்மை பெற விழைந்த ஓர் ஆட்சியாளன்” எனவும், இவன் இஸ்லாம் மதத்தைத் தழுவிய ஒருவனாக விளங்கினாலும் தினமும் ஆயிரம் பௌத்த பிக்குகளுக்குத் “தானம்” வழங்குவதைத் தன் கடமையாகக் கொண்டான் எனவும் வர்ணிக்கிறது. மகாவமிசம் பின்வருமாறு பதிந்துள்ளது : “மன்னன் ஆண்டுதோறும் தனது முடிசூட்டு விழாவை ஒரு மன்னனின் கௌரவத்துக்கே உரித்தான முறையில் கொண்டாடினான். அதன் பின் மதச்சடங்கு விழாவொன்றையும் மிக மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நடாத்தினான். அதன் மூலம் வெற்றி வீரனான தனது மதத்தின் பெருமையை ஊரறியச் செய்தான்.”

ஒரு அரசகுமாரி (ரன் தோலிய) மூலம் பிறந்தவனான, மன்னனின் மாற்றாஞ் சகோதரனுக்கு விசுவாசமாக விளங்கிய சிங்கள அமைச்சர்கள் மன்னனது இரண்டாவது ஆட்சியாண்டில் அவனை ஒரு வைபவத்துக்கு அழைத்தனர். அவ் வைபவம் இப்போதைய குருநாகல் கச்சேரிக்குப் பின்புறமாய் அமைந்துள்ள, ஓங்கி நிற்கும் ‘அத்தாகல’ என்னும் கற்பாறையின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் வீற்றிருந்தபோது துரோகிகளான அவனுடைய அரசவையினர் அவனைக் கற்பாறையின் பள்ளத்தில் தள்ளி அவனுக்கு இறப்பைத் தேடிக் கொடுத்தனர். உடனே அவன் ஒரு பூதமாக (கலே பண்டார) மாறி அவனின் கொலையாளிகள் அறுபதின்மரைக் கொன்றான் எனப் பரம்பரைக் கதையொன்று கூறுகின்றது. மன்னன் தனது பயங்கர முடிவை எய்திய இடம் இன்று ‘கலே பண்டார புனித ஸ்தலமாக’ விளங்குகின்றது. மன்னனது ஆத்மாவைச் சாந்தப்படுத்தினால் இங்கு அற்புதங்கள் நிகழக் காணலாம் என நம்பப்படுகின்றது.

1890 இல் குருநாகலைச் சேர்ந்த எப் . எம் . மொடர் பின் வருமாறு எழுதுகிறார் : “வெள்ளையுடையணிந்து சாம்பர் நிறப் புரவியொன்றின் மீது சவாரி செய்யும் ஒரு மனிதனது அவதார உருவத்தை இந்தக் கற்பாறைச் சுற்றுப்புறத்தில் இடைக்கிடை நடுநிசியில் காணலாம் என இற்றைவரை நம்பப்படுகின்றது. அது வஸ்துஹிமியின் ஆவியெனக் கூறுகிறார்கள்.”

புரட்சியாளருக்கு உதவி

1470-71 ஆம் ஆண்டின் சிங்களப் பெரும் புரட்சியில் குறாகம ஹிமி எனும் செல்வாக்கு மிக்க சோனகத் தலைவர் ஒருவர் புரட்சித் தலைவரான சிரிவர்தன பத்திராஜ என்பவருக்கு ஆறாம் புவனேகபாகுவின் ஆட்சியை எதிர்க்க உதவியளித்தார். களுகங்கையிலிருந்து வளவை வரையும் வெலிகமையிலிருந்து கோட்டேயின் சுற்றுப்புறம் வரையும் சிறிவர்தனவின் படைகள் தோற்கடிக்கப்படாமல் இருந்தன. மன்னனின் இளைய சகோதரன் வெலிகமையில் படைகளைக் குவித்து குறாகம ஹிமியைப் பின்புறமாகத் தாக்கினானாயினும் ஒரு பொது மன்னிப்பை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மன்னனுக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான் சமாதானம் ஏற்பட முடிந்தது. வெலிகம இன்றும் ஒரு பிரசித்தி வாய்ந்த சோனகப் பட்டினமாகும்.

இலங்கைச் சோனகர் பணிக்கர் (யானை பிடிப்போர்) களாகவும், பட்டு, மாணிக்கக் கற்கள், பாக்கு மற்றும் பொருள்களில் சிறந்த வர்த்தகர்களாகவும் விளங்கி வந்துள்ளனர் . ஆண்டுதோறும் அவர்கள் மக்க மா நகருக்குக் குறைந்தது ஒரு ‘டசின்’ யானைகளை அனுப்பி வைத்தனர். அவர்கள் இரத்தினக் கல் வர்த்தகத்தை விருத்திசெய்து இரத்தினபுரியிலிருந்து பலாங்கொடை வரை குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். பலாங்கொடையில் குருகல என்னுமிடத்தில் மக்காவிலிருந்து வருகைதந்த மகானான ஒரு சோனக ஞானி (தப்தர் ஜெய்லானி)யினது அடக்கஸ்தலம் இருந்தது. அந்த அடக்கஸ்தலம் ஸ்ரீ பாத மலையைப் போன்ற ஒரு யாத்திரை ஸ்தலமாக விளங்கியது.

போர்த்துக்கேயர் இலங்கையைக் கண்டுபிடிப்பதற்குக் காரணம் சோனகராவர் சோனகராவர். பெறுமதி வாய்ந்த இலங்கை வாசனைத் திரவியங்கள் நிரம்பிய சோனகரின் கப்பல்களைப் போர்த்துக்கேயர் துரத்தியபோது கடும்புயலில் சிக்குண்டு அவர்கள் இலங்கைக்குத் தள்ளப்பட்டனர்.

இலங்கையைக் கைப்பற்றி ஆளப் போர்த்துக்கேயர் இங்கு பின்னர் வந்தபொழுது சோனகர் ஆறாம் விஜயபாகு மன்னன் பக்கம் நின்று போரிட்டனர். கோட்டே நகரின் சுற்றுப்புறத்தில் அவர்கள் ஒரு மரக்கம்ப வேலியை அமைத்து உட்புறத்தில் “போர்த்துக்கேயரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு அனேக இரும்புப் பீரங்கிகளையும் பொருத் தினர்.”

போர்த்துக்கேயர் செல்வாக்கடைந்ததும், முடியுமான அளவு அவர்கள் சோனகரைக் கொலைசெய்தனர். அதாவது, “தைரியத்துடனும் முன்யோசனையுடனும் செய்யப்பட்ட” ஒரு படுகொலையென மென்ஸீஸ் என்பார் பதிவு செய்துள்ளார். தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் கண்டி மன்னனால் (செனரத் பண்டார) வரவேற்கப்பட்டனர். ‘அவர்களில் உடல் வலிமை மிக்கோர் மட்டக்களப்புப் பாதுகாப்புப் படைக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒட்டகப்படை

இலங்கைச் சோனகர் சிறந்த படைவீரர்களென்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும் அவர்கள் பெரும் சிங்களத் தரைப்படையின் ஒரு பிரிவினராவர். 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற வெல்லவாயக் கணவாய்ப்போரில் அவர்களது ஒட்டகப்படை (ஒட்டு பந்திய) ஒரு விசேட இடத்தைப் பெற்றது. இரண்டாம் இராஜசிங்ஹ (கி.பி. 1634-1684) மன்னன் தனது அரச காணிக்கைச் சீலையில் இந்தப் படையை வரைந்து ஹங்குரன்கெத்த மகா தேவாலவுக்குச் சமர்ப்பித்தான். அவன் அவ்வாறு செய்தது வெல்லவாயவில் அவன் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றியைக் கௌரவிப்பதற்காகவாகும்.

மன்னாரில் இரண்டு “போப்” மரங்கள் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் , அம்மர இலை , ஒட்டகத் தீனியாக உபயோகிக்கப்படுவது வழக்கம். இம்மரங்களில் ஒன்று மன்னார் நகரின் மத்தியில் காணப்படுகின்றது . மற்றது , யாழ்ப்பாண வீதியில் மன்னாரிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள பாப்பாமோட்டை எனும் இடத்தில் காணப்படுகின்றது . மேலும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன், சலாவத்துறை என்னுமிடங்களினூடாகச் செல்ல வேண்டிய அரிப்பு என்னுமிடத்தில், உபயோகிக்கப்படாத சோனக காவற் கோபுரமொன்றும் கடலை நோக்கி இருப்பதைக் காணமுடியும்.

வூட்டர் சூட்டன் என்பார் எழுதுகிறார் : “ஒல்லாந்த அட்மிரல் ஜோரிஸ் வான் ஸ்பில் பேகன், மட்டக்களப்பில் இறங்கியுள்ளான் எனக் கேள்விப்பட்டவுடனே இரண்டாம் விமலதர்மசூரிய மன்னன் பெரிதும் மகிழ்ச்சியுற்று துருக்கியர், சோனகர், சிங்களவர் ஆகிய வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்களான ஆயுதந்தாங்கிய ஏறக்குறைய ஆயிரம் பேரை அக்கௌரவமிக்க பிரமுகரை வரவேற்க அனுப்பி வைத்தான்.”

ஒரு குறிப்பிட்ட அளவு உப்பை ஆண்டுதோறும் “லுனுபத்த” திஸாவவுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கமுகின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைத் திறைசேரிக்குச் செலுத்த வேண்டுமென்றும் ஆன ஓர் உடன்பாட்டின் மீது கண்டிய மன்னர்கள் சோனகர்களுக்குக் கடலோர மாகாணங்களுடன் வர்த்தகம் செய்ய ஒரு தனிப்பட்ட உரிமையை அளித்தனர்.

சோனக வர்த்தகர்கள் கடலோர மாகாணங்களில் அனுமதிப்பத்திரமின்றிச் சஞ்சரிக்க இடமளிக்கப்படவில்லையென்பதைச் சுவடிச்சாலையில் காணப்படும் ஒல்லாந்த தஸ்தாவேஜுகள் எடுத்துக்காட்டுகின்றன. அந்த அனுமதிப் பத்திரங்களை அரண்களுக்குப் பொறுப்பாகவுள்ள முதலியார்களிடம் காட்டவேண்டியிருந்தது.

கற்பிட்டிய, புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கப்பல் துறைகளை அடைந்த சோனகர், சரக்குக்களால் – பெரும் பாலும் கமுகால் – நிரம்பி வழிந்த தங்கள் எல்லா வள்ளங்களிலும் செந்நிறத்தில் சிங்க வடிவத்தைக் காட்டும் வெள்ளைக் கொடியொன்றைப் பறக்கவிட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

எனவே, சுறுசுறுப்பான முன்னோர்களின் வழித்தோன்றல்களான இன்றைய சோனகர் சிங்கக் கொடியை விரும்புகிறார்கள் என்பதில் என்ன புதுமை இருக்கிறது ? அது அவர்கள் இலங்கையில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து அவர்களது சொந்த வரலாற்றின் ஒரு பகுதியாகவே அமைகின்றது.

(த சிலோன் ஒப்சவர் , ஞாயிறு , காலைப் பதிப்பு ; 1949 ஒக்ரோபர் 23)

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top