Book

நூலறிமுகம் : சிங்கள பண்பாட்டிலிருந்து . . .

நூலறிமுகம் : சிங்கள பண்பாட்டிலிருந்து . . .

புராதன சிங்களப் பண்பாட்டிலிருந்து நாம் அறியாதன குறித்து ஓர் உசாவல்.

நூலாசிரியர் : என். சரவணன்.

நூலறிமுகம் : ஆய்வாளரும் நூல் விமர்சகருமான M.M.A.BISTHAMY அவர்களின் பன்முக மொழிநடையில்…

சரவணின் நூல்கள் அனைத்துமே வித்தியாசமானவை. அதற்கு என்னிடம் பல காரணிகள் உண்டு.

நூலுக்கு அவர் தெரிவு செய்யும் தலைப்பு.

நூலின் அட்டைப்படம்.

நூலை வெளியிடும் குமரன் இல்லத்தின் புத்தக வெளியீட்டில் உள்ள நேர்த்தி
நூலின் உள்ளடக்கம்.

உள்ளடக்கத்தை உறுதி செய்யும் உறுதியான உசாத்துணை

சரவணனின் எழுத்துக்களில் எப்போதும் மர்மங்கள் புலப்படும். எல்லோரும் பேசும் விடயங்கள் இருக்காது. பலரும் வேண்டுமென்றே தவிர்த்த, பேச மறுத்த தயங்கிய, கைவிட்ட சிக்கலான அமசங்களையே அவர் பேசு பொருளாக மாற்றுவார். அவரது எல்லா நூல்களிலும் இந்த அதிசய பண்பு இழையோடி இருக்கும்.

வாசகர்களை அப்படியே ஈர்த்து விடும் ஈர்ப்பு அட்டைப்படத்துக்கு உண்டு. அவரது அறிந்தவர்களும் அறியாதவையும், கள்ளதோணி, கொலை, 1915 கண்டி கலவரம், தலித்தின் குறிப்புகள், போன்றன எப்போதுமே தொடர் வாசிப்பை தூண்டும் அரிய அபூர்வ வரலாற்றுத்தகவல்களை கொண்டவை. மிக அண்மையில் எழுதிய கட்டுரையான தஹனாயகவின் கோவணமும் அரசியலும் கூட மிகவும் ஆழமானது. அகன்ற பார்வை கொண்டது.

ஈழத்து இலக்கியமாகட்டும், சமய ஆய்வுகளாகட்டும், வரலாறாகட்டும் அரசியலாகட்டும், இனத்துவ ஆய்வுகளாகட்டும், இன்னொரு தளத்தில், கோணத்தில் இருந்து நியாயமான பின்புலத்துடனும் தேடல் மற்றும் வாசிப்பு சகிதமான ஆய்வுப்புலத்தில் இருந்து எழுதப்படுகையில் அதற்கு கனதியான பெறுமானம் உண்டு. அந்த இடத்தில் தான் சரவணனின் எழுத்துக்கள் முக்கியம் பெறுகின்றன.

ஊடகவியலாளராக, செயற்பாட்டாளராக ஆய்வாளராக வரலாற்றாசிரியராக அவரை நோக்க வேண்டியுள்ளது. பன்முகப்பட்ட, பரந்த தளத்தில் நின்று தான் அவரது எழுத்துக்களை வாசிக்கவும் புரியவும் விமர்சிக்கவும் வேண்டும்.

கல்விப்புலத்தில் ஒடுக்கு முறையை எதிர்த்து போலோ பிரேரி வெளிக் கிளம்பியதை போல தான் சரவணின் எழுத்தும் மாற்றுத்தளத்தில் இருந்தே எழுதப்படுவதால் அதனை புரிந்து கொண்டுதான் வாசிக்கவும் வேண்டும்.

அவரிடம் ஏலவே படிந்துபோன முன்முடிவுகள், பார்வைகள் இல்லை, நிகழத்தக்க சாத்தியக்கூறுகள் குறித்தும் அவரது எழுத்து விசாலிப்பதை உணரமுடியும். எனக்கு புரியும் வார்த்தையில் சொல்வதானால் அவர் ஏலவே யாரோ பயணித்த வரைந்த பாதையில் பயணிப்பதில்லை. தனக்கென தனித்துவமான பாதையை வரைந்து பயணிக்கின்றார். வெற்றிடங்களை நிரப்பி ஓட்டுப் (patch ) போடும் பணியை அவரது எழுத்துக்கள் ஊடறுப்பதில்லை.

வரலாறற்ற இடங்களை வரலாறாக மாற்றுகிறார். இருட்டடிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார். சிதம்பர ரகசியங்களை வெளிக்கொணர்கிறார். அவரது எழுத்துக்கள் பற்றி இப்படி அனேகமாக சொல்லப்பட முடியும்.

அவரது இந்த நூலும் இலங்கை வரலாற்றில் கொடி கட்டிப் பறந்த செங்கடகல ராச்சியத்தின் உயர்குலத்தின் சமூகங்களில் காணப்பட்ட சாதியத்தின் செல்வாக்கு, ஊடுருவல், தாக்கம், அழுத்தம், பெண்களின் சமூக நிலை, பெண்கள் கையாளப்பட்ட விதம், பண்பாட்டு பழக்க வழக்கங்கள் மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள், வழக்காறுகள், இசை, விவாகம், விவாக முறைமைகள், பாலியல் அது சார்ந்த விவகாரங்கள், வழக்குகள், புரையோடி வேர்விட்ட அதிகார இழுபறிகள், போட்டிகள், பொருளியல், பண்பாட்டியல் , சமூகவியல் பிரதான மற்றும் உப கூறுகள் இங்கு அலசப்படுகின்றன.

13 தனித்துவமான தலைப்புகளில் சிங்கள பண்பாட்டின் வேர்களை தேடிய பயணமாக இந்நூல் உள்ளது. பன்மைத்துவ இனங்கள் மொழிகள் வாழும் நாட்டில் 3 தசாப்தம் நீடித்த நெருக்கடியான யுத்த சூழமைவுக்கு மொழியும் இனங்களின் பண்பாட்டியல் கூறுகளை சமய விழுமியங்களை புரியாமையும் புரிந்தும் ஜீரணிக்க தயாரின்மையும் அரசியல் காய் நகர்த்தல்களுமே பிரதான காரணம்.

இத்தகைய விடுபடல்கள் காரணமாகவே இனங்களுக்கிடையில் முறுகலும் மோதலும் பகைமையும் வேர்கொண்டன. தமிழ் முஸ்லிம் உறவாகட்டும், தமிழ் பௌத்த உறவாகட்டும், தமிழ் சிங்கள உறவாகட்டும் பெருத்த விரிசல் காணப்படவே செய்கின்றன. கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் கூட முஸ்லிம் கிறிஸ்தவ உறவில் விரிசலை நிகழ்த்த அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகமாகும்.

இந்த விரிசலை தணிக்க ஒவ்வொரு மதமும் பண்பாடும் அவரவர் மொழியில் கற்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். அல்லது சகோதர மொழிகளை பண்பாடுகளை கற்க வேண்டும். அதன் பிறகு தான் சமாதானமும் சகவாழ்வும் மலரும். சுபீட்சம் உருவாகும்.

புனித திருமறை சிலாகித்து சொல்வது போல “ ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து உங்களை படைத்து குழுக்களாக கோத்திரங்களாக வாழ வைத்திருப்பது பரஸ்பரம் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளத்தான்” (ஹுஜராத்: 13.)

சரவணின் 13 தலைப்புக்கள் கூட இலங்கையின் கடந்த கால சிங்கள பண்பாட்டை விளங்க உள்ள 13 அடிப்படை அமசங்களாக உள்ளதை அவதானிக்கலாம்.
சரவணனின் அருமையான முன்னுரையுடன் கோபிநாத் தில்லைநாதனின் அணிந்துரையும் நூலுக்கு அணி சேர்க்கிறது.

சிங்கள சமூக அமைப்பில் அல்லது தெற்காசியாவில் கன்னித்தன்மையை Virginity பரிசோதிக்கும் ஒரே நாடு இலங்கை தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார். துணைக்கு சிரியாணி பஸ்நாயகவின் ஆய்வுகளை முன்வைக்கிறார். பெண்களின் பால்நிலை, சுகாதாரம், ஆரோக்கியம், குறித்து அவர் அதிகமே ஆய்வு செய்துள்ளார். இத்தகைய கற்பொழுக்க சோதனை குறித்து ஆழமாக பேசுகிறார் சரவணன்.

சிங்கள சமூகத்தில் கொவிகம எனப்படும் உயர் குழாத்தினர் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தமிழ் சமூகத்தில் வெள்ளாளருக்கு சமன். அத்துடன் அதன் கிளை வம்சங்களும் இங்கு பேசப்படுகின்றன. கன்னித்தன்மை பரிசோதனையை நிகழ்த்துவோர் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியினரே. இது தமிழ் மரபில் வண்ணார் சாதிக்கு ஒப்பானவர்கள் என்கிறார் சரவணன். கன்னிப் பரிசோதனை சடங்கு நிகழும் விதம், அதற்கான சம்பிரதாயங்கள் குறித்து தெளிவாக பேசுகிறார். காட்சிப்படங்களும் நூலுக்கு இன்னும் வலிமை சேர்க்கின்றன.

அடுத்து பண்டைய சிங்கள சாதியத்தை பேணிய கோத்திர சபையின் பணிகள் அலசப்படுகின்றன. தீண்டாமை எனும் கொடுமை எப்படி அதிகாரத்தின் பிடியில் அமுலாக்கப்பட்டது என்பதே இங்கு அலசப்படுகிறது. அது பலமான இயக்கமாக செயற்பட்ட விதம் குறித்து சரவணன் ஆய்வு செய்து மர்மங்களை களைகிறார்.

ஆங்கில காலனியம் தலைதூக்க முன் நிலவிய கோத்திர அமைப்பு (wariga) குறித்தான தகவல்களாக இரண்டாம் அத்தியாயம் அமைந்துள்ளது.

அடுத்து மிக முக்கியமான தலைப்பு. சற்று கூச்சமாக இருந்தாலும் ஜாஹிலிய காலத்தில் காணப்பட்ட இஸ்லாத்துக்கு முந்திய திருமண முறைக்கு ஓரளவு நிகரான முறை குறித்து பேசுகிறது. இஸ்லாம் அனுமதிக்காத இம்முறை கவனிக்கத்தக்கது එක ගේ කෑම எனப்படும் ஒரே வீட்டில் புசித்தல் எனும்
பலகணவர் முறை குறித்து இது பேசுகிறது. ஏன் இந்த வழமை. அதற்கான நியாயங்கள் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் குறித்து இங்கு விலாவாரியாக பேசப்படுகிறது. Polygyny polyandry குறித்து பேசப்படுகிறது.

இஸ்லாமிய சமயத்தில் மிக அரிதாக அவகாசம் வழங்கப்படும் பலதார மணத்துக்கும் இந்த முறைக்கும் சட்டங்களிலும் விதிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த விடயத்தில் கூட நீங்கள் அப்படி ஒன்றுக்கு மேற்பட்டவரை சட்டபூர்வமாக மணம் முடிப்பது கூட சிரமமானது. உங்களால் இருவருடன் நீதமாக நடந்து கொள்ள முடியாமல் போகலாம் அப்படி நிகழ்ந்தால் மறுமையில் ஒரு பக்கம் சரிந்தவராகவே இறைவன் முன் தலை குனிவுடன் வர வேண்டி வரும் என்கிறது இஸ்லாம்.

அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பாக மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா எனும் தலைப்பு உள்ளது. அந்த புளியந்தீவு கோட்டை குறித்தான அரிய வரலாற்று தகவல்கள் இங்கு பேசப்படுகின்றன.

அடுத்து சிங்கள இசை மரபில் பிரதான அம்சமான பைலா குறித்து 5 ம் தலைப்பு ஆராய்கிறது. போர்த்துக்கேய ஆபிரிக்க சிங்கள சமூகங்களின் இணைப்பில் தான் இந்த பைலா உருவாகியுள்ளது.

6 ம் தலைப்பு வேடுவர்கள் குறித்த ஆய்வாக உள்ளது. இலங்கை இனவியல் வரலாற்றில் செலிக்மனும் அவரது பாரியார் பிரண்டா சாராவும் 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கி இருந்து மேற்கொண்ட மானுடவியல் ஆய்வு வேடுவர் என்ற தலைப்பில் நூலாகவும் உள்ளது. நிஸ்ஸங்க பெரேரா நூலை சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்துள்ளார்

7 ம் தலைப்பு பமுனு குழைய சிங்கள பார்ப்பனியமா எனும் தலைப்பு சிங்கள பிராமணர்களை குறிக்கும் இப்பதத்தின் பின்னால் உள்ள மர்மங்களை சரவணன் இங்கு ஆய்வு செய்கிறார். இந்தியாவில் போல பிராமணம் கோலோச்ச இலங்கை பௌத்த அரசியல் அதிகாரம் இடம் தராமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரபல பேரினவாதியான நலிந்த சில்வா இத்தகைய சொல்லாடலுக்கு நவீன அர்த்தம் ஒன்றை பரப்பிவந்துள்ளதாக சரவணன் கூறுகிறார். அறிவுச்சமூகமா? ஆளும் வர்க்கமா எனும் வாதம் இங்கு சிங்களவர்களிடையே சூடு பிடித்துள்ளதை சுவைபட கூறுகிறார் நூலாசிரியர்

அடுத்த அத்தியாயம் “ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை எனும் பகுதி குறித்து சுவாரஷ்யமாக பேசுகிறார்.

நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் இருந்தே இவர்களது ஆதிக்கம் காணப்பட்டாலும் கண்டி ராஜ்யத்தில் தான் இவர்களது செல்வாக்கு பரவலடைந்தது. அதிகாரமும் சொத்தும் செல்வாக்கும் ஒரு சேரப்பெற்ற சாதியே இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

சிங்கள ராஜ்யத்தில் நாயக்கர்களின் மேலோங்கல் எப்படி அமைந்தது என்பது குறித்தும் பேசுகிறார்.

பண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் குறித்த கட்டுரையும் கவநிக்கதக்கதிலன்கையில் பேயாட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை எனும் பெயரிலான நூலும் இங்கு அதிகம் பேசப்படுகிறது. இதில் வரும் ஓர் அத்தியாயம் தான் இங்கு மையப்பொருள். குறிப்பாக බත්වළං ගහනවා பெண்களின் ஓரின சேர்க்கை Lesbianism குறித்து பேசப்படுகிறது.

அடுத்து மக்களை பொருளாதார ரீதியாக ஆட்டிப்படைத்த வரி tax முறைகள் குறித்தான தகவல்கள் உள்ளன. சாவு வரி முதல் முலை வரி வரை அவை நீண்டன. இங்கு தான் நமது தேசிய தலைவர்களுள் வீர புறன் அப்புவும் அதற்கு எதிராக் கிளர்ச்சி செய்ய புறப்படுகிறார். கேரளாவில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் இங்கு நினைவு கூறப்படுகிறது.

பருத்த மார்பகங்களை உடைய தாழ்ந்த சாதியில் பிறந்த நாங்கிலி முலை வரி செலுத்த மறுத்து வந்ததால் முலை வரி அறவிடும் முலைக்கர்ணம் பார்வத்தியார்
அவளது வீடு தேடிச்சென்று விடுகிறார். தன்மானம் மிக்க நாங்கிலி எனும் அழகி வாழை இலையில் தன் இரண்டு மார்பகங்களையும் வெட்டி வைத்து இறந்து போகிறாள். இந்தியாவின் புலி எனப்படும் திப்பு சுல்தான் தான் மார்பக வரிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுத்து அதனை தடை செய்தார்.

சிங்கள பேரிலக்கியத்தில் நிகழ்ந்த பறங்கி மகா போர் குறித்த தகவல்கள் அடுத்து அலசப்படுகின்றன. சீதாவாக்கை ராச்சியம் விஜயபாகு கொள்ளயய போன்றவற்றுடன் தொடர்பான சரித்திரமே இது. போர்த்துக்கேயரின் அரசியல் திருகுதாளங்கள், கையாளாகாத சுதேச பொம்மை அரசர்கள் குறித்தே இது அமைகிறது. எனது தாயக நிலமான மல்வானை குறித்தான தகவல்கள் இல்லாவிட்டாலும் மல்வானை அரசன் எனப்படும் டொன் ஜொரனிமோ அசவிடோ குறித்தும் இங்கு பேசப்படுகிறது. இதுவே நூலில் உள்ள நீண்ட அத்தியாயம் சுவையான வரலாற்றுத்தகவல்கள் அடங்கிய அத்தியாயம்.

தொடர்ந்து அப்புஹாமி எனப்படும் துக்கன்னாறால மற்றும் ombudsman பற்றிய விடயம் விலாவாரியாக பேசப்படுகிறது.

அடுத்து சிங்கள பெயர்களின் சாத்திய நிலப்பிரபுத்துவ காலநித்துவ பின்புலம் குறித்து பேசப்படுகிறது. இங்கு தான் இலங்கை வரலாற்றில் அநகாரிக தர்மபால எத்தகையா வகிபாகத்தை ஆற்றினார் என்பது முக்கியம் பெறுகிறது. பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியின் தந்தையாக இவர் அறியப்படுகிறார். அவரது இனத்துவ பின்புலம் இங்கு பேசப்படுகிறது.

மொத்தத்தில் சரவணின் சிங்கள பண்பாட்டிலிருந்து இலங்கை குறித்தான பரந்துபட்ட வித்தியாசமான தேடலாக யாரும் அந்தளவு எட்டியும் பார்க்காத அம்சங்கள் பற்றிய உரையாடலாகவே அமைந்துள்ளது.

இன்னும் அறியாத பலத்தையும் அறிந்து கொள்ள அவரது அறிந்தவர்களும் அறியாதவையும் நூலையும் கைவசம் வைத்து வாசிக்கலாம்.

சரவணனுக்கு வாழ்த்துக்கள்
இறைவன் நீண்ட ஆயுளை ஆரோக்கியத்தை அவகாசங்களை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

✍🏼M.M.A.BISTHAMY

– – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top