Muslim History

கிப்லா மாற்றம் ஷஃபான் மாத வரலாற்று நிகழ்வு.

கிப்லா மாற்றம் ஷஃபான் மாத வரலாற்று நிகழ்வு.

கிப்லா மாற்றம் ஷஃபான் மாத வரலாற்று நிகழ்வு.

முஹம்மத் பகீஹுத்தீன்

ஷஃபான் மாத்தில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு கிப்பலா மாற்றமாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது கஃபாவை நோக்கியே தொழுது வந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த பின்பு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் வரையிலும் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது மதீனா வாழ் யஹுதிகள்; ‘இன்று முஹம்மத் எமது கிப்லாவை பின்பற்றுகிறார். நாளை எமது மார்க்கத்தையும் பின்பற்றுவார்.’ என்று கூறினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. எனவே இப்ராஹிம் (அலை) அவர்களின் கிப்லாவான கஃபாவை நோக்கித் தொழுவதற்கு விரும்பினர்கள். அவர்கள் எண்ணப்படி இறை கட்டளை வரமாட்டாதா என அடிக்கடி வானம் பார்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அப்போது தான் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது. ‘நபியே! உம்முடைய முகம் அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மை திருப்பி விடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் ( கஃபா ஆலயம் ) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக. இனி நீங்கள் எங்கிருப்பினும் தொழுகைக்காக அதன் பக்கமாகவே உங்கள் முகங்களைத் திருப்புவீர்களாக!’

இது தான் கிப்லா மாற்றம் குறித்து அருளப்பட்ட ஆரம்பக் கட்டளையாகும். இந்தக் கட்டளை ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் இறங்கியது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள பனூ ஸலமா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு தோழரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அங்கு ளுஹர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நடாத்தினார்கள். இரண்டு ரக்அததுக்கள் தொழுதிருந்தார்கள். மூன்றாவது ரக்அத்தில் இருக்கும் போது திடீரென வஹியின் மூலமாக இந்த வசனம் இறங்கியது. அக்கணமே நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றித் தொழுத மக்கள் அனைவரும் பைதுல் முகத்தஸை விட்டு கஅபாவின் பக்கம் முகம் திருப்பித் தொழலாயினர்.

இதன் பிறகு மதீனாவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இதுபற்றி பொது அறிவிப்புச் செய்யபட்டது. செய்தி வந்து சேரும்போது தோழர்கள் வெவ்வேறு தொழுகை நேரங்களில் இருந்தனர். நபி (ஸல்) தொழுகை நடத்திய மஸ்ஜித் பனீ ஸலமா பள்ளிவாயல் தான் ‘மஸ்ஜிதுல் கிப்லதைன்’ இரண்டு கிப்லாக்களின் பள்ளிவாசல் என இன்று அழைக்கப்படுகின்றது.

இந் நிகழ்வு யஹுதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது உள்ளங்களில் புதைந்து கிடக்கும் குரோதத்தை வெளிப்படுத்தினார்கள். பல்வேறு சந்தேகங்களையும் தூண்டி விட்டார்கள். இஸ்லாத்தின் பரம்பலை வாயால் அடக்கப் பார்க்கும் இந்த யஹுதிகள் இப்படித்தான் புலம்புவார்கள் என்பதை ஏற்கனவே அல்லாஹ் கட்டியம் கூறிவிட்டான். ‘அறிவீனர்களான யஹுதிகள், இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்தக் கிப்லாவை முன்னோக்கிக் கொண்டிருந்தார்களோ அதிலிருந்து திடீரென்று இவர்களைத் திருப்பியது எது? என நிச்சயம் கேட்பார்கள்’. என ஏற்கனவே அருள்மறை அவர்ளின் கபடமான உள்ளத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

கிப்லாமாற்றம் புகட்டும் பாடங்கள்

கிப்லா மாற்றம் வெறுமனே ஒருவரலாற்று நிகழ்வல்ல. அது பல பாடங்களைப் படிப்பினையாக தருகிறது.

அவற்றில் சில வருமாறு:

1) அனைத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காக என்று முற்றுமுழுதுமாக ஆகிவிடல்:

அற்ப ஆசைகக்கும் மனோ இச்சைகளுக்கும், மதி மயங்க வைக்கும் உலக இன்பங்களுக்கும் அடிமைப் படாமல் உள்ளத்தை தூமைப்படுத்தி அல்லாஹ்வை சார்ந்திருத்தல் இதன் முக்கிய பாடமாகும். இடத்தையோ, தேசத்தையோ கோத்திரத்தையோ புனிதப்படுத்தும் நோக்கம் முஸ்லிமிகளிடம் கிடையாது. மனைவி, மக்கள், சொத்துசுகம், ஆசாபாசம், பட்டம் பதவி, விருப்புவெறுப்பு அனைத்தும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன்னால் தூக்கியெறியப்படும். எனவே கிப்லாமாற்றம் பூமியில் ஒரு இடத்தைப் புனிதப் படுத்துவதல்ல. மகத்துவமிக்க அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதால் அது புனிதம் பெறுகின்றது. எதுவானாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிதல் அவனுக்காக எதையும் செய்தல் என்பதே ஒவ்வொரு முஃமினின் மூச்சாகஇருக்கவேண்டும்.

2) தனித்துவம் பேனுதல்:

கிப்லாமாற்றம் முஸ்லிம் சமூக்த்தின் தனித்துவம் பேனும் நிலைக்கு சிறந்த உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட சாராரைத் திருப்திப்படுத்தும் நோக்கமோ அல்லது முன்னோரை கண்மூடித்தனமாக பின்பற்றும் பழக்கமோ இன்றி தனித்துவமான சிறப்புப் பண்பை பெற்ற சமூகமாக இறுதித் தூதரின் உம்மத்தை அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான்.

3) சோதனைகளுக்கு முகம் கொடுத்து பொறுமையை கடைப்பிடித்தல்:

கிப்லா மாற்றத்தை சகிக்க முடியாத யஹுதிகள் பல சூழ்ச்சிகளை செய்தார்கள். தலைமைத்துவத்தில் சந்தேகத்தை ஏற்பாடுத்தினார்கள். மார்க்கக் கிரிகைகளைக் கொச்சைப் படுத்தினார்கள். முஹம்மத் தனது பிறந்த பூமியை நேசிக்க ஆரம்பித்துவிட்டார் எனப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். நடுக் கடலில் புயலுக்கு அகப்பட்ட கப்பல் போல நிலமை அமைந்தாலும் அழகான முறையில் பொறுமைகாப்பது வெற்றியைதரும் என இந் நிகழ்வு கற்றுத்தருகின்றது.

4) அல்லாஹ்விடத்தில் நபிகளாருக்கு இருந்த உயர் அந்தஸ்த்து:

நபி (ஸல்) அவர்களிடம் கிப்லாமா மாற்றம் பற்றிய எண்ணம் உள்ளத்தில் தான் இருந்தது. அவர்களது சிந்தையில் அது வந்து போனது. ஆனால் வார்த்தையால் அதனை மொழிந்து அல்லாவிடம் பிராத்திக்கவில்லை. ஆனால் அல்லாஹ் அவரது எண்ணத்தை, சிந்தனையில் தோன்றிய விருப்பத்தை ஏற்றுக் கொண்டான். அதற்கு உடனே பதில் கொடுத்தான். நபிகள் விரும்பியவாறு கிப்லாவை வடக்கே உள்ள ஷாமிலிருந்து தெற்கே உள்ள கஃபதுல்லாவிற்கு மாற்றினான். இது இறைவனிடத்தில் இறுதித்தூதரருக்கு இருந்த அந்த மகத்தான உயர் அந்தஸ்ததை குறிக்கிறது.

5) ஐக்கியப்பட்ட முஸ்லிம் சமூகம்:

உலகில் வாழும் முஸ்லிம்கள் இன, நிற, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒரே கிப்லாவை நோக்ககுவதானது ஒற்றுமையின் குறிகாட்டியாகும். ஒவ்வொரு முஸ்லிமும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதை அது நினைவு கூறுகிறது.எனவே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஐக்கியப்பட்டு வாழ்வதே முஸ்லிம் சமூகத்தின் பண்பு என்பதை இந் நிகழ்வு கற்றுத்தருகிறது.

6) யூதர்களின் கபட நிலைப்பாடுகள்

கிப்லா மாற்றம் என்பது யஹுதிகளின் வஞ்சக நிலைப்பாடுகள் பற்றி சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்ற பாடத்தையும் தருகின்றது. அவர்கள் எப்போதும் எந்த இடத்திலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்புக் காட்டியவண்ணம் இருப்பர். ‘திண்ணமாக யூதர்களும் இணைவைப்பாளர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறை நம்பிக்கையாளர்களுக்கு கடும் பகைவர்களாகவே இருப்பதை நீர்காண்பீர்’ என திருமறை இயம்பகின்றது.

யூதர்கள், முஸ்லிம் சமூகம் குறித்து பொறாமைப்படும் மூன்று சந்தர்ப்பங்களை நபி (ஸல்) குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள். நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளர்கள் ‘அவர்கள் (யூதர்கள்) பின்வரும் மூன்று சந்தர்ப்பங்களிலும் எங்களுடன் பொறாமை கொள்வது போன்று வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பொறாமை கொள்ளவதில்லை. ஒன்று ஜும்ஆத் தினம். அதன்பால் அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியுள்ளான். அவர்கள் அதைவிட்டும் வழி தவறியுள்ளனர். இரண்டாவது கிப்லா. அதன்பால் அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியுள்ளான். அவர்கள் அதைவிட்டும் வழி தவறியுள்ளனர். அவ்வாறே இமாமுக்கு பின்னால் நாம் ஆமீன் என்று சொல்லும் நேரம்.’ (முஸ்னத் அஹ்மத்)

1) ஜும்மாதினம் – யூதர்கள் பொறாமைப்படும் முதலாவது இடம்

இது ஒவ்வெரு முஸ்லிம் சகோதரனும் சமூக ஒற்றுமைக்கும் சகோதரத்துவ வாஞ்சைக்கும் வழிகோலும் ஜும்மாதினத்ததை யூதர்களுக்கு வெறுப்பை ஊட்டுகின்ற வாராந்த பொதுக்கூட்டமாக கருத வேண்டும் என இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.

2) முஸ்லிம் உம்மத்தின் தனித்துவ சின்னமாக கிப்லா அமைந்துள்ளமை யூதர்கள் பொறாமைப்படும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். காரணம் தினமும் முஸ்லிம்கள் கிப்லாவை முன்னோக்குவது அல்லாஹ்வின் திருப்திக்காக மாத்திரமே. இது இறைவனுக்காக மட்டுமே முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள் என்ற உணர்வையும் ஈமானையும் வளர்த்துவிடுகின்றது. நாம் அடைய வேண்டிய இறுதி இலக்கு இறைதருப்தியாகும். யூதர்கள் அதைத் தவற விட்டுவிட்டனர். மனிதநேயமற்ற யூதர்களின் அடாவடித்தனங்களுக்கு முன்னால் ‘என் எதிர்பார்ப்பு அல்லாஹ் என்னைப் பொருந்திக்ககொள்ள வேண்டும்’ என்பதே ஷஹீத் அஹ்மத் யாஸீனின் சுலேகமாகவும் இருந்து.

3) ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை யூதர்கள் எம்முடன் பொறாமை கொள்ளும் மூன்றாவது சந்தர்ப்பமாகும். அல்லாஹ்வின் கட்டளையை முஸ்லிம்கள் ஓர் அணியாக இருந்து ஒற்றுமையாக நிறைவேற்றும் போது அவர்கள் கோபப்படுகிறார்கள். எனவே இமாமுக்கு பின்னால் ஆமீன் சொல்வது அவர்கள் பொறாமைபடும் முன்றாவது இடமாக உள்ளது இந்த ஹதீஸ் கற்றுத்தருகிறது.

ஷஃபான் மாதத்தில் நிகழ்ந்த கிப்லா மாற்றம் வெறும் வராலாற்று நிகழ்சியல்ல. அது அர்த்தமுள்ள பல பாடங்களையும் படிப்பினைகளையும் சுமந்து வருகின்றது. முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், இறை திருப்தியை மாத்திரம் நாடி செயற்படுதல், சமூக ஒற்றுமை, யூதர்களின் நிலைப்பாடுகள் பற்றிய சரியான புரிதல் போன்ற மிக முக்கிய அடிப்படைகளை நினைவுக்கு கொண்டு வரும் ஷஃபானை மக்கள் மறந்து வாழ்வதாக நபிகாளர் குறிப்பிட்டுள்ளார்கள். அடியார்களின் செயல்கள் அதிபதியான அல்லாஹ்விடம் உயர்த்தப்படும் இந்த மாதத்தை அதிகமதிகம் நோன்பு வைப்பதன் மூலம் உயிர்ப்பிக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தூண்டியுள்ளார்கள்.

-முஹம்மத் பகீஹுத்தீன்-

– – – – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top