இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் (02/08/2022)
செவ்வாய் இரவு 08.15 மணியளவில் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சியில் இலங்கை வானொலியின்
சிரேஷ்ட அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளரும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவின் முதலாவது பணிப்பாளருமான மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் பற்றிய நினைவுகள் மீட்டப்பட்டன.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சிகளின் முன்னாள் பணிப்பாளர் கலைமாமணி கலாபூஷணம் எஸ். விஸ்வநாதன்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் மூன்று தசாப்தங்களாக தயாரிப்பாளராக பணியாற்றி வரும் அஸ்ஸெய்யத் மபாஹிர் மௌலானா.
சிரேஷ்ட ஒலிபரப்பாளர், முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர்
எஸ். எம். ஹனீபா.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை முன்னாள் பணிப்பாளர், உலக வானொலி செய்தி வாசிப்பாளருமான வீ. என். மதியழகன்.
ஆகியோர் மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் பற்றிய நினைவுகளை நேயர்களுடன்
பகிர்ந்து கொண்டனர்.
மர்ஹும் ரஷீத் எம். ஹபீல் அவர்களின் நினைவுகள் இன்றைய பாரம்பரியத்தில். இலங்கை வானொலியின் முன்னாள் முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞராகி, இலங்கை வானொலியின் சிரேஷ்ட முதலாம்தர அறிவிப்பாளராகி, செய்தி வாசிப்பாளராக, வர்ணனையாளராக பின்னாட்களில் முஸ்லிம் சேவையின் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக ஒலிபரப்புத் துறையில் அனைத்து படித்தரங்களையும் தொட்டு தடம் பதித்தவரே இன்று நாம் பேசப் போகும் மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்கள்.
மர்ஹும் அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் அவர்களின் ஊடக நினைவுகளை மீட்டிப் பார்க்க அவரோடு இணைந்து ஊடகத் துறையில் பங்களிப்பு செய்து ஊடகத் துறையில் உச்சந் தொட்ட மூன்று பிரபலங்களை எங்களோடு இணைத்துக் கொண்டதில் நாம் அக மகிழ்கிறோம்.
என்ற அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பித்தார் கலாபூஷணம்
எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள்.
மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் குறித்து
எஸ். எம். ஹனீபா அவர்கள் கூறுகையில்:-
மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியின் வாயிலாக என்றோ அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர். 1982 ஆம் ஆண்டிலிருந்து அவர் வபாத்தாகும் வரை நான் அறிவேன். முஸ்லிம் சேவையின் ஒரு அறிவிப்பாளராகவே என்னுள்ளே அபிமானம் பெற்றிருந்தார். என்றோ ஒரு நாள் காண்பேன், கதைப்பேன் என்று நான் கருதியிருக்கவே இல்லை. மாஷாஅல்லாஹ் அல்லாஹ்வின் நாட்டம் 1982
ஆம் ஆண்டு அவருடன் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.
இந்த பாரம்பரியம் தொடங்கப் பட்டதிலிருந்து இவரை இணைத்துக் கொள்ள எவ்வளவோ பாடு பட்டோம் “நாம் உள் வீட்டினர் நமது வீட்டு விருந்தாளிகளை வரவேற்று விட்டு பின்னர் நாம் பேசிக் கொள்ளலாம்” என்று ஒதுங்கியே வந்தார். இருந்தும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் வபாத்தானார். சற்று ஓரிரு வாரங்களுக்கு முன்பு அவர் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக தயாரிப்பாளரும், நடத்துநரும் கூறிக் கொண்டதை நான் கேள்விப்பட்டேன்.
இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. இலங்கை ஒலிபரப்பு தொடங்கப்பட்ட 1925 ஆம் ஆண்டிலிருந்தே முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்தாலும் முஸ்லிம் நிகழ்ச்சி என்று தனியான ஒரு பிரிவு இயங்கப்பட்டதன் பின்பே முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகம் பெற்றன.
உலகப் புகழ் பெற்றன. இதனுடைய முதல் பணிப்பாளராக வீ. ஏ. கபூர் நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் பலரும் பணியாற்றி இருந்தார்கள். இவ்வாறு முஸ்லிம் நிகழ்ச்சிகள் உலகப் புகழ் பெறுவதற்கு
ஒத்துழைப்பு நல்கியவர்களில் மர்ஹூம் ரஷீத் எம். ஹபீலும் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
மர்ஹூம்களான குத்தூஸ் இஸட். எல். எம். முஹம்மத் அவர்களுக்குப் பிறகு மூன்றாவது தயாரிப்பாளராக பல வருடங்கள் பணியாற்றி விட்டு இங்கு பெற்ற அனுபவத்தை அங்கே போய்
காட்ட சென்று விட்டார். அதாவது ரூபவாஹினிக்குப் போய் விட்டார். அவர் அங்கு சென்று விட்டாலும் அவரது உள்ளம் முஸ்லிம் சேவைக்குள் தான்
ஊசலாடிக் கொண்டிருந்தது. அவர் இங்கேயே இருந்திருந்தால் முஸ்லிம் சேவையின் நான்காவது பணிப்பாளராக நிச்சயம் அவர் சேர்ந்திருப்பார். பின்னாளில் அவரே சொல்லி சொல்லி கை சேதப்படுவார்.
முஸ்லிம் நிகழ்ச்சிக்காக மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் செய்த பணிகள் ஏராளம். இந்த வரிசையில் முஸ்லிம் நாடகங்களை தமிழ் உலகம் விரும்பிக் கேட்கும் படி செய்திருக்கின்றார். நாடகத் தயாரிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
அவரிடம் அருமையான நல்ல பண்புகள் இருந்தன. மேலான ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். நல்ல பாடசாலைகளில் கற்றவர். படித்த பரம்பரையைச் சேர்ந்தவர். என்ற சேதிகளை வெளிக்காட்டி நின்றன.
புனித அரஃபா மைதானத்திலிருந்து
இலங்கை உட்பட உலக ஊடகங்களுக்காக தமிழ் மொழியில் நேர்முக வர்ணனை செய்த இரண்டாவதுநபர் இவரே என்று சொல்லலாம். இவ்வாறு மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்களது ஒலிபரப்பு சேவைகளையும், பணிகளையும், நடவடிக்கைகளையும் கூறிக் கொண்டே போகலாம் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹுத்தஆலா அவருடைய சேவைகளையும், பணிகளையும் அங்கீகரிப்பானாக. மேலான பிர்தௌஸை அவருக்கு வழங்குவானாக.
ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சி முன்னாள் பணிப்பாளர்
எஸ். விஸ்வநாதன் அவர்கள்
ரஷீத் எம். ஹபீல் குறித்து கூறுகையில்:-
இலங்கை வானொலியிலும், இலங்கை ரூபவாஹினியிலும் அவரோடு இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை. மூத்த ஊடகவியலாளராக அவர் அர்ப்பணிப்புடன் செய்த சேவைகள் எப்போதும் மிகுந்த பொறுப்புடன் தனது கடமைகளை ஈடுபடுவது போன்ற உன்னதமான விசயங்கள், அதற்குப் பின்னால் ஒலிபரப்புத் துறையிலும், ஒளிபரப்புத் துறையிலும் ஈடுபட்டு பணியாற்றிய பலருக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது என்று சொல்லலாம்.
நான் இலங்கை வானொலியில்
1970 களின் பிற்பகுதியில் இணைந்த பொழுது அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு முழு நேர அறிவிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். இயற்கையாகவே அவருக்கு காத்திரமான குரல் வளம் இருந்திருக்கிறது. அத்துடன் அவர் அதிக அளவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக தமிழ் சேவையிலும், முஸ்லிம் சேவையிலும் அவரது பணியானது அளப்பரியதாகும்.
ஒலிபரப்பு துறைக்கு வந்த போது நான் இளையவன். வயதில் குறைந்தவன் என்று எண்ணாமல் கூடப் பிறந்த சகோதரனைப் போல பல விசயங்களைப் பற்றி விளக்கம் தந்து, வழிகாட்டல்களையும் வழங்கி இருக்கின்றார். அவர் போன்ற மூத்த ஒலிபரப்பாளர்களைப் பார்த்து நாங்களும் பல விசயங்களைக் கற்றுக் கொண்டுதான் இந்த ஒலிபரப்புத் துறையிலே பிற்காலத்தில் தொடர்ந்து பணியாற்றக் கூடியதாக இருந்தது.
1982 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தேசிய தொலைக்காட்சி நாடலாவிய ரீதியில் சேவையை ஆரம்பித்த போது அந்த ஆரம்ப காலத்திலேயே அங்கு பணியாற்ற ஆரம்பித்தேன். ஒலிபரப்புத் துறையில் மட்டுமல்லாமல் ஒளிபரப்புத் துறையிலும் முற்று முழுதாக பணியாற்ற வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் அவர்களுக்கு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
இலங்கை ரூபவாஹினியில் முஸ்லிம் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த முஸ்லிம் பிரிவுக்கு தலைவராக பணியாற்றி இருக்கின்றார். அதே காலகட்டத்தில் அவர் தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கிரமமாக பணியாற்றி தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றார் என்பதனை நாங்கள் மறந்து விட முடியாது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் அஸ்ஸெய்யத் மபாஹிர் மௌலானா ரஷீத் எம் ஹபீல் குறித்து:-
மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் அவர்களது ஊடகப் பயணம் 1954 ஆம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய பாடசாலை நிகழ்ச்சியூடாக ஆரம்பித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் 1971 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக நியமனம் பெற்று பின் நிரந்தர அறிவிப்பாளராகவும், முதல் தர செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் வர்ணணையாளராகவும் தனது வானொலிப் பயணத்தில் உச்சம் தொட்டுள்ளார்.
இன்னும் முஸ்லிம் சேவை வழங்கும் மாதர் மஜ்லிஸ் பெண்கள் நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்த ஆரம்ப கால தயாரிப்பாளரான மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வழங்கிய நிகழ்ச்சிகள் மிக ஜனரஞ்சகமானவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் வானொலி நாடக எழுத்தாளர் என்பதும் பலர் அறிந்திராத ஒரு முக்கிய விடயம். மேலும் நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
1982/02/25 திகதி ஆரம்பிக்கப்பட்ட
இலங்கை தேசிய தொலைக்காட்சி நிலையமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் அவர்களது இரண்டாவது ஊடகப் பயணம் கால் பதிக்கிறது. 1983 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நியமனம் பெறுகிறார். முதன் முதலில் “மஜ்லிஸுல் இஸ்லாம்” என்ற சமய நிகழ்ச்சி மூலம் நேயர்கள் கண் முன் தோன்றினார். தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் கடமை புரிந்தார்.
மஜ்லிஸுல் இஸ்லாம் நிகழ்ச்சியோடு “வளர் பிறை” என்ற இன்னுமொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார். மேலதிகமாக “மின்னும் தாரகை” எனும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. அதே போன்று “உதயம்” எனும் இளைஞர் நிகழ்ச்சி, மற்றும் “சிதிஜெய” என்ற சிங்கள மொழியிலான நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு வழி வகுத்தவர் மர்ஹூம் ரஷீத் எம். ஹபீல் ஆவார். கஹ்பா சரீபில் நடைபெறும் துஆ பிரார்த்தனையை செய்மதியூடாகப் பெற்று ஒலிபரப்பிய பெருமையும் இவருக்கு உண்டு. அதே போன்று அரஃபா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பையும் அவரே ஆரம்பித்தார்.
மனிதர் என்ற ரீதியில் சில குறைகள் இருந்தாலும் பலராலும் விரும்பக் கூடிய நபராக இருந்தார். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியூடாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளருடன் வல்ல அல்லாஹ்வுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.
ரஷீத் எம். ஹபீல் வபாத்தான அதே தினத்தில் நன்றியுணர்வோடு முஸ்லிம் சேவை சிறப்பு நிகழ்ச்சியொன்றினை
ஒலிபரப்பியது அந்த நிகழ்ச்சியில் அல்ஹாஜ் ரஷீத் எம் ஹபீல் குறித்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை முன்னாள் பணிப்பாளரும்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான
வீ. என். மதியழகனின் (கனடா)மனப் பதிவு:-
ஒலிபரப்பாளர்களை கண்ட மாத்திரத்திலேயே கட்டி அணைத்து கலகலப்பூட்டி எந்த வேலையிலும் குதூகலப்படுத்துவதையே இயல்பாகக் கொண்டிருந்த என் ஆத்ம நண்பா அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் அதீத துயரடைகிறேன். எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து சென்றீர்கள் என அறிந்து ஒலிபரப்புலகிலே ஒரு பாரிய வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இனி அதை யார் நிரப்புதல் கூடும். உங்கள் இழப்பு எமக்கெல்லாம் பேரிழப்பே.
இறுதியாக:-
“எட்டுப் பிள்ளைகளை தவிக்க விட்டு எங்கள் தாயார் மரணமடைந்த பின் எங்கள் தகப்பனார் வயதில் குறைந்திருந்த போதும் மறுமணம் செய்யாது கடினமான பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் சீராக, சிறப்பாக பராமறித்து படிக்க வைத்து எம்மை நல்ல நிலைகளுக்கு கொண்டு வந்த என் தந்தை தேசிய ரீதியில் கௌரவம் கிடைக்கும் இந்த தருணத்தில் அவர் இல்லையே” என்று தனது தகப்பனாரை கண்ணீருடன் அவர் ஒரு நிகழ்வில் நினைவு படுத்தியமை இன்றும் எங்கள் நெஞ்சத்தில் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சகோதரர் ஜின்னாஹ் அவர்கள் நேயர்கள் நெஞ்சங்களை நெகிழச் செய்த தகவலோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
– – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் செய்திகள் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.