இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் (22/08/2017)
செவ்வாய் இரவு 08.15 மணியளவில் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சியில் ஆசிரியர், முஸ்லிம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்,
ஆய்வு உத்தியோகத்தர், வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி ஏ. ஸீ. ஏ. எம். புஹாரி
அவர்கள் கலந்து கொண்டார்.
அவரை நேர்காணல் செய்தார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹா
அவர்கள்.
முஸ்லிம் சேவைக்குள் காலூன்ற வைத்த காரணிகள் பற்றி குறிப்பிடுகையில்:-
1967, 68 களில் பாணந்துறை தொட்டவத்த அல் பஹ்ரியா முஸ்லிம் மத்திய வித்தியாலயத்திலும், பள்ளி வாசலிலும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிகளை அடிக்கடி கேட்பது வழக்கம். இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது எனக்கும் மனதிலே ஒரு ஆசை வந்தது. “ரேடியோவில்” நாமும் பேசினால் என்ன?
அந்த ஆசை மனதில் இருக்கும் போது நண்பர் ரூஹுலாஹ் அவர்கள் அந்த நேரம் ரேடியோவில் உரையாடிக் கொண்டிருப்பார். திருக் குர்ஆன் விளக்கம், மணி மொழிகள் போன்ற நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளில் நீங்களும் ஈடுபட்டால் என்ன? என்ற ஆசையை எனக்குத் தந்தார். அது போல நானும் சில நிகழ்ச்சிகளை எழுதினேன். மணிமொழிகள் என்ற தலைப்பில் மௌலானா கலீலுர் ரஹ்மான் அவர்கள் ஆரம்பித்த நிகழ்ச்சி அது. நான் எழுதியதை இஸட். எல். எம். முஹம்மது
ஹாஜியார் அவர்களிடம் ஒப்படைத்த போது அதை அவர்கள் வாங்கி பார்த்து விட்டு ஒலிப்பதிவு செய்வதற்காக திகதியை நிர்ணயித்தார். அந்த ஒலிப்பதிவுக்காக நானும் சென்றேன்.
1969 ஆம் ஆண்டு மணி மொழிகள் ஒலிப்பதிவு நடந்தது.
அதற்குப் பிறகு எனக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் கிடைக்க ஆரம்பித்தன. திருக் குர்ஆன் விளக்கம், மணி மொழிகள் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
அதன் பிறகு 1972 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுக்காக சென்றிருந்த போது இஸட். எல். எம். ஹாஜியார் அவர்கள் என்னை அழைத்து அன்றைய பணிப்பாளராக இருந்த
அல்ஹாஜ் வீ. ஏ. கபூர் அவர்கள் என்னை அழைப்பதாக கூறினார். அவரது அறைக்கு சென்ற போது அந்த அறையிலே மர்ஹூம்களான எம். எச். குத்தூஸ், எம். எம். இர்ஃபான், ஆஸாத் மௌலானா, இஸட். எல். எம். முஹம்மது ஹாஜியார், கபூர் ஹாஜியார், ஆகியோருடன் நானும் உட்கார்ந்திருந்த சபையிலே கபூர் ஹாஜியார் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். சிறு சிறு சம்பவங்களாகத் தொகுத்து ஒரு மூன்று நிமிடங்களுக்குள்ளே ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும் அதற்கு உங்களால் முடியுமா என்று கேட்டார்? நானும் தைரியமாக ஆம் என்று கூறி விட்டு இந்த நிகழ்ச்சியில் உள்ள பாரிய கஷ்டம் அப்போது எனக்கு தெரியவில்லை. சரி ஒரு நிகழ்ச்சியை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று எனக்கு ஆணையிட்டார். அதன்படி அடுத்த ஒலிப்பதிவு வரும் போது பத்து நிகழ்ச்சிகளை எழுதிக் கொண்டு வந்தேன். அவ்வளவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 1972/07/02 ஆம் திகதி
எனது முதலாவது நிகழ்ச்சி இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
(இதுவே அவரை உச்சம் தொட வைத்த
“வரலாற்றில் ஓர் ஏடு” நிகழ்ச்சியாகும்)
அதற்குப் பிறகு என்னுடைய மொழி நடை, தொண்டை வளம் எல்லாம் எனக்கு அனுசரணையாக இருந்தன. எனவே அந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற ஆரம்பித்தது.
வீ. ஏ. கபூர் ஹாஜியார் அவர்கள் 2, 3 நிகழ்ச்சிகள் போனதன் பின்பு என்னை தொலைபேசியில் அழைத்து “ஹஸ்ரத் எதிர்ப்பார்ப்புகள் வீண் போகவில்லை உங்கள் நிகழ்ச்சிக்கு நிறையவே வரவேற்பு கிடைக்கிறது நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்” என்றார். அடுத்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன் அப்போது சொன்னார் இதற்கு எந்த விதமான சன்மானங்களும் வழங்குவதில்லை. இதை நீங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு இலவசமாகவே செய்து தரவேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். “ஹாஜியார் நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்நிகழ்ச்சி செய்ய வரவில்லை. நான் படித்த படிப்பை மக்களுக்கு மத்தியில் தஃவா பிரசாரம் பண்ணுவதற்கு ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். நான் ஓதிய கிதாபுகளை மீட்டிப் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்” என்று கூறினேன்.
1972 ஆம் ஆண்டு முதல் 7, 8 வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தேன். அந்த நிகழ்ச்சிக்குறிய வரவேற்பு அதற்குறிய மரியாதை கூடிக் கொண்டே வந்தது. கபூர் ஹாஜியார் சொன்னார் இந்த நிகழ்ச்சிக்கு சன்மானம் ஏதும் கிடைக்கா விட்டாலும் இந்த நிகழ்ச்சி உங்களை உயர்த்தி விடும் அதை மட்டும் என்னால் சொல்ல முடியும் என்றார். அது போல இந்த நிகழ்ச்சி என்னை உயர்த்திக் கொண்டே வந்தது இந்த உயர்வின் காரணமாக இந்த நிகழ்ச்சியை பலரும் செய்வதற்கு ஆசைப் பட்டார்கள். அதனால் வேறு சிலருக்கு இந்த நிகழ்ச்சியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. “வரலாற்றில் ஓர் ஏடு” என்ற இந்த நிகழ்ச்சி முஸ்லிம் சேவையின் அடையாளமாக பதியப்பட்டுள்ளது.
தான் நடத்திய முஸ்லிம் சமய பாடசாலை
பற்றி குறிப்பிடுகையில்:-
முஸ்லிம் சமய பாடசாலை பின்னாளில் “நூருல் இஸ்லாம்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அதனை நானும் சில காலம் நடத்தி வந்தேன். அதில் மிக முக்கியமானவர் அஹ்மத் முனவ்வர். அவரும் என்னோடு சேர்ந்திருந்தார். இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்
சகோதரர் ஜின்னாஹ், பாணந்துறையைச் சேர்ந்த ஏ. எல். எம். அஸ்வர், நஜ்முல் ஹுஸைன், மர்ஹூம் உமர் தீன், மஹ்திஹஸன் இப்ரஹிம், ஜெய்னுலாப்தீன், எம். எஸ். எம். யாஸீன்,
எம். எஸ். எம். ஸாதிக், எம். டீ. எம். சரூக், மர்ஹூம் எம். எம். ரஸீன், ஜனாப் சகோதரர் அலி இன்னும் நிறைய மாணவர்கள் மன்னிக்க வேண்டும் நிறைய பேர் நூருல் இஸ்லாம் வகுப்புக்கு வந்து ஒரு பாடசாலையாக
கொண்டோம்.
தனது குடும்பம் பற்றி குறிப்பிடுகையில்:-
பெற்றார்கள் என்பவர்கள் விண்ணில்
இருந்தவர்களை மண்ணுக்கு கொண்டு வந்தவர்கள். ஆனால் ஆசிரியர் என்பவர்கள் மண்ணில் இருந்தவர்களை
விண்ணுக்கு கொண்டு சென்றவர்கள். இதனை நான் எப்போதும் மறக்கவில்லை. முதலில் எனது பெற்றார் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மண்ணுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
எனது தந்தை சம்மாந்துறையைச்
சேர்ந்தவர். நானும் சம்மாந்துறையில் பிறந்தவன். காயல்பட்டணத்தில் ஓதியவன். சின்ன ஆலிம் என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்பட்டவன் தாயார் பெயர் கதீஜா உம்மா. இருவரும் இப்போது என்னுடன் இல்லை. நாங்கள் சகோதர, சகோதரிகள்
ஆறு பேர். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள். எனக்கு மனைவி இருக்கிறார்.
பிறந்த மூன்று செல்வங்கள் இருக்கின்றன. இவ்வளவு தான் எனது குடும்ப வரலாறு என்று கூறி முடித்துக் கொண்டார்.
நமக்குள் எத்தனை மூத்த ஆளுமைகள்.
இவர்களுடைய தகுதிகள் தகைமைகளை
இன்றைய இளம் தலைமுறையினருக்கு அடையாளம் காட்டப்படுகின்றது.
அதற்காக தன்னை அர்ப்பணம் செய்து பாடுபடும் சகோதரர் கலாபூஷணம்
எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவருக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும்,
முஸ்லிம் சேவை அப்போதைய பணிப்பாளர் எஸ். முஹம்மது ஹனிபா
அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…