பாடகர் எம். எஸ். ஜவுபர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் 02/07/2019 செவ்வாய் அன்று, இரவு 08.15 மணியளவில்
முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சியில் சிரேஷ்ட பாடகர் “தீனிசை அருவி” எம். எஸ். ஜவுபர் B A (P. G. Dip-in-ed) J.P Gampaha District கலந்து கொண்டார்.இவரை நேர்காணல் செய்தார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள்.
தன்னைப் பற்றி கூறுகையில்:-
எனது ஊர் கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிகுடா என்ற கடல் வளமும், தென்னை வளமும் கொண்ட கிராமமாகும். எனது தந்தை பெயர் மிஸ்கின் ஸாஹிப். தாயார் பெயர் சுலைஹா உம்மா. தற்போது இருவரும் இல்லை. இறையடி சேர்ந்து விட்டார்கள். எனக்கு இரண்டு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். எனது மனைவி ஜெசுந்தா ஒரு பட்டதாரி ஆசிரியர். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். எனது ஆரம்பக் கல்வியை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தொடங்கி எருக்கலம்பிட்டி மத்தியக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டதாரியானேன்.
1987 ஆம் ஆண்டு மாபோலை அல் அஷ்ரப் வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று, 1993 ஆம் ஆண்டு இடமாற்றலாகி கொழும்பு அல் நாஸர் வித்தியாலயத்தில் சுமார் பத்து வருடங்களாக கடமையாற்றினேன். அதன் பின்னர் 2003 ல் கொழும்பு மட்டக்குளி ஸேர் ராசிக் பரீத் மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு 13 வருடங்கள் கடமையாற்றினேன். அக் காலத்தில் பாடசாலையில் நிதிப் பொறுப்பாளராக சிறப்பாக கடமையாற்றி மன நிறைவோடு 2015 ஆம் கடமையிலிருந்து ஓய்வு பெற்று தற்போது மாபோலையில் வசித்து வருகிறேன்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையுடன் தனக்கேற்பட்ட தொடர்பு பற்றி குறிப்பிடுகையில்:-
ஆசிரியராக முதல் நியமனம் பெற்று மாபோலை அல் அஷ்ரப் வித்தியாலயத்திற்கு வந்த போது அங்கு பாடசாலை கீதமொன்றுக்கு இசை அமைப்பதற்காக கே. எம். ஸவாஹிர் அவர்கள் வந்திருந்தார். அந்த நேரம் பிள்ளைகளைக் கூப்பிட்டு இசையை சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பிள்ளைகளால் பாட முடியவில்லை. எனக்கு இசையில் ஆர்வம் இருந்ததால் அந்த இடத்திற்கு போய் அந்த பாடலை நான் திரும்ப பாடிக் காட்டினேன். அதைக் கேட்டு ஸவாஹிர் ஸேர் நீங்கள் நன்றாக பாடுகிறீர்களே ஏன் நீங்கள் ரேடியோவில் பாடக் கூடாது? நான் நிகழ்ச்சி நடத்துகிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டார்? எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. வருகிறேன் என்று சொல்லி விட்டேன். “புதுக்குரல்” என்ற இலங்கையில் உள்ள புதிய பாடகர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி. உங்களுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியுமென்றால் அடுத்த கிழமை “Recording”
இருக்கு வருகிறீர்களா என்றும் கேட்டார். சரி என்று சொல்லி விட்டு அவர் போன பிறகு மாபோலையில் அபுல் ஹஸன் என்ற ஒரு மௌலவி இருக்கிறார் அவரிடம் போய் “என்னை
வானொலியில் பாட அழைத்திருக்கிறார்கள் எனக்கு ஒரு பாடல் இயற்றித் தாருங்கள் என்று கேட்டு 1991 ஆம் ஆண்டு அதை “Recording” செய்தோம்.
இதுவே எனது முதல் பாடல். தொடர்ந்து வந்த நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தன. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மெல்லிசை தேர்வில் கலந்து கொண்டு அதில் (B) “Grade” இல் சித்தியடைந்தேன். அதன் பின்னர் 1996 வரைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது தான் இந்த பாரம்பரியம் நிகழ்ச்சி மூலம் இந்த விசயங்களை சொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு சந்தோஷம் அடைகிறேன்.
தான் பாடிய காலத்தில் தன்னோடு பாடியவர்கள் பற்றி குறிப்பிடுகையில்:-
டோனி ஹஸனோடு பாடி இருக்கிறேன். சில பாடல்களை அவரது வீட்டில் இருந்து கூட “Recording” பண்ணி இருக்கிறோம். டீ. எப். லத்தீப்போடும் அவரது வீட்டில் பாடல்களை “Recording” செய்திருக்கிறோம். இசைக்கோ நூர்தீன் ஹாஜியார் வீட்டிலும் பாடல்களை “Recording” செய்திருக்கிறோம். ராஸிக் ஸனூன் ஸேர், அஹமட் எம். நஸீர், மொஹிதீன் பேக் மகள் மொய்னா பேகம், நூர்ஜஹான் மர்சூக், அல்ஹாஜ் அமீர், பீர் முஹம்மத் ஆகியோரோடும் பாடி இருக்கிறேன்.
தான் இயற்றிய பாடல்கள் பற்றி குறிப்பிடுகையில்:-
நான் மூன்று பாடல்கள் எழுதி நானே பாடி இருக்கிறேன். அதே போல் எனக்கு நிறைய பேர் பாடல்கள் எழுதி தந்திருக்கிறார்கள். அவர்களை மறக்க முடியாது அந்த வரிசையில் எனக்கு முதலாவது பாடலை எழுதி தந்தவர் அபுல் ஹஸன் மௌலவி. அவர் எனக்கு இரண்டு பாடல்களும், காத்தான்குடியைச் சேர்ந்த ரஹீம் மாஸ்டர் ஏழு பாடல்களும், கிண்ணியா அமீர் அலி இருபத்தொரு பாடல்களும், நூர்தீன் ஹாஜியார் இரண்டு பாடல்களையும், கிண்ணியா ஏ. எம்.எம். அலி ஒரு பாடலும் எழுதித் தந்திருக்கிறார்கள். அத்தோடு என் மனைவி மூன்று பாடல்களையும் எழுதித் தந்திருக்கிறார். மொத்தமாக முப்பத்தொன்பது பாடல்களை எழுதித் தந்திருக்கிறார்கள். அனைத்தையும் நான் பாடி இருக்கிறேன்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பற்றி குறிப்பிடுகையில்:-
நான் முஸ்லிம் சேவை புதுக் குரல் நிகழ்ச்சி மூலமாகத் தான் அறிமுகமானேன். அந்த காலத்தில் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது அது இல்லை என நினைக்கிறேன். பாடக் கூடிய நிறைய பேர் இருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்காததால் மறைந்து போய் இருக்கிறார்கள். அந்த புதுக் குரல் போன்ற நிகழ்ச்சிகள் செய்தால் சில கலைஞர்களை முன்னுக்கு கொண்டு வர முடியும். எனக்கொரு கவலை இருந்தது.
அது என்னவென்றால் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு பாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டீ. எப். லத்தீப் மறைந்ததன் பிறகு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இத்தோடு என் இசை வாழ்க்கை முடிந்து விட்டது என்று தான் நினைத்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது சுமார் அறுபத்தி நான்கு வயதான எனக்கு இருபது வயது இளைஞனைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இப்படியான நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமாக கலைஞர்களை உற்சாகப்படுத்த முடியும். பாடல்கள், நாடகங்கள் குறைந்து போனது போல் தெரிகிறது. ஆனால் அதைக் கேட்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவ்வாறான நிகழ்ச்சிகளைத் தொடங்கி நடத்துவீர்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வானொலிக்கு அப்பால் தனது கலைப் பயணம் பற்றி குறிப்பிடுகையில்:-
• வானொலி தான் எனது முதல்.
முஸ்லிம் சேவை இல்லையென்றால் என்னால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு போயிருக்க முடியாது. வானொலியோடு தொலைக்காட்சி “Eye Channel” இல் மூன்று பாடல்கள் பாடி இருக்கிறேன். ரூபவாஹினியில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறேன். படிக்கின்ற காலத்தில் எனக்கு நாடகத் துறையில் ஈடுபாடு இருந்தது. பாடசாலையில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
பாடியதோடல்லாமல் தான் முஸ்லிம் சேவையில் செய்த நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிடுகையில்:-
ஹஜ்ஜுப் பெருநாள் விசேட நிகழ்ச்சி இசைச் சித்திரம், நோன்புப் பெருநாள் இசைச் சித்திரம். போன்றவற்றை ஒரு குடும்பமாக இருந்து செய்திருக்கிறோம்.
இறுதியாக கூறுகையில்:-
முஸ்லிம் நிகழ்ச்சி ஆரம்ப காலம் முதல் இன்று வரை சோடை போகாமல் மக்கள் மத்தியில் மவுசான நிகழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. வீடுகளில் பெண்கள் காலையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் சேவையின் அத்தனை நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டே அவர்களுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். ஐவேளை பாங்கு ஒலிபரப்பாவதால் அது ஒரு வசதி நேரத்திற்கு தொழுது கொள்ள முடிகிறது. இன்றும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை கேட்பதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். பழைய தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து பழைய மாதிரியான இடத்துக்கு வருவதற்கு தரமான நிகழ்ச்சிகளையும், தரமான கலைஞர்களையும் உள்வாங்குவதற்கான இடமாக மாற்றுவது நல்லதென்று நான் எதிர்பார்க்கிறேன். என்று கூறி முடித்துக் கொண்டார்.
இத்தகைய பழைய ஆளுமைகளை இன்று இளைஞர் மத்தியில் வெளிக் கொணர்ந்து அவர்களது அடையாளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பாரிய பொறுப்பை பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள்.
அவருக்கும் அவரோடு இணைந்து தயாரித்தளிக்கும் சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
✍🏼 எம். வஸீர் வாழைத்தோட்டம்.
——————————————-
மேலும் வரலாற்று நிகழ்வுகளைப் பெற்றுக்கொள்ள, எமது Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…