அகாலத்தில் கரைந்த நிழல்
ஜிப்ரி ஹாசனின் சிறுகதைகள் மீதான ஒரு வாசிப்பு.
நூலறிமுகம் : ஆய்வாளரும் நூல் விமர்சகருமான M.M.A.BISTHAMY அவர்களின் பன்முக மொழிநடையில்…
கிழக்கிலங்கையிலும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஜிப்ரி ஹாசன்
எனக்கு மிகவும் பிந்தித்தான் முகநூல் வழியாக அதிலும் அவரது நூல்களுக்கூடாக அறிமுகமானவர். முகநூல் வழியாகஅண்மைய நாட்களில் சடுதியாக கிடைத்த தொடர்புகள் காரணமாக அவரது நூல்களில் ஓர் அலாதியான ஈடுபாடு உருவானது.
காரணம் அவரது பரந்த வாசிப்பும் எழுத்தும்
நூலறிமுகமும் தான் காரணம்.
அவரது நூல்களுள் முதலில் எழுத்தின் தடம் தான் வாசித்தேன். அடுத்து வாசித்தது அகாலத்தில் கரைந்த நிழல். அதனது மொழி, உள்ளடக்கம், கதை சொல்லும் பாணி இன்ன பிற காரணமாக அகாலத்திலும் கரைந்துருகி மறையாத நிழலாகவே நூலின் தாக்கம் எனக்கும் எலைலோருக்கும் அமைந்திவிடுகிறது, அமைந்து விடும். குறிப்பாக சமூக அவலங்கள் அத்தனையையும்
மூலை முடுக்கெங்கும் புகுந்து வெளிக்கொணர்ந்துள்ளார் எனலாம்.
சமூகத்தின் அவலம், அலைக்கழிவு, அவஸ்த்தை, அனுதாபம், வெறுமை மௌனம் என அனைத்துக்குமான
பரிதாப உணர்வை வெளியிடும் வகையில் எமது உணர்வை கசக்கிப் பிழிவதாக உள்ளன அனைத்துக் கதைகளும். முதலாம் கதையான ஒத்திகைக்கான இடம் எனும் கதை எமது சமுகத்தின் ஆன்மிக அவலம், ஆன்மீக வறுமை, வங்குரோத்து, சமயம் மீதான அரைகுறையான நுனிப்புல் பார்வை அனைத்தையுமே துலாம்பரமாய் காட்டிவிடுகிறது.
கட்டாய கல்விக்கு வழங்காத அழுத்தம் ஆன்மிக நோக்கில் குர்ஆனை மனனம் செய்ய வழங்கப்படுகிறது. ஆன்மிகத்தின் பேரில் நிகழும் மிகப்பிழையான
பிள்ளை வளர்ப்பு முறையாக
அதிகார நோக்கிலான பாணியை கொண்டு இது அமைகிறது.
சமகாலத்தில் கட்டாய கல்வியும் சமயக்கல்வியும் இணைந்ததாக
எத்தனையோ மாணவர்கள் தேர்ந்த பெறுபேறுகளை அடைவுகளை காட்டிவருவது கண்கூடு
ஒரு காலத்தில் பள்ளியில் சேர்க்கையில் கண்ணை வைத்து அனைத்தையும்
உரிக்க பொறுப்பு கொடுப்பது நினைவு வருகிறது
இறைவனின் கட்டளையான புனித திருக்குர்ஆனை கற்றவனாக மாற்றி மகத்துவம் காண , பிள்ளையின் கட்டாய கல்வியை இழந்து அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து ஹாபிழாக்கிவிட பேராசை பட்டு விடுவது அனுமதிக்கத்தக்க ஒன்றல்ல. அது இறுதியில் மொத்தமாக அனைத்தையுமே இழக்கும் அவலம் அவமானம் அநியாயம் அக்கிரமம் அனைத்துமே இழையோடியுள்ளன கதையில்.
ஜின்னின் அட்டகாசம் அசத்தலாகதூக்கலாக உள்ளது… இக்கதையை பிழையாக புரியப்பட்ட ஒரு நபிமொழிக்கான சமகால
இலக்கிய விபரிப்பு எனலாம். அடுத்த கதை ரூஹின் யாத்திரையில் ஈழத்து சிறுகதை, மற்றும் நாவலாசிரியிர் எழுத்தாளர் கவிஞர்
தீரனின் தீரதத்தில் வரும் கபடப்பறவை எனும் கதையை கண் முன் கொண்டுவருகிறது. மரணிக்கும் வரை தான் உறவுகள், உரிமைகள், உணர்வுகள் எல்லாம் பேசுபொருளாகின்றன. உயிர்போனால் எல்லாம் போகும் அதனுடன், அவளவு தான். மரணம் தான் உண்மைகளை கக்கும் ஒரு ரகசிய பிரிகோடு. அதுவரை தான் அனைவரது கபட நாடகமும்
அகாலத்தில் கரைந்த நிழல் கதை தான் நூலின்
மையச்சரடு, அச்சாணி. மிக நீண்ட கதை. ஒரு பெண் படும் உடல் உள அழுத்தம் பாலியல் சார் சில்மிச சீண்டல்
குடும்பத்தின் மூத்த
அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகள் என அனைத்தையும்
கதை வெளிக்கொணர்கிறது.
கதையை இணையத்தில் வாசித்தாலும்
இங்கு புதிய சுவையும் சுகமும் உணர்வும் உயிர்ப்பும் இதமும் ரிதமும் தருவாக அதன் மொழியுள்ளது. வாப்படம்மா, வாப்படப்பா
என நூலாசிரியரே கதை சொல்வதால்
பாத்திர வார்ப்பை யாரும் சொல்லித்தராமலே
பக்குவமாக பிரித்தறியலாம்
இந்தவகையில்
கண்ணீர் கலந்ததாக
இசகுபிசகின்றி கதை நகர்கிறது
உலகளவில் உள்ளத்தளவில் உண்மையாகவே பெண் குறித்த குரூர பார்வைகளை மையப்படுத்தியதாக இந்தக்கதை நகர்கிறது.
ஹரூகி முரகாமியின் Men without women நாவலை இது நினைவு கூர்வதாக உணர்கிறேன்
தன் இயல்பான கவர்ச்சியான உடல் காரணமாக ஒரு பெண் அனுபவிக்கின்ற உள அழுத்தத்தின் பன்முக பரிமாணங்களை கதை அழகாக கட்டியெழுப்பி நகர்ந்து சொல்கிறது. பணம் சம்பாதிக்க இருமுறை வெளிநாடு சென்று உழைத்து, மூன்று முறை திருமணம் முடித்த ஒரு முதிரிளம் பெண்ணின் கதை தான் இங்கு அகாலத்தில் நிழலாக கரைகிறது.
எல்லையற்ற வாழ்வியல் வறுமையும் போராட்டமும் காரணமாக 80 களின் ஆரம்பத்தில் தொடங்கிய, முஸ்லிம் பெண்களின் மத்திய கிழக்கு நோக்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு படையெடுப்பின் விளைவுகள் பற்றிச் சொல்கின்ற ஒரு அற்புதமான கதை. முஸ்லிம் சூழலை மையப்படுத்தியது.
இலங்கையின் கிழக்கு மாகாணம் முழுவதுமாக வாழ்கின்ற எண்ணற்ற கீழ்நிலை மற்றும் மத்தியவர்க்க முஸ்லிம் பெண்களின் அவலம் மிகுந்த வாழ்வின் துயரப் பெருங்கடலின் ஒரு சிறு துளி.
தம்மைச் சுற்றியுள்ள அதிகார வரக்கத்தினரின் வக்கிர, வழிசல், வஞ்சனை உணர்வுகளினால் அடிநிலைப் பெண்கள் அனுபவிக்கின்ற இருள் சூழ்ந்த துயர்நிறைந்த அனுபவங்களின் சிறு தொகுப்பு என்றாலும் தவறில்லை.
வரலாறு நெடுகவும் சூனியம் செய்பவர்களாகவும் குறி சொல்பவர்களாகவும் அமானுஷ்ய சக்தியும் ஆற்றலும் வசீகரமும் கவர்ச்சியும் நிறைந்தவர்களாகவும் ஆண்களின் காமப் பசி தீர்க்கும் படைப்புகளாகவும் பெண்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருப்பதை கண்டுள்ளோம்
அல்குர்ஆன் கூறும் இறுதி அத்தியாயங்களுள் ஒன்றான அல் பலக் வைகறை எனும் ஸூறா கூறுவது போல முடிச்சுகளில் மந்திரித்து ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்பது ஜாஹிலிய காலத்தை மட்டும் சார்ந்த ஒன்றோ என ஏற்க மறுக்கிறது மனம்
இங்கும் இத்தகைய வகையில் பெண்கள் வாசித்திருப்பதை வெளிப்படுத்துவதை காணலாம். அங்கும் பெண்களின் கீழ்நிலை அறியப்பட்ட ஒன்று. வரலாற்றுக்கு முந்தியும் பிந்தியும்
நவீனத்திலும் அது கடந்தும் பெண் மீதான வன் கொடுமை தீர்ந்த பாடில்லை
பில்லி சூனியம் பித்தலாட்டம் வசியம் செய்தல் போன்றன அனேகமாக பெண்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கப்பட்டிருக்கின்ற இந்த அதீத நம்பிக்கை ஆபத்தானதும் தான். இவற்றை விடுத்து, அதன் உளவியல் அம்சத்தில் மட்டும் அக்கறை கொள்பவர்களால், பெண்ணின் உடல் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற காட்டு மிராண்டித்தனமான அழுத்தங்களின் தீவிர விளைவாகவும் பரிமாண மாற்றமாகவும் இது நீள்கிறது. பெண்ணைப் பொறுத்தளவில் அவளுள் அற்புதங்கள் நிறைந்த கற்பிதங்களாக அமானுஷ்ய தன்மை ஒன்று தோற்றம் பெறுவதாக கருதப்படுகிறது. அத்தகைய ஒரு நிலையை இக்கதையின் பெண் பாத்திரமும் இறுதியில் அடைவதை காணலாம். இந்த ஜின் வசியங்களை பித்தலாட்டங்களை பூதாகரங்களை நம்புகின்ற அங்கீகரிக்கின்ற இறுதியில் அதற்கே பலியாகின்ற பாவப்பட்ட தரப்பும் பெண்கள் தான்.
உள்ளுக்குள் பொத்திப்பொத்தி வைத்த ஆயிரம் வாழ்வியல் கனவுகளோடும் இலக்குகளோடும் மத்திய கிழக்கு நோக்கி தொழில் நிமித்தம் செல்கின்ற ஒரு பெண், தன்னுடைய சொந்த வாழ்வு தவிர, தன்னை சார்ந்தவர்களின் மற்ற அனைத்துமே நிறைவேற பரிபூரண பங்களிப்புச் செய்து மகிழ்ந்து தன்னை உருக்கி வடித்து கரைகிறாள். அவளின் மீது ஒட்டுண்ணியாக சூழ வாழும் அவளது
அனைத்து உறவுகளுமே சுகம் பெறுகின்றனர்.
அவளது அயராத உழைப்பில் ஒவ்வொருவரும் தத்தமது பங்கிற்கு நன்மையும் சுகமும் அடைகின்ற நிலையில், அப்பெண்ணின் விருப்பம் மட்டும் கண் முன்னே பரிதாபமாக கரைந்துருகி வடிந்து பார்ப்பார் கேட்பாரற்று கைவிடப்படுகிறது.
அவளைப் பொறுத்தளவில் நிறைவேறாத ஆசையாக அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள வீட்டுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் ஒருமுறை வெளிநாடு சென்று விட்டால், போதும் பின் அதுவே இரண்டாம், மூன்றாம் முறை எனத் தொடர்கிறது. பழக்கமும் பரீட்சயமும் பெற்று விடுகிறது. அதுவே சாகும் வரையான வாழ்வாகி விடுகிறது
வெளிநாட்டு வாஹ்வின் சுகமும் குதூகலமும் வரையறுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வரமாக வாய்க்கிறது.
எத்தனை முறை சென்றாலும், அந்தப் பெண்ணின் விருப்பம் மட்டும் முழுமையாக நிறைவேறுவதில்லை. சில ஆண்களுக்குக்கும் அப்படி ஆவதுண்டு தன் வாழ்வை மங்கலமாக்கத்தவறிய மூன்றாவது கணவன் இரவோடு இரவாக வெளியேறியதில் இருந்து கதை தொடங்குகிறது. தகப்பனின் அக்கறையில்லா மௌனம், தாயின் அதட்டலுடன் கூடிய அறிவுரைகள், மூத்த சகோதரனின் மனைவியின் அதிகாரம், மூன்றாம் தரப்பின் அநியாயம் நிறைந்த தீர்க்ககரமான முடிவுகள், பிற உடன்பிறப்புகளின் அலட்சியத்துடன் கூடிய உதாசீனம் என்பவற்றுள், அந்த பெண்ணின் உணர்வுகளும் விருப்பமும் முற்றாக அமிழ்த்தப்பட்டு விடுகின்றன. இப்படி மெழுகாய் கரைந்து விடுகிறது அவளது வாழ்வு.
இந்நிலையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த விருப்பில், சொந்த உழைப்பில் வாழ முயற்சிக்கின்ற அவர், தனது குடும்பத்திற்கு வெளியே புதிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார். உலகில் எங்கு சென்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் உடலைக் குத்தித் துளைக்கின்ற ஆண்களின் காமப் பார்வைகளையும், அவர்களின் வக்கிர மொழிகளையும் சீண்டல்களையும் எல்லை மீறலையும் பெண் தனியே அனுபவிக்கிறார். எல்லாவற்றையும் தவிர்ப்பதற்காக உள்ள ஒரே வழி தனது இயல்பான உடலை கவர்ச்சி நீக்கம் செய்து அவலட்சணமாகவும் அசிங்கமாக முதிர்ந்து கிழடுதட்டியதாக வெளிக்காட்டுவது மட்டுமே என முடிவெடுத்து அப்படி செய்கிறார்.
இதனால் உளநிலையில் ஏற்படுகின்ற மனஅழுத்தம் அவரை அமானுஷ்ய உணர்வுநிலைக்கு ஆளாக்குகிறது. ஆண்களின் வக்கிரங்களில் இருந்து விடுபடுவதற்காக அந்த மத்திய வயதுப் பெண் தன்னை அகாலத்துள் கரைத்துக் கொள்கிறார்கள். இங்கும் பெண்ணோடு ஜின் இணைந்து விடுகிறது. ஒரு பெண் அனுபவிக்கும் பன்முகமும் பல்பரிமாணமும் நிரம்பி விழுந்து பட்டுத்தெறித்து நெஞ்சு படபடக்கும் குமுறலை ஆணாக நின்று ஜிப்ரி ஹாசன் எழுதியிருப்பது சிறப்பிற்குரியது. பெண்குலமே இதற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். கதையாசிரியரின் ஆழமான வாசிப்பு சமூக ஊடாட்டம்
அவதானம் அனுபவம் உற்றுநோக்கல் நேர்மை, வாழ்க்கை மீதான பற்று பிடிப்பு பிடிமானம் அக்கறை மானிட நேசிப்பு என எல்லாமே இங்கு ஒரே நேர் கோட்டில் வேறுபட்ட இடங்களில் உயிரோட்டத்துடன் தெறிக்கிறது.
அவருக்கு இலக்கியம் சமகாலத்தில் சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இயல்பாக அமைந்திருக்கிறது.
ஜிப்ரி மக்களின் அவலத்தை அவஸ்த்தையை
அந்தரத்தில் தொங்கும் அந்தரங்கத்தை அகாலத்தில் கரையவிடாது
நிஜபிம்பமாக மாற்றியுள்ளார் அவர் வாழும் சூழ உள்ள
சமுகம் மீதான கருணைப்பார்வை தான் இதற்கு வித்திட்டிருக்க வேண்டும். பருவமடையாத பக்குவப்படாத அரும்பு மீசை கூட முளைத்திருக்காத ஒரு விடலைப்பையனாக நின்று நான்கு
தசாப்த காலம் மூன்று கணவனுடன் வா(ழ்ந்த) வாழாத ஒரு மங்கையின் மனக்குமுறலை எப்படி கதைக்கூடாக கட்டியெழுப்பி நகர்கிறார் என்பதற்கூடாகவே ஜிப்ரியின் எழுத்தின் வலிமையை
அகன்ற வாசிப்பு எல்லேயை பன்முக
வாசிப்பை தீர்மானிக்க முடிகிறது.
இலங்கை வானொலியில் சனி தோறும் சமுக அவலத்தை குறுநாடகமாக்கும் கலாபூசணம் மஹ்தி ஹஸன் இப்ராஹிம் அவர்களது சஞ்சாரம் போல ஜிப்ரியின் அகாலத்தில் கரையும் நிழலின் ஒவ்வொரு கதையுமே சமுகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைவதாக உள்ளது
நூலின் நான்காம் கதை
கறுப்பு வெள்ளை, அனீதும் அமீரும் வந்து செல்வது போல ஒன்றாகத்தான் இந்தக் கறுப்பு வெள்ளை உலகும். நாம் பார்க்கும் அல்லது எமது கண்களுக்கு தோன்றும் கறுப்பு கறுப்பேயல்ல. அது வெள்ளையாகவும் இருக்கும் எமக்கு வெண்மையாக தோன்றுபவை இயல்பில் கன்னங்கரேலென்றும் இருக்கலாம். வாழ்வை அப்படித்தான் நின்று நிதானித்து நோக்கவும் பார்க்கவும் பழக வேண்டும். அவசரப்பட்டு வெளித்தோற்றத்தை வைத்து முடிவெடிக்கக்கூடாது என்பது கதை சொல்லும் பாடம்
அடுத்தது…
உறங்கும் சூபியின் இல்லம் உச்சோடைக்கல் அவுலியாட கப்ரடி மற்றும் அதிசயங்கள் குறித்த வாய்மொழிப்புராணங்கள் பற்றியது. கதையின் இறுதியில் இப்படி ஒரு paradigm shift வருமென்பது இடையில் தெரிந்தது. ஸூ பித்துவத்திற்கு இலங்கை வரலாற்றில் இஸ்லாம் பரவிய முறைவழிகளில் அழியாத தடம் உள்ளது. உலகளவிலும் ஆத்ம ஞானிகளுக்கு அசாதாரண ஆற்றல்கள் இறை நெருக்கத்தால் அருளாக கராமத்தாக (அற்புதமாக) கிடைத்தன என்பதை மறுக்க முடியாது தான். ஆனாலும் இலங்கை சூழலில் உள்ள நடைமுறை சார்ந்த சமய கொதி நிலையில் தன்னோடு வந்த எதிலும் தீவிரமற்ற ராபி இந்த இறுதி முடிவுக்கு வந்தாலும் வாஸ்தவத்தில் அப்படி நிகழும் சந்தர்ப்பம் அமைவது குறைவு. அது தூர விலகிய ஒன்று.
ஆனாலும் சூபிகள் குறித்த ஊரிப்போன பதிவை உண்மைப்படுத்துவதாக கதை உள்ளது
அடுத்தது முடிவற்ற கண் இலேசாக கிழக்கிலங்கையின் குரூர யுத்த யுத்த சூழல் குறித்த ஒரு குறும்பார்வையை தருவதாக உள்ளது.
ஆனால் பாத்தும்மா எனும் இடியப்ப ராத்தாவின் மனிதாபிமானத்துக்கு விரோதமாக நடந்தவர்களுக்கும் காட்டிக்கொடுத்து கூதல் காய நினைத்தவர்களுக்கும் அவர்களது வாரிசுகள் மூலமாக கிடைத்த இறை கோபமும் சாபமும் நிறைந்த அகோர தீத்தண்டனையை அவளின் சாபத்தை
தான் தன் முடிவற்ற கண்களால் இன்றும் உற்றுநோக்குகிறாள் பாத்தும்மா.
காசிம்களும் மர்ஸானிகளும் தான் காலங்காலமாக இஸ்லாமிய வரலாற்றில் வரும் கொடுங்கோலர்களான அபூ லஹப்களாக அநியாயத்துக்கு துணைபோகும் அவரின் துணைவியான
உம்மு ஜமீல்களாக பரிணாமம் பெறுகின்றனர் இத்தகைய மர்ஸானிகள்.
கதையில் கூட அசிங்கமாக வரும் ஜமீலா பாவப்பட்டவள் தான்
உம்மு ஜமீல் போன்ற மர்ஸானிக்கு பிறந்ததால்…..
அடுத்த கதை அகநதி அடக்கி வைத்த அழுத்தங்களனைத்துமே
இனியும் அடங்க மறுத்து பீறிட்டு பிரவாகித்து பாய்வதாகத்தான்
அகநதி பாய்ந்தோடுகிறது ஒரு நதி மலை உச்சியில் சுனையாக ஊற்றெடுத்து உருவெடுத்து முட்டி மோதி வளைந்து நெளிந்து
தென்படும் திக்கு திசையெல்லாம் பொறுமையுடன் முன்னோக்கி பயணித்து திரும்பி கடலில் சங்கமித்து ஆசை தீர்ப்பது போலத்தான் அலாவும் தன் ஆசையை இறுதியில் தீர்க்கிறான்.
அனீபாவும் மனாபும் வெறும் குறியீடுகளே நியூற்றனின் மூன்றாம் விதி மூர்க்கமாக மறுவடிவமெடுப்பதாக கருத முடியும் இருப்பினும் அடக்கி அழுத்தமாக வைத்த பிந்திய உணர்வுகளை கிளறிவிட்டதன் வேறு வெளிப்பாடாக உருக்கொண்டு அலாவின் ஆசை அகநதியாகி ஓடி முடிந்து அடங்கிவிடுகிறது. யாருமே கண்டு கொள்ளாத வகையில் கவலைப்படாத வகையில் சமுகத்தில் இன்னும் கூட ரகசியாமாக இத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து வருவதும் கண்கூடு
அடுத்த கதை கல்விளக்கு வழியாக இனவாதம் கக்கப்படும் விதமும் சகவாழ்வு காக்கப்படும் விதமும் குறித்த காதல் சார்ந்த பதிவொன்று முன்வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கை சூழலில் அரசியல் பொருளாதாரம் எதிர்காலம் இன்ன பிற காரணிகளுக்காகவும்
இனவாதத்தீ மூட்டப்படுகிறது அதே போல சகவாழ்வும் பேணப்படுகிறது என்ற இரு துருவ முரண்பாடுகள் நிலவுகின்றன.
அடுத்த கதையான சின்ன மீன்கள் ரஷ்ய புரட்சியை
அதன் பிரதான விசையான லெனினை நினைவூட்டி
இளவல்களுக்கு துடிப்பும் துடினமும் தரத்தக்கவகையில்
இறுதியில் கதாநாயகன் மொஹிடீனுக்கே அலுப்பும் சலிப்பும் தட்டி தூர்ந்து போகும் ஒன்றாக நகர்கிறது.
லெனினுக்கு மரணமில்லை எனும் மரியா பிரிலெழாயவாவின்( பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்த நூல்) நூல் ஏற்படுத்திய தாக்கமும் அதிர்வுமே கதைவழியே எதிரொலிக்கிறது ஒரு புத்தகம் எத்தகைய அசரீரியை அதிர்வை உண்டு பண்ணும் என்பதற்கு இது சான்று.
புரட்சித்தூண்டிலில் இரையாக சிறிய மீன்கள் சிக்கிக்கொள்கின்றன இறுதியில் தூண்டிளிட்டவான் தலைமறைவாகி அயர்ந்து விட சின்ன மீன்கள் துடிப்புடன் துள்ளிக்குதிக்கின்றன.
மக்ஸிம் கோகியின் தாயையும் அதில் வரும் கதாநாயக நாயகிகளையும் சிறிய மீன்களும் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது பாவெல் பாஷா சமோய்லவ் என நூலில் அடிக்கடி வந்து செல்லும் ரஷ்ய நாமங்கள் கண் முன் தோன்றும்.
ரஷ்ய புரட்சியை ஏற்க மறுப்போருக்கும் எதிரப்போருக்கும்
எகிப்து மற்றும் பாகிஸ்தானிய இயக்கங்கங்கள் என்ன பெரிய மாற்றத்தை கொண்டுவந்தன எனும் குறுக்கு வினா பல கோணங்களிலும் சிந்திக்க வைக்கிறது
ஸூபித்துவத்துக்கும் (Sufism/Islamic mysticism) ஏகத்துவத்துக்குமிடையிலான monotheism மிதவாத போக்கை உறங்கும் ஸூபியின் இல்லத்தில் கண்டாலும் இங்கு அது புரட்சியின் வடிவம் பெற்ற மூரக்கத்தனம் வாய்ந்த விட்டுக்கொடுக்கவோ சமரசம் செய்யவோ compromising முடியாத போராட்டமாகே வடிவமைக்கப்பட்டுள்ளது.
“கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அதுவே மாபெரும் சக்தி ”
எனும் லெனினின் கருத்து புத்தக பூச்சான மொஹிதீனுக்கு மட்டுமல்ல வாஸ்தவம் புரியாத எல்லோருக்கும் தான்
பெருஞ்சலணம் கல்வியியல் கற்றல் கற்பித்தல் சார்ந்த சவால்களுடன் கூடிய பின்புலம் கொண்ட கதை மாணவர்களையும் புதிதாக வந்த ஆசிரியர்களையும் அங்கீகரிக்க மறுக்கும் நசீலா அவளால் பாகுபாடு காட்டப்படும் மாணவர்கள் என கதை பயணிக்கிறது. விசேட தேவை உள்ள ஒரு சிறு மாணவன் தன்னை ஈர்த்த மிகவும் கவர்ந்த குற்றமிழைக்காத புதிய ஆசிரியரின் பழிவாங்கல் இடமாற்றலை அறியாமல் அவரது வரைவை எதிர்பார்த்து ஏங்கும் ஒரு மாணவனின் தற்கொலை வரை கதை நீள்கிறது. இங்கு தான் அனைத்து கனவுகளும் தவிடு பொடியாகி அகாலத்தில் நிழலாகி கரைகிறது.
இது திமிர் பிடித்த ஆசான்களுக்கு நெற்றியடி. கரீம் சேர் ஒரு வகையான ராட்சசி போன்ற ஜோதிகா தான்
வகுப்பறை முகாமை Child friendly school, Best teacher போன்ற விருதுகளை கரீமுக்கு வழங்கலாம்.
ஆக மொத்தத்தில் அகாலத்தில் கரைந்த நிழலில்
சமுகத்தின் ஒட்டு மொத்த அவலத்தின் பரிமாணமும்
பட்டவர்த்தனமாக பட்டுத்தெறிக்கின்றன. அகாலத்தில் கரைந்த நிழல்கள் காற்றுசுமந்து வரும் கனவின் வலிகள். சமூகத்தின் கண்களுக்கு புலப்படாத கொடுமைகள். ஆன்மாக்களின் ஈரத்தை வற்றச் செய்யும் வன்மங்கள். வக்கிரங்களின் வகைமாதிரிகள்.
கதைகளுக்கூடாக சமூகத்தின் ஆழ் மனதில் அதிர்வை ஏற்படுத்தும்
ஜிப்ரிக்கு மீண்டும் பெரிய
வாழ்த்துக்கள்.
✍🏻 M.M.A.BISTHAMY
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…