கலாநிதி எம்.ஐ.எம். அமீன்
இம்மூன்று தலைவர்களும் தத்தம் கால முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு தரத்துக் கல்வித் தேவைகளை அறிந்திருந்தார்கள் என்பதை அவர்களது சிந்தனையும் செயற்பாடுகளும் புலனாகின்றன.
சமய சூழலில் முஸ்லிம்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையே மூவரும் பின்பற்றியிருக்கிறார்கள். இச்சிந்தனையை சித்திலெப்பை உருவாக்கி, தான் ஏற்படுத்திய தனியார் பாடசாலைகளில் அறபு ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமித்து பாடத்திட்டத்தில் அறபு, இஸ்லாம் பாடங்களை உள்ளடக்கி பாடப்போதனைகளை நடத்தினார்.
அடுத்து வந்த சேர் றாசிக் பரீத் அவர்கள் அரசாங்கப் பாடசாலைகளில் அறபு ஆசிரியர்களுக்கு நியமனம் பெற்றுக் கொடுத்து சமய சூழலை அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் தொடர்ந்து காத்தார். அறபு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியை பதியுத்தீன் மஹ்மூது அவர்கள் பெற்றுக் கொடுத்து அவர்களைத் தகைமை படைத்தவர்களாக்கி சமய சூழலை வளர்க்க நடவடிக்கை எடுத்தமை மூவரின் சிந்தனையிலும் இருந்த ஒற்றுமையைக் காட்டுகிறது.
சித்திலெப்பை முஸ்லிம் பிள்ளைகளுக்கான பாடநூல்களை எழுதி வெளியிட்டதும், இஸ்லாமிய சிந்தனையைக் காப்பதற்காக பாடநூல் சபையில் முஸ்லிம்களுக்கு அங்கத்துவத்தை சேர். றாசீக் பரித் பெற்றுக் கொடுத்ததும், இஸ்லாம் பாடப்புத்தகங்கள், வழிகாட்டல் நூல்கள் என்பவற்றை வெளியிடுவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பதியுதீன் மஹ்மூதவர்கள் நடவடிக்கை எடுத்ததும் நோக்கத்தக்கதாகும்.
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியைத் துரிதப்படுத்த அரசின் ஆதரவு அவசியம் என்பதில் மூவரும் கருத்தொற்றுமை கொண்டிருந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் அறிஞர் சித்திலெப்பை கல்விப் பணிகளை ஆரம்பிக்கும் போது முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் சட்ட நிருபண சபையில் இல்லாதிருந்ததால் அதற்காகப் போராடியே அதனையும் பெற்றார். அவர்களுடன் நல்லுறவைப் பேணி அரச ஆதரவாளராக இருந்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தார்.
சேர். றாசிக் பரீத் (1936–1947) சட்ட சபையிலும் (1947-–1952) செனட் சபையிலும் (1952-–1970) பாராளுமன்றத்திலும் அங்கத்துவம் வகித்து அரச செல்வாக்குடன் கல்விப் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
மாணவர் பருவ முதல் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை பதியுதீன் மஹ்மூத் கொண்டிருந்ததால் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய வாதிகளின் நண்பர்களாக செயல்பட்டதை சகிக்க முடியவில்லை. ஆகையால் முன்னைய இருவரைப் போல ஆட்சிசெய்த கட்சிகளுடன் இணைந்து சென்று செயற்படாது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்துழைத்தார்.1956 க்குப் பின் அரசியலில் தனக்கெனத் தனியான ஓரிடத்தை முயற்சித்துப் பெற்று அதன் மூலம் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு உழைத்ததைக் காண முடிகிறது.
மூவருமே முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பணிகளையும் ஏனைய நலன்களையும் பேணுவதற்காக தமக்கெனத் தனித்தனி சங்கங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். அறிஞர் எம்.சி.சித்திலெப்பை “ஜம்இய்யத்துல் இஸ்லாமிய்யா” எனும் சங்கத்தை ஸ்தாபித்தார். சேர் றாசிக் பரீத் அவர்கள் சோனகர் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவராக இருந்தார். பதியுதீன் மஹ்மூத் அவர்கள் “இஸ்லாமிய சோசலிச முன்னணியை” அமைத்துக் கொண்டிருந்தார்.
எம்.சி.சித்திலெப்பை கொழும்பின் உயர் குழாத்தைச் சாராதவர் ஆதலால் சமூகத்தின் அரசியற் தலைமைத்துவத்துக்கு தேவையான தகைமைகள் அவரிடமிருந்த போதும் அரசியல் தலைமைத்துவத்தை அவரால் அடைய முடியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முடிசூடாத் தலைவராக இருந்த போதும் அறிஞர் என்றே அங்கீகாரம் பெற்றிருந்தார்.
சேர்.றாசீக் பரீத் அவர்கள் கொழும்பின் முஸ்லிம் தலைமைத்துவக் குழுவைச் சார்ந்தவர். முன்னாள் சட்டசபை உறுப்பினர் டப்ளிவ். எம். அப்துர் ரகுமானின் மகன். இதனால் முஸ்லிம்களின் மரபு ரீதியான தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் அவருக்கு இருந்தது. பதியுதீன் மஹ்மூதவர்கள் கொழும்பு தலைமைத்துவக் குழுவைச் சாராதவர். கொழும்பு அரசியற்குழுவின் சிந்தனைக்கு முரண்பட்டு அரசியலில் தனக்கெனத் தனிவழியமைத்துக் கல்வி அமைச்சர் பதவி வகித்து சமூகத்துக்குப் பணிபுரிந்தார்.
அறிஞர் எம்.சி.சித்திலெப்பை உலகியல் அறிவும் சமய ஞானமும் அறபு மொழி அறிவும் உடையவர். மெய்ஞ்ஞான சிந்தனையால் கவரப்பட்டவர். பன்னூலாசிரியர் பத்திரிகையாளர் நாவலாசிரியர். நவீன முஸ்லிம் சிந்தனையாளர்களின் சிந்தனைப் போக்கினை கொண்டிருந்தவர். ஆதலால் சமூகத்தின் கூட்டுமொத்த வளர்ச்சியை அவர் கருத்திற் கொண்டிருந்தார்.
இம்மூவரும் தமக்கேயுரிய பாணியில் முஸ்லிம்களின் கல்வி விருத்திக்கு முயற்சித்து தமது செல்வம், அறிவு, அரசியல் ஆதிக்கம் என்பவற்றை அர்ப்பணித்து முஸ்லிம்களின் கல்வி கலாச்சார எழுச்சிக்கு உழைத்துள்ளார்கள் என்பதில் கருத்து வேற்றுமைகள் இல்லை.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்தி லெப்பை நூலிலிருந்து…
-Vidivelli