Cultural Events

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவேண்டி ஏற்பட்டால்…

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவேண்டி ஏற்பட்டால்...

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையின்றி முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

நீதி அமைச்சருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த ஜனவரி மாதம் திங்கட்கிழமை (27) திகதி நீதி அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பரும் பங்கேற்ற இந்த சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள எமது அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கமைய முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது விரிவான கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அச்சமயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனை நிச்சயம் பெறப்படும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனை இன்றி முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் ஒருபோதும் திருத்தங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண்கள் குழுவொன்றே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு எமக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திக்கும் நடவடிக்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தற்போது ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்தித்து முஸ்லிம் சமூகம் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சந்திப்புகளை மேற்கொண்டது.

இந்த சந்திப்புக்களின் போது அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பும் அமைச்சர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜுடனான சந்திப்பின் போது திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது அமைச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமைச்சர் சரோஜா தெரிவித்ததுடன் நீதி அமைச்சிற்கு எமது பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழியப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியொரு சமூகத்தினை மாத்திரம் இலக்குவைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டிலுள்ள அனைத்து பெண்களின் நலன்களையும் கருதியோ எமது ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் தான் ஆற்றிய உரை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் அமைச்சர் சரோஜா போல்ராஜ் வருத்தம் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top