2024 பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகிறது.
இந்த அபாயகரமான நிலையில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில், கடந்த இரு தினங்களாக ஆய்வு அமர்வு ஒன்று கண்டியில் இடம்பெற்றது. உலமாக்கள், முக்கிய பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்கள், கல்விமான்கள், அரசியல் அவதானிகள், அரசியல் விமர்சகர்கள், கண்டி முஸ்லிம் சிவில் சமூகப் பேரவை, இஸ்லாமிய நிறுவனங்கள், நாட்டின் அரசியலை நிர்ணயிக்க வல்ல வர்த்தக பிரமுகர்கள், இதர சமூக ஆர்வ அமைப்புக்கள் என பல புத்திஜீவிகள் கலந்து கொண்டு இவ் அமர்வில் ஆய்வில் ஈடுபட்டனர்.
இவ்ஆய்வில் இம்முறை பொதுத்தேர்தலில் ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றின் அத்தியாவசியம் பற்றி ஆராயப்பட்டதுடன், சமூகத்தின் இராஜதந்திர பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் ஆராயப்பட்டது.
அதேவேளை, மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் ஒருங்கிணைந்து சுயேட்சைக் குழுவில் களமிறக்கியுள்ள பிரபல்ய வேட்பாளர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் பொறுப்பு பற்றியும் ஆராயப்பட்டது.
இவ் அமர்வின் முடிவில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அதை சமூகத்துக்கு தெளிவூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக, அவ் ஆய்வுக் குழுவினரால், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பதியப்பட்ட சுமார் 172,000 வாக்குகளில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஆய்கையில், உத்தேசமாக அளிக்கப்படவுள்ள சுமார் 130,000 முஸ்லிம் வாக்குகளே பிரதிநிதிகளை தெரிவுசெய்ய பயன்படும் வாக்குகளாக இருக்கப் போகின்றன.
ஆளும் தரப்பு, எதிர்த் தரப்புகள் மற்றும் இதர தரப்புகளுக்கும் இந்த வாக்குத் தொகை பிரிந்து சிதறும் நிலை காணப்படுவதால், முஸ்லிம்கள் வாக்களித்த போதும், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படுகின்ற ஒரு அபாயகரமான நிலை காணப்படுகிறது.
இவ் அபாயத்தில் இருந்து விடுபடுவதாயின், முஸ்லிம்கள் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி, 150,000 க்கும் அதிகமான வாக்குகளை அளிக்க முன்வரவேண்டும் என்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்துக்கு தெளிவூட்ட வேண்டும்.
மற்றும், ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது. முஸ்லிம்கள் ஆளும் தரப்புக்கு வாக்களித்ததை நிரூபிக்க உள்ள ஒரே வழி அது மாத்திரமாகும். அதுவே சமூகத்துக்கான பாதுகாப்புமாகும்.
அதேபோல், பிரதான எதிர்த் தரப்பில் உள்ள அரசியல் முதிர்ச்சி கொண்ட இராஜதந்திர பிரதிநிதித்துவமும் மிக முக்கியமானது. அவ்வாறே, சமூக அமைப்புகள் களமிறக்கி அடையாளப்படுத்தியுள்ள ஆளுமை கொண்ட இளம் பிரதிநிதித்துவங்கள் இரண்டும் உள்வாங்கப்படுதலே, மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு உள்ள முக்கிய வழியாகும்.
ஏலவே, 2010 பொதுத்தேர்தலில் நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை திட்டமிட்டு உள்ளனுப்பிய முன் அனுபவம் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு உண்டு.
அதேபோல், சமூகத்தின் அவசியம் பற்றி நன்கு உணர்ந்து, உங்கள் குடும்பங்களில் உள்ள 150,000கும் அதிகப்படியான வாக்குகளை திட்டமிட்டு அவசியமான, வெல்லக்கூடிய வேட்பாளர்களுக்கு மட்டும் பிரித்து அளிப்பதன் மூலம் மூன்று அல்லது நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அடைந்து கொள்ளக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு இம்முறை தேர்தலிலும் காணப்படுகிறது.
அதுவல்லாமல், வெற்றியீட்ட முடியாத முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் விழலுக்கு இறைக்கும் நீராக பிரயோசனம் அற்றுப் போகும். மட்டுமன்றி, உள் நுழையக்கூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதோடு, நீங்கள் எதிர்பார்க்காத வேறு பிரதிநிதித்துவம் உருவாக உங்கள் வாக்குகள் காரணமாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பொதுமக்களைத் தெளிவூட்டும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளதன் சாரமானது, வாக்களிப்பு தினத்தில் எல்லோரும் அதிகபட்ச வாக்குகளை அளிக்க ஆர்வமாக முன்வருவது மிகவும் அவசியமானது.
அந்த வாக்குகளை ஆளும், எதிர், சுயேட்சை தரப்புகளில் உள்ள வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மட்டும் தங்கள் வீடுகளில் உள்ள வாக்குகளை கட்சி பேதமின்றி ஒற்றுமையாக, சமமாக பகிர்ந்து அளிப்பது அதைவிட அவசியமானது.
வெற்றி பெறமுடியாத கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை தாரை வார்த்து வீணடிக்காமல் இருப்பது குறித்து ஒவ்வொருவரும் மிக மிக கவனமாகச் சிந்தித்து செயல்படுவது மிக முக்கியமானது.
இதுவே, சமூகத்துக்கு தேவையான முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டு, சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய சிறந்ததும், பொருத்தமானதுமான செயற்பாடாகும்.
கண்டி முஸ்லிம் சிவில் சமூகப் பேரவை.
– – – – – – – – – – – – – – – – – –
மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.