எஸ்.என்.எம்.சுஹைல்
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டும் என்ற தீர்மானம், அதனால் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக் கட்டாயமாக எரிக்கப்பட்டது என்பதை வலியுறுத்தும் ஆவணத் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது அமான் அஷ்ரபின் ‘ஓட்டமாவடி’ ஆவணத் திரைப்படம்.
அமான் அஷ்ரஃப் இயக்கிய ‘ஓட்டமாவடி’ ஆவணத் திரைப்படம், கடந்த புதன் கிழமை (10 ஆம் திகதி ) One Galle Face PVR திரையரங்கில் விஷேட காட்சியாக வெளியிடப்பட்டது. இதில், நாட்டின் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பிரமுகர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொவிட்-19 பெருந் தொற்றின் போது இலங்கை முஸ்லிம் சமூகம் நடத்திய போராட்டத்தின் சொல்லப்படாத கதையின் மூலம் பார்வையாளர்களை ஒரு கவலையான பயணத்தில் இந்த ஆவணப்படம் அழைத்துச் செல்கிறது. வைரஸால் இறந்தவர்களின் கட்டாய தகனங்கள் மூலம் அவர்களின் குடும்பங்கள் பட்ட மனவேதனையையும் இவ் ஆவணப்படம் எடுத்துக்காட்டத் தவறவில்லை.
2019 இன் பிற் பகுதியில் உருவான கொவிட் 19 வைரஸ் உலகளவில் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதனால் சுமார் 17000 இலங்கையர்களின் உயிர்கள் காவுகெள்ளப்பட்டன. இதன் அச்சுறுத்தலை இலங்கையர்கள் எல்லோரும் அனுபவித்தனர். என்றாலும், கொவிட் அதிகம் காயப்படுத்தியது முஸ்லிம்களைத்தான். இஸ்லாமிய சமய அடிப்படையில் ஜனாசாவுக்கான இறுதிக் கடமைகளை நிறைவேற்ற அரசாங்கத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டது. உலக நியதிகளுக்கு மாறாக இலங்கை கடுமையான தீர்மானங்களை எடுத்து முஸ்லிம்களை வஞ்சித்தது என்பதை இந்தத் திரைப்படம் காட்டி நிற்கிறது.
இயக்குனர் அமான் அஷ்ரஃப் இந்த ஆவணப் படத்தை இயக்குவதற்கான உந்துதலை இவ்வாறு வெளிப்படுத்தினார். “எனது சமூகத்தைப் பற்றி பேசும் கதை என்பதால் இது ஒரு முஸ்லிம் கதை அல்ல, மாறாக ‘ஓட்டமாவாடி’ ஆவணப்படம் முழு இலங்கை பிரஜைகளினதும் கதை என்பதை வலியுறுத்த முற்படுகின்றேன். அதுமட்டுமல்லாமல், பல தரப்பட்ட இன மற்றும் மதப் பின்னணிகளைக் கொண்ட இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆவணப்படுத்த தொழில் வல்லுநர்கள் பலரும் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பின் விளைவே இந்த திரைப்படமாகும். இது வருங்கால சந்ததியினருக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்ததனாலேயே கதையை உருவாக்கினேன். இதுபோன்ற கதையை உருவாக்கியதால் எதிர்காலத்தில் இன்னுமொரு கொடூரம் அரங்கேறுவதை தடுக்கலாம் என நம்புகிறேன்” என குறிப்பிடுகின்றார்.
பிளாக் காபி பிலிம்ஸ் தயாரித்த, “ஒட்டமாவடி” ஆவணப்படம் சமூகப் பிரதிநிதிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் நேர்காணல்கள் மூலம் இந்த வலுக்கட்டாய தகனத்தை ஆழமாக ஆராய்கிறது.
குறிப்பாக ஐ.நா.வின் விஷேட பிரதிநிதி ராதிகா ஆனந்த குமாரசுவாமி, அமைச்சர் அலிசப்ரி, பாகிஸ்தான் நாட்டுக்கான இலங்கையின் முன்னாள் கொன்சியூலர் அப்சல் மரிக்கார், பேராசிரியை பஸீஹா நூர்தீன், ஜம்இய்யதுல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி, மேமன் சங்கத் தலைவர் யாசீன் பத்தாஹி, பேராசிரியர்களான அத்துல் சேனாரத்ன, கமால் ஐ.டீன், ஏ.எச். சரீப்டீன், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்டவர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன், எரிக்கப்பட்ட 21 நாள் குழந்தையின் பெற்றோர்கள், கண்டியில் உயிரிழந்த பெண்ணொருவரின் குடும்பத்தாரின் நேர்காணல்களின் காட்சிகள் திரையில் தோன்றியபோது, கண்களிலிருந்து கண்ணீர் கசிவதை தடுக்க முடியவில்லை.
அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர் ‘ஓட்டமாவடி’ யிலுள்ள மஜ்மா நகரில் கொவிட் ஜனாஸாக்களை பிரத்தியேகமாக அடக்குவதற்கான இடம் ஒதுக்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டே ‘ஓட்டமாவடி’ என்ற பெயர் இந்த ஆவணப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாக கருதலாம்.
“ஓட்டமாவடி” இலங்கையின் ஆவணத் திரைப்பட பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்புதும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த படத்துக்கு பல்வேறு விமர்சனங்களும் இல்லாமல் இல்லை, குறிப்பாக ஜனாஸா எரிப்புக்கு எழுந்த பலமான மக்கள் எதிர்ப்பை இந்த ஆவணப்படம் உள்ளீர்க்கத் தவறியுள்ளது. அதிலும் குறிப்பாக மங்கள சமரவீர ஆரம்பித்த ‘கபன் துணிப் போராட்டம்’ பற்றி எந்தவொரு காட்சியும் இதில் இடம்பெறவில்லை.
அத்துடன் இந்த ‘ஓட்டமாவடி’ ஆவணப்படத்தின் ட்ரைலரில் காண்பிக்கப்பட்ட மு.கா. தலைவர் ஹக்கீமின் உரையை, திரைப்படத்தில் காண முடியவில்லை. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்யன் ஆகியோரின் உரைகள் சில செக்கன்கள் திரையில் காண்பிக்கப்பட்டாலும் அவர்களைப் போன்று பாராளுமன்றில் மிகவும் காரசாரமாக பேசிய முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஏனைய அரசியல் தலைமைகள் வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விகளும் எழுகின்றன.
இதற்கு அப்பால், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அர்ப்பணிப்புகள் காண்பிக்கப்பட்டன. எனினும், இந்த ஜனாஸா விவகாரத்தில் தன்னார்வமாக செயற்பட்ட ஹுஸைன்போல்ட் போன்றவர்களும், மஜ்மா நகரில் செயற்பட்ட பல்வேறு தரப்பினரது பங்களிப்பு பற்றியும் இந்தப்படம் போதியளவு பேசத் தவறிவிட்டது.
இந்த வலுக்கட்டாயத் தகனமானது நிபுணர்கள் குழுவின் பிழையான வழிநடத்தல் என்பதை சுட்டிக்காட்டும் இந்த ‘ஓட்டமாவடி’ ஆவணப்படம் ராஜபக்சாக்களின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையே இது என்பதை அழுத்தமாக கூறவில்லை என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இது பற்றி பதிவொன்றை எழுதியிருக்கும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, இந்தப் பிரச்சினை உண்மையில் ஆட்சியில் இருந்த இனவாதிகளின் முஸ்லிம்கள் மீதாக பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறியிருக்கிறார்.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவருடன் இருந்தவர்களும் தேர்தலின் போது முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் தமக்கு வாக்களிக்காததால் அவர்களை தண்டிப்பது பொருத்தமானது என்று நினைத்தனர். இந்த இனவாத , மதவெறி , மனிதாபிமானமற்ற பார்வையின் விளைவாகத்தான் முஸ்லிம்களில் இறந்தவர்களை தகனம் செய்யும் தீர்மானத்தை பலவந்தமாக திணித்தனர். அன்றைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிகளும் இந்த முடிவுகள் எந்த பகுத்தறிவுக்குட்பட்ட காரணத்தினாலும் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை நன்கு தெரிந்தும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தனர். பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் எந்த ஒரு சமூகத்திற்கும் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும் இதைத்தான் நாம் சித்தரிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் ஓட்டமாவடி’ ஆவணப் படத்தின் ஊடாக அமான் அஷ்ரப் மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். என்றாலும் அவரது இந்த முயற்சியின் விளைவாக திரைக்கு வந்திருக்கும் படம் ஆங்காங்கே சில விமர்சனங்களையும் விட்டுத்தான் சென்றிருக்கிறது எனலாம்.
இத்திரைப்படம் விரைவில் நாட்டின் முன்னணி திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இது பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்பதாக பிளாக் காபி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.- Vidivelli
– – – – – – – – – – – – – – – – – – –
மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.