கொரோனா வைரஸின் தாக்கத்தை அடுத்து மஸ்ஜித்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச அளவில் lockdown முடக்கத்தைத் தொடர்ந்து, பொது ஸ்தாபனங்கள், போக்குவரத்து உட்பட மஸ்ஜித்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மஸ்ஜித்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வணக்கத்தில் ஈடுபடக் கோரியதுடன் ‘Stay Home’ திட்டம் பற்றியும் அடிக்கடி மக்களை அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றன.
COVID-19 வைரஸ், மில்லியன் கணக்கில் தொற்றை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கில் மரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மஸ்ஜித்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி live-stream மூலம் அறிவுறுத்தல்களையும் பிரசங்கங்களையும் வகுப்புக்களையும் வழங்கிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இக்கட்டான காலகட்டத்தில் சமய நிறுவனங்களின் பணி இவ்வாறு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஏழைகளின் நலனையும் கருத்தில் கொண்டு அமைய வேண்டியது அவசியமாகும்.
இன்றைய வைரஸ் தொற்று சூழ்நிலையில், உலக அளவில் முக்கிய மஸ்ஜித்கள் எவ்வாறு பங்காற்றி வருகின்றன என்பதை நோக்குவோம் :
::புனித கஃபா ஹரம் ஷரீப்::
வைரஸ் தொற்றைத் தொடர்ந்து மார்ச் 19 ஆம் திகதியில் இருந்து சவுதி நிர்வாகம், இரு புனித மஸ்ஜித்களான ஹரம் ஷரீபிலும் மஸ்ஜிதுன் நபபியிலும் பொது மக்களின் வணக்க வழிபாட்டுக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தியது.
முதலில் கஃபாவின் அருகில் இருந்து வழிபடுவது ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டது. பின்னர் கஃபாவின் மையத்தில் க்யூப் வடிவ அமைப்பில் இருந்து வழிபாடு நிகழ்த்தப்பட்டு அதுவும் மட்டுப்படுத்தப்பட்டது. அதே போன்று வருடாந்தம் 7 மில்லியன் மக்களால் நிறைவேற்றப்படும் உம்றா யாத்திரையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதே நேரம் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஹஜ் வணக்க வழிபாடும் இம்முறை நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
புனிதத் தளங்கள் இரண்டிலும் சேவையாற்றுபவர்கள் மாத்திரம் அங்கு காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தொழுகைக்கான அதான் அழைப்பில் வீட்டில் இருந்தே தொழுதுகொள்ளுங்கள் என்ற வரியும் தற்போது உள்ளடக்கப்பட்டு, அதான் கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைகள் இரு புனிதத் தளங்களிலும் நடைபெறாத நிலையில் சில மஸ்ஜித்கள் online மூலம் live-stream முறையூடாக ஒளிபரப்புச் செய்கின்றன.
ஏப்ரல் 2 இல் இருந்து முழு நேர ஊரடங்குச் சட்டத்திற்கு மக்காவும் மதீனாவும் உட்பட்டு வருகின்றது. உணவுக்காகவும் மருந்துக்காகவும் தவிர எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
:: பலஸ்தீன் அல்-அக்ஸா பள்ளிவாசல் ::
பலஸ்தீன் அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுகை நடவடிக்கைகள் மார்ச் 23 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டது.
முழுமையான தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் மஸ்ஜித்தின் வெளிப்புற வளாகத்தினுள் தொழுகை நடவடிக்கைகள் இடம்பெற்றன. இது முஸ்லிம்களின் 3வது புனிதத் தளம் என்பதோடு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையை மேற்கொண்ட இடம் என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
தற்போது ஊழியர்கள் தவிர்ந்து, அல்-அக்ஸா பள்ளி முழு வளாகமும் மூடப்பட்டுவிட்டது. அதேபோன்று அதான் கூறும்போது வீட்டில் இருந்து தொழுமாறு அதான் கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் குத்பா பிரசங்கம் இடம்பெறுவதிலை. அல்-அக்ஸா இமாமும் ஊழியர்களும் மாத்திரம் ஜும்மா நடாத்துகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் அல்-அக்ஸாவுடன் இணைந்திருப்பதை உணர, பாதுகாப்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் மற்றும் பிரார்த்தனைகளை இச் செய்தி பதியப்பட்ட காலப்பகுதிவரை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.