சமய நம்பிக்கையும் கடவுள் கோட்பாடும் கொண்ட ஒவ்வொரு சமூகத்துக்கும் அந்தந்த சமய கிரியைகளை நிறைவேற்றும் இடங்களாக, புனித தலங்களாக சமய ஸ்தலங்கள் காணப்படுகின்றன. கருதப்படுகின்றன. அவை புனிதமானவை. புண்ணிய கருமங்கள் செய்யப்படும் கண்ணியமான இடங்கள். அவற்றின் புனித தன்மையில் கை வைக்க யாருக்கும் அருகதையோ, அனுமதியோ இல்லை. அவை பாதுக்காக்கப்பட வேண்டும். இஸ்லாம் அதற்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது. அவற்றின் புனிதம் என்றும் பேணப்பட வேண்டும்.
பூமியில் உள்ள அத்தகைய இடங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு. அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் மைய நாடியாக தொழிற்படுவது பள்ளிவாயில்கள் தான். பள்ளிவாயில்கள் வெறும் தூண்களும் சீமெந்து கலவையும் கூரையும் கொண்ட கட்டடங்கள் அல்ல.
அவை இறை தரிசனம் நிகழும் புண்ணிய இடங்கள். மலக்குமார்கள் வானவர்கள் என்றும் இறைவனை வழிபடும் தலங்கள். முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் வேறெந்த சமூக நிறுவனமும் பெறாத கண்ணியத்தை அந்தஸ்தை அது பெற்றுள்ளது. இறை இல்லங்கள் குறித்து முஸ்லிம்களின் நோக்கும் போக்கும் என்றுமே கௌரவமான நிலையில் தான் உள்ளது.
பள்ளிகள் முஸ்லிம் சமூகத்தின் உயிர் நாடி. சமூகத்தின் உயிரோட்டமும் உயோரோட்டமும் தொழிற்பாடும், நேர்த்தியும் பள்ளிகளை வைத்தே அமையும். சமூக நிர்மாண பணியில் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.
நபியவர்களின் வாழ்வில் தனது மஸ்ஜித் அந்நபவி எனும் புனித பள்ளியை மையப்படுத்தி சமூக புனர்நிர்மான பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அது கடமை போலவே நபி வழியும் தான்.
குழந்தைகளும் பள்ளிகளும்.
நபியவர்களின் ஆன்மிகம் மற்றும் லௌகீகம் சார் பயிற்சி பாசறையாக பள்ளி தான் அமைந்தது. அது சமூகத்தின் கூரான இரு விழிகளுக்கும் ஒப்பானது. மக்கள் இயல்பாக ஒன்று கூடவும் ஒன்று கூட்டவும் இடம் தரும் தளமாக அது காணப்பட்டது. அவ்வாறு கட்டமைக்கப்பட்டது. பள்ளி தான் எல்லாமாக அமைந்தது. பள்ளிவாயிலில் ஆண்கள் வருகை தருவது போலவே பெண்களும் உரிய ஒழுங்கு முறைகளுடன் வந்து தத்தமது வாழ்வியல் சார், வணக்கம் சார், உலக மறுமை சார் விடயங்களை கேட்கவும் பேசவும் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. அவ்வாறே பள்ளிகளில் குழந்தைகளது அல்லது சிறார்களது வருகையும் கூட அனுமதிக்கப்பட்டதாகவே அமைந்தது.
நபியவர்கள் தனது இரு இரட்டை பேரக் குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். அல்லது அவர்களாக வந்து ஒட்டிக்கொள்வார்கள். நபியவர்கள் இமாமத் செய்யும் போது கூட அன்னாரின் தூய மேனியில் ஏறி இறங்கி விளையாடுவார்கள். கடைசியில் இரு இரட்டை குழ்னதைகளும் நபியை நபியின் மேனியை ஏறு வாகனத்தின் மேனியாக கருதி விளையாடுவார்கள். அதனை சிலாகித்து கூறுவார்கள். பதிலுக்கு நபியவர்களும் மிகச்சிறந்த சாரதிகள் குதிரை வீரர்கள் என்று பாராட்டி புகழ்வார்கள். தொழுகையில் ஸுஜூத் புனித நிலையில் கூட தன்னையே மெய் மறந்து நீட்டும் அளவு அவர்கள் முதுகில் விளையாட இடம் தருவார்கள். சிறுவர்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யவோ தவிர்க்கவோ இல்லை. حديث أبي هريرة رضي الله عنه قال: «كنا نصلى مع النبي صلى الله عليه وسلم العشاء، فإذا سجد وثب الحسن والحسين على ظهره، فإذا رفع أخذهما من خلفه أخذاً رفيقاً، ويضعهما على الأرض»
இமாம் ஷௌகாணி அவர்கள் அபூ கதாதா (ரழி) முன்வைக்கும் ரிவாயத்தை இப்படி சுட்டிக்காட்டுகிறார்கள்.
أبي قتادة رضي الله عنه قال: «رأيت النبي صلى الله عليه وسلم يؤم الناس وأمامه بنت أبي العاص ابنة زينب بنت رسول الله على عاتقه، فإذا ركع وضعها، وإذا رفع من السجود أعادها»
நபியவர்கள் மக்களுக்கு இமாமத் செய்கையில் அவரின் முன்னால் தனது பேரக்குழந்தையை தோளில் வைத்தவராக கண்டேன். ருகூ சென்றால் கீழே வைப்பார். ஸுஜூதை விட்டு எழுந்தால் மீண்டும் தோளில் எடுத்து வைப்பார்கள்.
சின்னஞ்சிறு பச்சிளம் குழந்தைகளை அவர்கள் தாய் மார் குறிப்பாக பாலூட்டும் தாய் மார் கூட்டி வந்து அருகில் வைத்து தொழுவார்கள். அவர்களது அழுகுரல்களும் கீசல்களும் கேட்கும் போது விரைவாக தொழுகையை சுருக்கி முடித்துக்கொள்வார்கள். وحديث أنس: أن النبي صلى الله عليه وسلم قال: «إني لأسمع بكاء الصبي وأنا في الصلاة فأخفف مخافة أن تفتن أمه»
பெருநாள் தினங்களில் குடும்பத்தில் உள்ள சகலரையும் திடலுக்கு அழைத்து வரும்படி போதித்து அனைவர் முன்னிலையிலும் போதனைகள் நிகழ்த்துவார்கள்.
ومما يذكر أنه ضاقت المساجد بالصبيان حتى اضطر الضحاك بن مزاحم معلمهم ومؤدبهم أن يطوف عليهم بدابته ليشرف عليهم، وقد بلغ عددهم ثلاثة آلاف صبي، وكان لا يأخذ أجراً على عمله.
الضحاك بن مزاحم
எனப்படும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் நபரின் காலத்தில் குழந்தைகளால் பள்ளி நிரம்பி வழிந்தது. குழந்தைகளை மேற்பார்வை செய்ய தனது ஏறு வாகனத்தில் வருவார்கள். சுமார் 3000 குழந்தைகள் அளவு அங்கு திறந்டுவிடுவர். தனது பணிக்கு கூலியும் பெறமாட்டார்.
நபியவர்களது காலத்திலும் பின்னரும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து அல்குர்ஆனை ஹதீஸை இஸ்லாமிய கலைகளை அங்கு வரும் மூத்த சஹாபாக்கள் பின்னர் தாபிஊன்கள் தபஃ தாபிஊன்கள் வழியாக கற்றார்கள். ஆலிம்களும் முபஸ்ஸிர்களும் முஹத்திஸ்களும் ராவிகளும் காரிகளும் ஹாபிழ்களும் பள்ளியில் தான் உருவானார்கள். ஹதீஸ் துறை சார்ந்த இமாம்களாகட்டும்; பிக்ஹ துறை இமாம் களாகட்டும், மத்ஹப் சார் இமாம்களாகட்டும்; அவர்களது வாழ்க்கை வரலாறுகளை சுயசரிதைகளை தேடி மேலோட்டமாக வாசித்தால் கூட அவர்கள் சிருபராயத்தை பள்ளிகளில் தான் கழித்துள்ளார்கள். பள்ளிகளின் சுவர்களுக்கு மத்தியில் தான் தமது ஆன்மீக தாகத்தே தீர்த்து தனித்துள்ளார்கள்.
அந்தளவுக்கு பள்ளிக்கு வரும் மூத்தூர்களால் போஷிக்கப்பட்டார்கள். மூத்தோரும் மார்க்க விடயங்களில் விவகாரங்களில் கூடிய தேர்ச்சியும் நிபுணத்துவமும் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களும் கற்றுக்கொண்டே இருந்தார்கள். பிறருக்கும் போதனைகளை மேற்கொண்டார்கள்.
ஆரம்பத்தில் நபியின் காலத்தில் இருந்த அஸ்ஹாபுஸ்ஸுப்பா எனப்படும் திண்ணை தோழர்களாகட்டும் அவர்களின் குழந்தைகளாகட்டும் பாதிமிய காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட நிழாமிய்யா வாகட்டும் எகிப்தின் அல் அஸ்ஹர் ஆகட்டும் பள்ளிகளை மையப்படுத்தி சிறுவர்களையும் இணைத்து போசித்த இடமாகவே அவை அமைந்திருந்ததை காண முடியும்.
நாம் எல்லோரும் அறிந்த உண்மைக்கு பெயர் போன ஆத்மா ஞானியான அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ் ) அவர்களது வாழ்வின் ஆரம்ப சிறுபராயம் பெரும்பாலும் பள்ளியில் தான் கழிந்தது. தனது தாய்க்கு அடுத்ததாக அவரை பயிற்றுவித்து ஆளாக்கியது பள்ளிதான். இமாம் ஷாபிஈ இமாம் அபூ ஹனீபா போன்றோரின் வளர்ச்சியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி மார்க்க அறிவில் தாகம் தீர்த்து வைத்த இடமாக பள்ளிகள் தான் காணப்பட்டன.
சமூகமயமாக்கமும் பள்ளியும்.
சமூக வளர்ச்சி கட்டங்களில் முதல் நிலை சமூகமயமாக்கல் வீடுகளில் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முகவராக தொழிற்படுவது பொதுவானது. அதே நேரம் எமது சமூகத்தின் மரபு, பாரம்பரியம், வழக்காறு என்று வருகையில் மூன்று வருடங்கள் அடைகின்ற பொழுதே முஹர்ரம் புதுவருடத்தில் ஓதப்பள்ளிக்கூடம் வைத்தல் எனும் வழக்காற்றில் பள்ளிகளுடனும் அல்குர்ஆனுடனும் குழந்தைகளை ஈர்த்து விடுகின்றனர்.
சிறு வயதிலேயே பாடசாலை செல்லும் முன்னர் தற்கால சூழலில் முன்பள்ளிக்கு செல்லு முன்னர் இத்தகைய சமூகமயமாக்கல் செயற்பாடுகள் இடம்பெற்று விடுகின்றன.
இதனால் மிக அதிகமான உடன்பாடான தாக்கமும் நன்மைகளும் ஏற்படுகின்றன. கூடிப்பழகுதல், சமூக நியமங்களை ஒழுங்குகளை இயல்பாகவும் முறையாகவும் பயிற்சி மற்றும் அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொள்ளல் போன்றன நிகழ்கின்றன. மார்க்கம் தொடர்பான ஒழுங்குகளை நடைமுறைகளை பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றன.
சபையின் ஒழுங்குகள் மூத்தோரை கண்ணியப்படுத்துவது, பள்ளிகளில் எப்படி நடந்து கொள்வது வுழு செய்வது போன்ற விடயங்களை இயல்பாக அறிந்து கொள்வர். இப்படி எம்மை அறியாமலே இயல்பான தன்மையில் குழநதைகள் ஆன்மீக சூழலில் வாழ பயிற்றுவிக்கப்படுகின்றனர்.பள்ளிக்கு வருகின்ற மூத்தவர்களின் அறிவுரைகள், அறவுரைகள் செயற்பாடுகள் குழந்தைகளில் மிகவும் தாக்கம் செலுத்தும். இது வாழ் நாள் முழுவதும் அவர்களுக்கான வாழிகாட்டல்களாக அமையும். “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” எனும் பழமொழியும் “பசுமரத்து ஆணி போல..” உவமைதொடரும் இவற்றை மிக நன்கு உணர்த்தி விடுகின்றன.
பள்ளியில் வுழு செய்வதற்காக உள்ள “ஹௌல்” எனப்படும் தடாகத்தில் குழந்தைகளின் கீச்சிடும் ஒலியை கேட்க முடியாவிட்டால் எதிர்வரும் காலங்களில் வயது முதிர்ந்த, கிழடு தட்டிய வயோதிபர்களும் கதிரையில் அமர்ந்து தொழும் நோயாளிகளும் சாய்ந்து அயர்ந்து தூங்கவே தூண்களை எதிர்பார்த்து வரும் சோம்பேறிகளும் தான் பள்ளிக்கு வரும் நிலை உருவாகும்.
சமூக விழுமியங்களை ஒழுங்குகளை பெறுமானங்களை விதிகளை ஒழுகலாறுகளை நியமங்களை எல்லாம் பள்ளிகளில் இருந்து பார்வை வழியாக கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அந்த சமூகத்தின் பெரும் சொத்துக்கள்.
இன்று சிறுவர் உரிமைகள் வாய் கிழிய பேசப்படுகின்றன. அந்தளவுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள் மிகைத்து அவற்றை விழுங்கி ஏப்பமிடுகின்றன. வளரிளம் தலைமுறை போதைப்பொருளுக்கு அடிமையாகி பாலியல் மயப்பட்டவர்களாக வாழ்வை தொலைத்து விடுகின்றனர்.
திருமணத்தின் புனிதமும் குடும்ப வாழ்வின் இலக்கும் தெரியாமல் அதிவேகமாக திருமணம் முடித்து அந்த சூடு தணிவதற்குள் விவாகரத்து பெற்று நீதி மன்றங்களில் அலைந்து திரிகின்றனர். கணவனும் மனைவியும் மாறி மாறி ஒருவர் மற்றவரை ஏமாற்றி அனுமதிக்கப்படாத கள்ள உறவுகளை வைத்து வாழ்வை சீரழித்து பிள்ளைகளையும் பாழாக்கி விடுகின்றனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோரை பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் விடுகின்றனர்.பராமரிக்காமல் கை விடுகின்றனர். இத்தகைய அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆரம்பத்தில் விடப்படும் கோணல் மானல்களே வழியமைக்கின்றன. சுருக்கமாக சொன்னால் தலை முறை இடைவெளி , பெற்றோர் பிள்ளை உறவில் நிகழும் விரிசல் சமூக இடைவெளி (கொரோனா இடை வெளி அல்ல) போன்றனவே இவற்றுக்கு பிரதான காரணி. இவற்றை தணித்தால் குறைத்தால் மட்டுப்படுத்தினால் கட்டுப்படுத்தினால் நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். சமாளிக்கலாம்.
சந்தோசமடையலாம்.
ஆனால் இப்பொழுதெல்லாம் குழந்தைகள் பள்ளிகளின் பக்கம் வருவது குறைவு. ஒன்று முன்பில்லை பருவம் முதலே அவர்களது முதுகில் திணிக்கப்படும் சுமக்க முடியாத கற்றல் பளுக்கள் இதர செயற்பாடுகள். மறுபக்கம் பள்ளிக்கு முறையாக அழைத்து வரும் நிலையில் வீட்டில் பெற்றோர்களோ மூத்த சகோதரர்களோ இல்லை. இதனால் பின்னாட்களில் இத்தகைய சிறுவர்கள் பதின்ம வயதை அடைகின்ற போது சமூக ஆர்வத்தை இழந்து விடுகின்றமையை உணர முடியும்.
அதே நேரம் மிகவும் அவதானமாக கவனமாக இருக்க வேண்டிய சில அம்சங்களும் உள்ளன. அவற்றுள்
குழந்தைகளை முறையற்ற விடத்தில் பள்ளிக்கு தனியாக அனுப்புவது.
பள்ளியின் ஒழுங்குகளை கூறாமல் அனுப்புவது.
பராமரிப்பாளர்கள் இல்லாமல் அனுப்புவது போன்றன கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களே. இதற்காக பள்ளியின் மூலையில் எல்லாக்குழ்னதைகளையும் பிரத்தியேகமாக வைப்பதும் ஒழுங்கள்ள.முறையல்ல. அப்படி செய்வதால் அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் இருந்து தொழுகையின் போது தள்ளிக்கொல்வாதும் சிரிப்பு காட்டுவதும் பின்னால் நோண்டுவது அங்கிங்கே பார்ப்பது சத்தமிடுவது ஸூ ரா பாத்திஹா முடியும் போது உரத்து ஆமீன் சொல்வது போன்றன நிகழும் சாத்தியம் அதிகம்.
முடிவு.
குழந்தைகள் நம் கண்குளிர்ச்சியாக அமைய வேண்டும். நபியவர்களின் பிராத்தனையும் நன்மக்களின் பிரார்த்தனையும் அதுதான். குழந்தைகளை முறையாக ஆன்மீக ரீதியாக பயிற்றுவிப்போம். எதிர்காலத்தின் இருண்ட தன்மைகளை விட்டும் அவர்களை காத்து உள்ளத்தில் ஆன்மீக ஒளியூட்டி சமூக உணர்வுடன் வளர்த்து பயிற்றுவிப்போம். எமது சுவனமும் நரகமும் அவர்கள் தாம்.அவர்களது சுவனமும் நரகமும் நாம்தான்.
M.M.A.BISTHAMY