Musilm

நூல் : போர்க்கால சிங்கள இலக்கியங்கள். (ஒரு பன்மைத்துவ ஆய்வு 1983-2007)

நூல் : போர்க்கால சிங்கள இலக்கியங்கள். (ஒரு பன்மைத்துவ ஆய்வு 1983-2007)

நூல் : போர்க்கால சிங்கள இலக்கியங்கள்.
(ஒரு பன்மைத்துவ ஆய்வு 1983-2007)

நூலாசிரியர் : M.C. ரஸ்மின்.

சற்று வித்தியாசமாக இரண்டு இலக்கியங்களுக்கிடையிலான ஒப்பீடு தொடர்பான நூலொன்றுடன் உங்களோடு உரையாட உள்ளோம்.

இலங்கையில் மூன்று தசாப்தமாக வேர்கொண்டு உயிரையும் உடமைகளையும் விழுங்கிய யுத்தத்துக்கு மொழி குறித்த இழுபறியும் புறக்கணிப்பும் தான் காரணம். மொழி ஒரு கலாசாரம். மொழி ஒரு பண்பாடு. மொழி இலக்கியத்தின் உந்து விசை.

இப்படி இருக்கையில் பன்மைத்துவ சூழலில் ஒரு இனம் இன்னொரு இனத்தை துவம்சம் செய்து இனசுத்திகரிப்புக்கு ஆளாக்க எத்தனிக்கும் அம்சம் எந்த மனசாட்சியுள்ளவர்களாலும் அங்கீகரிக்க முடியாத ஒன்று. மொழி ஆதிக்கம் பயங்கரமானது.

மொழியால் நடந்த இத்தகைய கொடூர யுத்தத்தின் ஆறாத வடுக்களை போர்ச்சூழலிலும் அதன் பிற்பாடும் சிங்கள இலக்கியத்தின் பிரதிகள் எவ்வாறு கையாண்டன என்பது குறித்தே நூல் கலந்துரையாடுகிறது.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

வரலாற்றின் முடிவும் இறுதி மனிதனும் The end of the history and the last man என்றொரு நூலை Francis Fukuyama எழுதி அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கு மிடையிலான நீண்ட பனிப்போர் cold war முடிவுக்கு வந்து விட்டதாகவும் அமெரிக்காவிடம் உலகம் சரணடைந்ததுடன் உலக வரலாறு முடிவுறுகிறது என்பது அதன் சாராம்சம்.

இதனை எதிர்த்து மறுத்து அவ்வாறில்லை. வரலாறு இத்தோடு முடியவில்லை. அது எதிர்காலம் வரை இன்னும் நீள்கிறது. பலமான நாகரீகங்களுக்கிடையிலான பெரும் மோதலாக அது பரிணமிக்கும் என்று அமெரிக்க சிந்தனையாளர் Samuel P. Huntington The clash of civilization the Remarking of World order எனும் இன்னொரு நூலை எழுதினார்.

உலகின் வரலாறு முற்றுப்பெறவில்லை. அது புதிய உலக ஒழுங்கின் பெயரில் நீடித்து நாகரீகங்களுக்கு இடையிலான பெரு மோதலாக முரண்பாடாக வெடிக்க உள்ளது என்பதே இதன் சாரம். அமெரிக்க தலைமயிலான ஓர் உலகின் பால் அது கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்படி மேற்குலகின் பார்வை சண்டைக்கும் முரண்பாட்டுக்கும் தூபமிடுவதாக உள்ள நிலையில் தான் அதன் சர்வதேச அரசியலும் ராஜதந்திரமும் தொடர்கிறது.

ஆனால் இலங்கை சூழலில் யுத்தத்தின் ரணகளத்தை சுவைத்து அதன் வலிகளை சுமந்து வாழும் நிலையில்
ரஸ்மின் இலங்கையில் உயிர்வாழும் இரண்டு மொழிகளின் இலக்கியங்களுக்கூடாக சமாதானத்தை, இணக்கப்பாட்டை, இன நல்லிணக்கத்தை, அன்பை, நன்மதிப்பை விதைக்க முனைகிறார்.

ரஸ்மின் பேராதனையின் தமிழ் துறையின் விஷேட பட்டதாரி. அபிவிருத்திக்கான தொடர்பாடல் துறையில் அங்கேயே விஞ்ஞான முதுமாணி பட்டமும் பெற்றவர். மேற்கு நாடான கனடாவின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நவீன ஊடகம் தொடர்பான பட்ட பின்படிப்பு டிப்ளோமா ஒன்றையும் பெற்றுள்ளார். அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மொழிபெயர்த்துள்ளார். மாநாடுகளுக்கு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

பன்முக ஆளுமையாக நின்று பல்வேறு பாத்திரங்களை வகித்து சமூகத்தில் முனைப்புடன் ஊடாடி வருகிறார். சமூக வலுவாக்கம் தொடர்பில் சர்வதேச தரம் வாய்ந்த வளவாளராக செயற்படுகிறார்.

ரஸ்மின் சிங்கள மொழியில் மிகுந்த தேர்ச்சி மிக்கவர் என்பது ஆய்வினூடாக புரிந்துகொள்ளலாம். ஆய்வுக்கு தெரிவு செய்துள்ள தலைப்பு அவரது இலக்கிய ஈடுபாட்டை மட்டுமன்றி மொழியின் ஆகர்ஷணம் அதன் ஊடாட்டத்தினூடாக இலங்கையின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மீளவும் உருவாக்க இலக்கியத்தை எவ்வாறு கையாளலாம்? அதன் சாதக, பாதக தன்மைகள் குறித்தான பார்வையாகவே உள்ளது.

மிகப்பெரும் ஆய்வுக்களம் ஒன்றை நோக்கிய முதல் எட்டை காத்திரமாக முன் எடுத்து வைத்துள்ளார். துறை சார் ஆர்வலர்களுக்கும் நிபுணர்களுக்கும் பாதையை காட்டியுள்ளார்.

இலங்கை பன்மைத்துவம் நிலவும் ஓர் அழகான தேசம்.மூன்று தசாப்தம் கடந்த யுத்தம் அதன் அழகை குரூரமாக சிதைத்துள்ளது . இனங்களுக்கிடையில் முருகலையும் உட்பூசலையும் உடைவுகளையும் முறிவுகளையும் ஏற்படுத்தி இடைவெளியை இன்னுமின்னும் அதிகரித்து முரண்பாட்டுக்கு வழியமைத்துள்ளது. இந்த பகை புலனில் நின்று தான் ரஸ்மின் தனது ஆய்வின் எல்லையை காலத்தால் வரையறுத்துள்ளார்.

இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் என்று வித்தியாசமான சூழலில் வாழும் ஒரு நாட்டில் நிலையான சமாதானத்தை வேண்டி நிற்கின்றோம். குரூரமாக எம்மை காவுகொண்ட யுத்தம் நிறைவுற்றாலும் இனங்களுக் கிடையிலான முழுமையான சமாதானமும் நல்லிணக்கமும் இன்னும் மன நிறைவான விதத்தில் எழுகோலம் பெறவில்லை. நிலைக்கவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் குறிப்பாக சிங்கள இனத்தவருடன் மட்டும் சகவாழ்வை சுருக்கி பேசியும் எழுதியும் வருகின்றனர். சகவாழ்வின் ஊடாக மட்டும் நிலையான சமாதனம் மலராது, கறை படிந்த பக்கங்கள் நீங்காது.

இனங்களுக்கிடையிலான் உரையாடல் inter faith dailoge மட்டும் எதையும் போதுமாக சாதிக்காது. இந்த முரண்பாடுகள் முழுமையாக நீங்க மாற்றுவழியில் சிந்தித்து அதற்கான பொறிமுறை ஒன்றை கண்டறிய வேண்டும்.

இந்த நிலையை இலக்கியத்தின் ஊடாக அடைவதற்கான் ஓர் எத்தனிப்பு தான் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. நூல் வெளிவந்தது 2013 ல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்மைத்துவ சூழலை அங்கீகரித்து ஏற்று அவற்றுக்கிடையிலான இலக்கிய வழியிலான உரையாடல் தொடர்வதன் மூலம் எதிர்காலத்திலும் அதனை ஒரளவு முனைப்புடன் இயங்கவைக்கும் எனும் நம்பிக்கை உள்ளது.

காரணம் இலக்கியம் அந்த வலிமையையும் ஆற்றலையும் பெற்றுள்ளது. பன்மைத்துவ விழுமியங்களை இலங்கைச்சூழலில் இலக்கியம் வாயிலாக கட்டமைத்து இனங்களின் மீளிணக்கம், ஒருமைப்பாடு, தனித்துவம், போன்ற உயர் பெறுமானங்களை அங்கீகரிக்கும் மனோ நிலையை உருவாக்கலாம்.

குறிப்பாக இலங்கையின் பன்மைத்துவ சூழலில் இலக்கியம் அத்தகைய கூரான கருவியும் தான்.

இலக்கிய வகையறாக்களில் பெண்ணியல்வாத இலக்கியம், எதிர்ப்பிலக்கியம், முற்போக்கு இலக்கியம், நவீன இலக்கியம், பின்நவீன இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பன குறிப்பிடத்தக்கன.

இந்த பார்வையில் தான் பன்மைத்துவ இலக்கியம், போர்க்கால இலக்கியம் இரண்டையும் நோக்க வேண்டும். இலக்கியம் சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகம். இலக்கிய படைப்புகளின் அடியாக அல்லது ஊடாக சமூகத்தில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் நிச்சயம் உருவாக்கலாம். இலக்கியங்கள் மூலமாக சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தலாம் . எல்லா எல்லைகளையும் கடந்து சென்று எல்லா உலகங்களையும் உள்ளங்களையும் வென்றுவிடும் மர்ம, ஆகர்ஷன சக்தி இலக்கியத்துக்கு உண்டு.

அந்த வகையில் இலங்கையின் யுத்த கால சூழலில் வெளியான இருவேறு இலக்கியங்களில் இழையோடியுள்ள இருத்தலுக்கான போராட்ட உணர்வு, யுத்தத்தின் பாதிப்பு, விடுதலை உணர்வு, சுதந்திர தாகம், எதிர்ப்புணர்வு என்பன வெளிப்பட்டுள்ள பாங்குகளை ஒப்பிடும் வகையில் ரஸ்மினின் ஒப்பீடும் ஆய்வும் உள்ளன.

யுத்தத்தை, அதன் தாக்கத்தை, செல்வாக்கை சிங்கள மற்றும் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு உள்வாங்கியுள்ளன? அவற்றின் மீது யுத்த சூழல் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது? அதன் போக்கை செல்நெறியை திசை திருப்பியுள்ளன? என்பன இங்கு ஆழமாக நோக்கப்படுகிறது.

கல்வித்துறைக்கூடாக, கலைத்திட்டம் வாயிலாக, பன்மைத்துவ நோக்கில் இலக்கியங்களை பாடத்திட்டமாக அமைத்து கற்பித்தாலும் அது பரீட்சையை மையமாக கொண்ட உணர்விழந்த வரண்ட நிலையில் பிரக்ஞை அற்றதாகவே காணப்பட்டன. பிரதிகளில் படிந்துள்ள பிம்பங்களும் பாத்திரங்களும் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கவில்லை.தெறிப்படையவில்லை. சமூக மாற்றத்தில் தாக்கம் செலுத்தவில்லை. காரணம் சாதகாமான இலக்கிய பிரதிகள் படைப்புகள் வெளிவந்தது போலவே இனவாதத்தை கக்கும் விசமத்தனமான படைப்புகளும் பிரதிகளும் மக்கள் மயப்பட்டன.

இந்த சூழலில் இலங்கை வாழ் சிறுபான்மை பெரும்பான்மை மற்றும் மும்மொழி பேசும் சகலரிடமும் இலக்கியம் வாயிலாக ஒரு சமாதானத்தை மாற்றத்தை உருவாக முனைந்திருக்கும் ரஸ்மினின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்.

இந்த வகையில் இலக்கியத்தினூடாக இலங்கை சூழலை மையப்படுத்தி பன்மைத்துவ சிந்திப்பையும் புரிதலையும் பார்வையையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நூல் அமைந்துள்ளது எனலாம்.

இலக்கியம் வாயிலாக இந்த பன்மைத்துவ அங்கீகரிப்பை எவ்வாறு சாத்தியமாக்கலாம்? என்ற வினாவுக்கு நூலாசிரியர் இரண்டு வழிமுறைகளை குறிப்பிடுகிறார்.

இலக்கியங்களில் அயலவரின் வாழ்க்கை முறை, மொழி, பண்பாடு , கலாசார கூறுகள், சமூக உறவு, நம்பிக்கைகள்,என்பவற்றை பரஸ்பரம் உள்வாங்கி அவற்றுக்கான மதிப்பினையும் ஏற்புடைமையையும் ஊக்குவித்தல்.

இவற்றை மொழிபெயர்ப்பின் வாயிலாக அல்லது பரிமாற்றப்பொறிமுறை வாயிலாக சமூக மயப்படுத்தி முரண்பாட்டு நிலை மாற்றத்திற்கானஉரையாடலை ஊக்குவித்தல்.

நூலுக்கு மிகச்சிறந்த அணிந்துரை ஒன்றை பேராசிரியர் M.A.நூமான் அவர்கள் “இலக்கியமும் இன உறவும் – போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” பற்றிய சில குறிப்புக்கள் எனும் தலைப்பிற்கூடாக வழங்கியுள்ளார்.

யுத்தம் முடிவுற்றாலும் இனமுரண்பாடு இன்னும் முழுமையாக தீரவில்லை. இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சமூக, அரசியல் சூழல் இன்னும் உருவாகவில்லை. இந்த முரண்பாட்டு சூழலில் இலக்கியத்தின் பங்கு என்ன? அது இன முரண்பாட்டை ஊதிப்பெருப்பித்து அதற்கு தீனி போட்டு மெருகேற்றி விடுகிறதா? மோதலுக்கும் முருகலுக்கும் காரணமாகி விடுகிறதா? அல்லது சுமூகமான முறையில் சமாதன சூழலை உருவாக்கி இன நல்லுறவை கட்டி எழுப்பி வளர்க்க முனைகிறதா? என்ற கோணத்தில் மேற்படி நூல் ஆய்வு செய்வதாகவும் கூறுகிறார்.

இரண்டு பக்கங்களும் சரிசமனாக பயனித்துள்ளதை அவர் நூலுக்கூடாக சுட்டிக்காட்டுகிறார்.

முடிவுரையுடன் சேர்த்து எல்லாமாக 9 தலைப்புக்கள் நூலில் உள்ளடங்கியுள்ளன.

1. போர்க்கால சிங்கள இலக்கியம்.
2. சிங்கள – தமிழ் இலக்கிய உறவு
3. சிங்கள பாடலிலக்கியம் –அறிமுகம்.
4. சிங்கள பாடலிலக்கியம் – இரண்டாம் வாசிப்பு.
5. போர்க்கால சிங்கள கவிதைகள்.
6. போர்க்கால சிங்கள சிறுகதைகள்.
7. இனவுறவு கருத்து நிலையும் சிங்கள நாவல்களும்.
8. எதிர்நிலைக்கருத்தாக்கங்கள்.
9. முடிவுரை.

யுத்தத்தில் மிக நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்றவகையில் தமிழ் –இஸ்லாமிய இலக்கிய பகைபுலனில் எண்ணற்ற படைப்புகள் எதிரும் புதிருமாக வெளிவந்துள்ளன. இன நல்லுறவை வளர்த்தும் மேலும் சிதைத்தும் உள்ளன.

அதே போல தமிழ் சிங்கள இலக்கிய உறவின் வரலாறு மற்றும் போக்கு குறித்து மேற்படி நூல் மூலம் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

நூல் குறித்த மிகவும் சுருக்கமான அறிமுகம் என்பதாலும் மிக ஆழமான வாசிப்பும் அவதானமும் அவசியம் என்பதாலும் இந்த சுருக்க றிமுகம் பின்னணியுடன் நூலை வாசகர்களின் வாசிப்புக்கு விட்டு விடுகிறேன்.

The Seven Moons Of Maali Almeida
மிக அண்மையில் booker விருது பெற்ற நூலும் போர்க்கால கொடுமைகள் குறித்த புனைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-M.M.A. Bisthamy-

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top