ரிஷாத் நஜ்முதீன் எழுதிய ‘திருக்குர் ஆனின் ஒளியில் ஜூஸ்உ அம்ம‘ நூலுக்கு, நூல் ஆய்வாளர் M.M.A.BISTHAMY அவர்கள் வழங்கிய நூல் ஆய்வு :
மையக்கருத்தினூடாக ஸூராக்களைப் புரிந்துகொள்ளல்.
அல்குர்ஆன் இறை வார்த்தைகள். மனித வாழ்வின் வெற்றியும் விடுதலையும் விமோசனமும் அதில் தான் முழுமையாக அடங்கியுள்ளது. அது ஓதலுக்கும் பரகத்துக்கும் மறுமை மன்றாட்டதுக்கும் மட்டுமான நூல் அல்ல. அது வாழ்வை அசைக்க வேண்டும். வாழ்க்கைப் போக்கை திசை திருப்ப வேண்டும்.
சிந்தனையில் அதிர்வை, மாற்றத்தை புதுமையை உருவாக்க வேண்டும். அது உணர்வூட்ட வேண்டும். உண்மையை உரத்து சொல்ல வேண்டும். அதற்காக அதனை நோக்கி நாம் சென்றாக வேண்டும். அதனை ஓதவும் செவிமடுக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். அதுபோல அதன் கருத்தாழத்தை அழகை அற்புதங்களை சிந்திக்கவும் வேண்டும். அதற்கான அழைப்பை, வழிகாட்டலை நூல் தருகிறது.
அல்குர்ஆன் சாதாரண நூல் அல்ல. சாதாரண நூல் ஒன்றை வாசிக்கும் போக்கில் அதனை விளங்கவோ கிரகிக்கவோ முடியாது. அது ஒரு சிந்தனை. இயங்குவிதி. இயக்க விதி. வாழ்வியல் சிந்தனை. சிந்தனை வாழ்வு. அசைவியக்கம். இயக்க அசைவு. அது எம்மை நோக்கி பேசுகிறது. உரையாடுகிறது. உணர்வூட்டுகிறது.
அல்குர்ஆன் பேசும் பாணி அலாதியானது. பேசும் தொனி வேறுபட்டது. பேசும் தலைப்புக்கள் வேறுபட்டவை. அல்குர்ஆனை அணுகவும் நெருங்கவும் முறைகள் உள்ளன. அவை பேணப்பட்டால் அல்குர்ஆனை ஓரளவேனும் விளங்கலாம்.
வெறுமனே தொழுகையில் ஓதவும் மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு ஓதவும் மண்ணறையில் ஓதவும் மட்டும் அது அருளப்படவில்லை. நிகழ்வுகளை ஆரம்பிக்க அது அருளப்படவில்லை. வயதில் குறைந்த சிறுவர்கள் மட்டும் ஓதுவதற்கு அல்குர்ஆன் இறங்கவும் இல்லை.
அது எல்லோருக்குமானது. எல்லா தரப்புக்குமானது.
எனவே எல்லோரும் அதனை அதற்கே உரிய முறையில் முறைமையில் அணுகினால் அல்குர்ஆன் தன்னோடு உரையாடுவதை உணரலாம்.
அல்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் வேத நூல். அது வணக்க வழிபாடுகளுக்கு மட்டும் மனனமிட்டு பிரயோகிக்கப்படும் நூல் அல்ல. அதற்காக மட்டும் இறைவன் அதனை மிகவும் நுணுக்கமாக இறக்கி அருளவில்லை.
அது வாழ்வியல் நெறி. சட்ட யாப்பு. சட்டவாக்கத்தின் அடிப்படை. ஆன்மீக மூல ஊற்று. புதுத்தெம்பை அளிக்கும் ஈமானிய சுணை.
இந்த சிறப்பு மிகு அல்குர்ஆனை எவ்வாறு நெருங்குவது? எவ்வாறு அணுகுவது? எவ்வாறு புரிந்து கொள்வது?
என்பதை தனது வாசிப்பு அனுபவம் வாழ்வு அனுபவம் வாயிலாக நூலுக்கூடாக தர முனைகிறார் ரிசாத்.
அல்குர்ஆன் இறை நூல். மனித நூல்களை விடவும் உள்ளடகத்திலும் அமைப்பிலும் கருத்திலும் முன்வைப்பிலும் மொழியிலும் என அனைத்திலும் வேறுபட்டது. இதனால் தான் அல்குர்ஆனுக்கு பாரம்பரிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் அன்று முதல் இன்று வரை நீள்கின்றன.
அவ்வாறே நவீன காலத்திலும் அல்குர்ஆனை அணுகும் முறைகள், முறைமைகள், நுட்பங்கள், நுணுக்கங்கள் என பல்வேறு நூல்களும் எழுதப்பட்டுள்ளன. கலாநிதி யூஸுப் கர்ழாவி “அல்குர் ஆனை அணுகுவது எவ்வாறு”. كيف نتعامل مع القرآن العظيم
என்று நூல் எழுதியுள்ளார். அதேபோல உஸ்தாத் முஹம்மத் அல்கஸ்ஸாலி “அல் மஹாவிருல் கம்ஸா” المحاور الخمسة எனும் நூல் மூலம் அல்குர்ஆனின் ஐந்து மையக்கருத்துக்களை பட்டியலிடுகிறார். தவிர மௌலானா மௌதூதி மற்றும் கலாநிதி இமாரா போன்றவர்களும் இமாம் ஜஸ்ஸாஸ் போன்றவர்களும் இது குறித்து நிறையவே பேசியுள்ளனர்.
அத்துடன் அப்துல்லாஹ் தர்ராஸ் அவர்களது النبأ العظيم அந்நபஉல் அழீம் எனும் நூல் இதில் மகத்தானது எனலாம். இவை தவிர இன்னும் பல ஆழமான நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ததப்புருள் குர்ஆனும் تدبر القرآن இந்த வகையறாக்களுள் சிறப்பான நூல் எனலாம்.
வளாகத்தில் கற்கும் நாட்களில் அத்தப்ஸீர் அல் மௌலூஇ எனும் தலைப்பில் ஒரு பாடம் கற்றது நினைவில் உண்டு. அதனடியாக கலாநிதி கர்ளாவி அவர்களது “அஸ்ஸப்ர்” பில் குர்ஆன் எனும் அழகிய
நூலை வாசிக்க கிடைத்தது. அந்த நூல் இந்த வகையறாவை சார்ந்தது
சுருக்கமாக கூறப்போனால் அல்குர்ஆன் விளக்கம், வியாக்கியானம் இன்று அகல விரிந்து பெரிய கலையாக உருப்பெருத்துள்ளது. அல்குர்ஆன்ய ஆய்வுகளுக்கும் அது வித்திட்டுள்ளது. அல்குர்ஆன் சாகா வரம் பெற்ற அற்புத நூல் என்பதற்கு இதுவும் சிறந்த சான்று.
இந்த நூலில் சகோதரர் ரிஷாத் இறுதி பிரிவின் அனைத்து ஸூராக்களையும் மையக்கருத்தினூடாக புரிவதற்கான வாயில்களை திறந்து தருகிறார்.
அன்றாடம் ஓதி வருகின்ற எளிமையான இயல்பான அம்சங்களை பேசும் பரீட்சயமான ஸூராக்களே இவை. இவை பேசும் உள்ளார்ந்த அர்த்தங்களை நோக்கிய எமது பார்வையை கவனத்தை அவதானத்தை செலுத்த முயல்கிறார். அதனூடாக எமது சிந்தனையை அல்குர்ஆனுடன் கோர்த்து வாழ விடுகிறார். ஓதுவதற்கு மட்டுமே என்ற பதிவை பார்வையை விட்டும் எம்மை இன்னொரு கோணத்தை நோக்கி அழைத்து செல்கிறார்.
அல்குர்ஆன் சிந்தனைக்கான நூல். சீர் திருத்தத்துக்கான நூல். அதற்கென பிரத்தியேக நேரமும் காலமும் எடுத்து சிந்திக்க தயாரானால் நிச்சயமா அல்குர்ஆன் எம்மிலும் தாக்கம் செலுத்தும்.
தப்ஸீர் துறையின் முன்னோடியாக தமிழ் இஸ்லாமிய சூழலில் கருதக்கூடிய ஆளுமையான உஸ்தாத் மன்ஸூர் அவர்களது நூலான ஓர் அஜமி கண்ட அல்குர்ஆன் நூலுக்கு அடுத்து அல்குர்ஆனை நோக்கி அழைக்கும் மிகச்சிறந்த நூலாக இதனை பரிந்துரைக்கலாம்.
அதனது நீட்சியின் இன்னொரு வடிவம் என்றாலும் பிழையாகாது. இரண்டுமே மத்திய மலைநாட்டின் அகுரனையில் இருந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது. (ஒரு காலத்தில் வெள்ளையன் மலை நாடுகளில் சஞ்சரிக்கையில் முஸ்லிம்களின் கையில் அல்குர் ஆன் பிரதிகள் இருந்ததாகவும் அது என்ன என்று வினவ அது அல்குர்ஆன் என்று சொன்னதாகவும் அதுவே பின்னாட்களில் மருவி அகுறன என்றானதாகவும் ஊர்கள் உருவான பின்னணி குறித்த ஐதீகங்கள் அனுமானங்கள் உள்ளன.)
ஒவ்வொரு அத்தியாயமும் அது இறங்கிய காலம் குறித்தும் அதன் பகுதி பகுதியான மொழிபெயர்ப்புகள் தனித்தலைப்பு வாரியாக விளக்கப்பட்டும் அடுத்து மையக்கருத்தின் வழியாக ஸூராவை புரிவதற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளன.
சுருக்கமாக விளக்கமாக எளிமையாக முழுமையாக ஒரு ஸூராவை இப்படி புரிய அணுக முயற்சிக்கலாம் என்பதற்கான முன்னெடுப்பாக நூல் எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
தமிழ் சூழலில் தமிழ் வாசகர்களை மையப்படுத்தி மையக்கருத்தினூடாக அல்குர்ஆனுக்கு காலம் வேண்டி நிற்கும் ஒரு நவீன விளக்கம் பாரம்பரிய முறைமைகளில் இருந்தும் விலகாமல் எழுதப்பட்டுள்ளமை நூலின் சிறப்பு. மேலதிக குறிப்புகளும் உசாத்துணைகளும் ஒவ்வொரு ஸூராவின் இறுதியிலும் தரப்பட்டுள்ளமை வாசகர்களை மேலும் வாசிக்க வழிகாட்டுவதாக உள்ளன.
சீர்மையின் சீரான அட்டைப்பட வடிவமைப்பு நூலின் உள்ளடக்கம், அதன் புதுமை, புதிய பாணி, இளம் எழுத்தாளர் என்றவகையில் நூல் தூக்கலாக உள்ளது எனலாம். தொடர்ந்தும் ஏனைய பகுதிகளையும் தொடராக இறைவி செய்ய இறைவன் நூலாசிரியருக்கு நிரத்திலும் காலத்திலும் அறிவிலும் சிந்தனையிலும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
✍🏼 M.M.A.BISTHAMY