Latest News

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி அறிந்திருக்கின்றீர்களா ?

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி அறிந்திருக்கின்றீர்களா ?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இலங்கை, 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் தேதி சுதந்திரமடைந்தது.

எனினும், பிரித்தானியாவின் நாடாளுமன்ற கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு டொமினியன் அந்தஸ்துடைய அரசாங்கமாகவே 1972ம் ஆண்டு வரை இலங்கை செயற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், 1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்டதை அடுத்தே, இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கோபல்லாவ நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 1978ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன நியமிக்கப்படுகின்றார்.

இலங்கையில் 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக, ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982ம் ஆண்டு நடைபெற்றதுடன், அந்த தேர்தலின் ஊடாக ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஜனாதிபதியாக தேர்வானார்.

1988ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் 1992ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.

2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு, இரண்டு முறை ஆட்சிபீடம் ஏறினார்.

அதனைத் தொடர்ந்து. 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவும் தெரிவானார்கள்.

இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்த இடத்திற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள்.

1982ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் அடங்கலாக ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், லங்கா சமசஜ கட்சி மற்றும் நவ சமசஜ கட்சி ஆகியன போட்டியிட்டன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அப்போது போட்டியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய ஆகிய கட்சிகள் மாத்திரமே போட்டியிட்டன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட முதல் இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, 1993ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தனித் தலைமைத்துவத்தின் கீழ் நாடு நிர்வகிக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு 1994ம் ஆண்டு வெளியிடப்படுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி பீடத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில், இரண்டாவது பெரிய கட்சியாக அப்போது திகழ்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முதல் முறையாக கூட்டணியாக தேர்தலை எதிர்நோக்கியது.

அதுவரை கை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் நாற்காலி சின்னத்தில் 1994ம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியது.

1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்வசப்படுத்தினார்.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலிலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்தினார்.

அதன்பின்னர் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உருவாக்கப்பட்டு, வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டு மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.

2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன.

2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஸ களம் இறங்கினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை முறியடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பல கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னணியிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது.

போரை முடிவுக்கு கொண்டு வர தலைமைத்துவம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் களம் கண்டார். போரை களத்திலிருந்து வழிநடத்திய ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கினார்.

சரத் பொன்சேகா பொது வேட்பாளராக பொது சின்னமான அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியை தன்வசப்படுத்தினார்.

போர் வெற்றியை மையப்படுத்தியே 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது முறையாகவும் 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

2005, 2010 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தி 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து வெளியேறி, அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

பொதுச் சின்னத்தில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய நிலையில், ‘இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சியொன்று அமைக்கப்பட்டது.

பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேன வசமானதை அடுத்து, ராஜபக்ஸ குடும்பம் அந்த கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபித்தது.

கூட்டணி அரசின் தலைமை பொறுப்பு அதாவது ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பிரதமர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வசப்படுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட, ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணிலிடமிருந்து பறித்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளித்தார்.

இதையடுத்து, இலங்கையில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையொன்று ஏற்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

2019ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது.

அதேபோன்று, எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்தனர்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டது.

பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் 2019ம் ஆண்டு தேர்தலில் இல்லாது போனது. கூட்டணியாகவே கட்சிகள் அப்போது போட்டியிட்டன.

இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார்.

எனினும், கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என பல்வேறு சவால்களை கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கை எதிர்நோக்கியது.

இதையடுத்து, நாடு முழுவதும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை துறந்தார்.

அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவ்வாறான பின்னணியில், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை  Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள். 

Nikalvumedai

நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top