நூல் அறிமுகம்.
‘குழந்தைகளின் உலகம்’ சில பயிற்றுவிப்புக் குறிப்புகள் எனும் நூல் “110 நஸாஇஹ் லி தர்பியதி திப்லின் ஸாலிஹ் ” எனும் பெயரில் அரபு மொழியில் அமைந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
அலுப்பின்றி வாசிக்கும் வகையில் வாசக மனோ நிலையைக் கருத்தில் கொண்டு அழகுற தமிழுக்கு கொண்டுவந்துள்ளார் கலாநிதி பீ.எம்.எம். இர்பான்.
குழந்தைகளை செவ்வனே வழிப்படுத்தும் பயிற்றுவிப்புக்கான குறிப்புகளே இவை.
சமகால நவீன பிள்ளை வளர்ப்பு கோட்பாடுகளுக்கு இசைவான முறையில் இந்நூல் 110 உபதேசங்களை ஆன்மிகம், அறிவியல், உளவியல் கலந்து காலத்தின் போக்குடன் உடன்பட்டு செல்லும் வகையில் முன்வைப்பது நூலின் சிறப்பம்சம் எனலாம்.
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்துக்கு முன்னரான வாசிப்புக்கு கட்டாயம் பரிந்துரை செய்ய முடியுமான இன்றியமையாத நூல் எனலாம்.
பிள்ளைகளைக் கையாள்வதில் சவால்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் பெற்றோர் இந் நூலை நிதானமாக வாசித்தால் தமது பிள்ளைகளை வளர்த்து வடிவமைப்பதில் எந்த இடத்தில் சறுக்கலும் பிழையும் நிகழ்ந்துள்ளன என்பதை உடனடியாக ஊகித்து உணரலாம். அங்கிருந்து தம்மையும் சுதாகரித்து நிலை மையை சீராக்கலாம். அந்தளவு கனதியான உள்ளடக்கத்தை சுருக்கமாகவும் உருக்கமாகவும் உண்மையாகவும் உயிரோட்டமாகவும் நூல் தருகிறது.
ஒவ்வொரு பக்கத்தில் ஒவ்வொரு ஆலோசனைகளாக தரப்பட்டுள்ளதால் வாசிக்கவும் விளங்கவும் கிரகிக்கவும் சுலபமாக உள்ளது. தமிழ் மொழி நடையும் அதற்கு பிரதான காரணம்.
அதுபோலவே ஒவ்வொரு பெற்றோரையும் நோக்கி உள்ளத்தின் கதவுகளையும் சிந்தனையையும் அழுத் தமாகவும் அன்பாகவும் தட்டி உசுப்பி உணர்த்திவிடும் ஆற்றல் கொண்டவையாக இந்த ஆலோசனைகள் அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது.
நூலாசிரியரே சொல்வது போல “குழந்தை வளர்ப்பில் உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட திட்டம் இருக்குமாயின் எல்லா ஆலோசகர்களிடமிருந்தும் உபதேசம் பெற வேண்டியதில்லை. பிறரது குழந்தை வளர்ப்புக் கோட்பாடுகளையும் அனுபவங்களையும் பரீட்சிப்பதற்கான களமாக உங்கள் குழந்தைகளை எப்போதும் ஆக்கிக் கொள்ளாமல் உங்கள் திட்டத்தையே கவனமாக செயற்படுத்துங்கள்” என்பதுதான் நூலில் என்னைக் கவர்ந்த மிக முக்கிய வரி.
எனது வாசிப்பின்படி இப்படிக்கூற ஒரு காரணம் உள்ளது. நூலை வாசிக்கும் பலர் அதன் மிக ஆரம்பத்தில் அல்லது இடையில் அல்லது இறுதியில் தாம் குழந்தை வளர்ப்பில் மொத்தமாக பிழை விட்டுள்ளதாக உணர முடியும். எந்தப் பிள்ளையையும் முறையாக வளர்க்கவில்லையே என்று ஆதங்கப்பட முடியும். நூலாசிரியரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் அவ்வளவு அருமையாக அமைந்துள்ளன. உண்மையில் இதுவரை திருமணம் முடிக்காதவர்களும் குழந்தைகளை பெற்றெடுக்காதவர்களும் கூட இந்நூலை வாசித்துவிட்டுக் குழந்தைகளை வளர்க்க முற்படலாம். குழந்தை வளர்ப்பைப் பொறுத்தளவில் தான் வளர்க்கப்பட்ட விதம் போலவே தன் வீட்டில், குடும்பத்தில், சிறுபராயம் தொட்டு சூழலில் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவை தேடிக்கற்றவை போன்ற அனைத்துமே நிச்சயம் தாக்கம் செலுத்தும் என்பதை உணர்ந்தால் அதுவே போதும் என்பதுதான் நூலாசிரியர் சொல்ல முனையும் மொத்தச் செய்தியும் எனலாம்.
குழந்தைகளின் உலகம் வேறுபட்டது. அவர்களின் தனியாள் வேறுபாடுகளும் திறன்களும் ஆற்றல்களும் பலவீனங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பெற்றோரின் பிரதிகளாகவும், பெற்றோர் அடைய முடியாமல் போன ஆசைகளை அடைந்து கொள்ளும் மீள் அவ காசமாகவும் குழைந்தைகளைப் பயன்படுத்த முனைவது அல்லது. எதிர்பார்ப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கான சிறந்த உலகம் குறித்தான அழகிய பார்வையை நடைமுறை உதாரணங்கள் வழியாக இலகுவாக, எளிமையாக நூலாசிரியர் முன்வைப்பதுதான் நூலின் வெற்றி.
அட்டைப்படமும் தலைப்பும் நூலை வாசிக்க வேண்டும் என் பதை உணர்த்திவிடும் நிலையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. நூலை வாசித்துச் செல்கையில், இதுவரை நிகழ்ந்த குழந்தை வளர்ப்புத் தவறுகள் குறித்த குற்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. சிறந்த இளம் தலைமுறை உருவாக்கத்துக்கு இந்நூல் நிச்சயம் வழியமைக்கும் .
-அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. பிஸ்தாமி-
– – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…