(03/12/2019) செவ்வாய் இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சியில் இம்முறை மறைந்தோர் வரிசையில் சன்மார்க்க சொற்பொழிவாளரும் மௌலவியுமான ஏ. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) பற்றிய நினைவுகள் மீட்டிப் பார்க்கப்பட்டன. மர்ஹூம் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய சமய பாடசாலை நூருல் இஸ்லாம், மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்று விளங்கினார்.
இவர் 46 ஆண்டுகள் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்திருக்கிறார். இவர் 27 ஆண்டுகள் காலமாக வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்ஆ பள்ளி வாசலில் பிரதம கதீபாகவும் இமாமாகவும் பணியாற்றியுள்ளார். இவரது நினைவுகளை மேற்படி மஸ்ஜிதின் நிர்வாக சபை உறுப்பினரும்
பொருளாளருமான ஜனாப்
எம். எம். எம். நஜிமுதீன் நேயர்களோடு பகிர்ந்து கொண்டார்.
இன்றைய பாரம்பரியத்தில் உலமாக்கள் வரிசையில் மௌலவி மர்ஹூம்
ஏ. அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
அவர்கள் பற்றி நினைவு கூர நினைத்தோம். வாய்ப்பளித்த வல்லோனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
அவரது குரல் வளமும், மொழி ஆற்றலும் நம் மூத்தோர் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். கொழும்பு வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்ஆ பள்ளி வாசலிலிருந்து நேரடியாக ஒலிபரப்பாகிய ஏ. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களின் நோன்புப் பெருநாள், ஜும்ஆ குத்துபா நிகழ்ச்சிகள் பற்றி இன்றும் பலர் நினைவு கூர்ந்து பேசி வருகிறார்கள்.
1960 களில் முஸ்லிம் சேவையின் துவக்க கால சிரேஷ்ட முஸ்லிம் சேவை தயாரிப்பாளர் முன்னாள் பணிப்பாளர் இஸட். எல். எம். முஹம்மத் அவர்கள் தயாரித்தும் நடாத்தியும், வந்த ஆயிரக்கணக்கான நேயர்களை தம் பக்கம் ஈர்த்துக் கொண்ட இஸ்லாமிய பாடசாலை நிகழ்ச்சியை தொடராக நடாத்தும் பொறுப்பு மௌலவி மர்ஹூம் அல்ஹாஜ் ஏ. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களுக்குக் கிட்டியது.
இந் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. என்று சொல்லலாம். இஸ்லாமிய சமய பாடசாலை அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு ஒலிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் தொடராக மாதத்தின் இறுதி ஞாயிறன்று தயாரிப்பாளர்
இஸட். எல். எம். முஹம்மத் அவர்களின் ஆலோசனைக்கிணங்க இஸ்லாமிய பாடசாலை நிகழ்ச்சியில் திருக் குர்ஆனை திருத்தமாக ஓதிக் கொடுக்கும் நிகழ்ச்சியும் ஒலிபரப்பானது. இந்த பணியையும் ஏ. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களே நடாத்தி வந்தார்கள்.
இஸ்லாமிய பாடசாலை பின்னாளில் நூருல் இஸ்லாம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இன்றைய பாரம்பரியத்தில் நினைவு கூரும் மர்ஹூம் ஏ. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களைப் பற்றிய ஆளுமைகளை இன்னும் தெரிந்து கொள்வதற்காக அவரோடு நெருங்கிப் பழகிய வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த எம். எம். எம். நஜிமுதீன் அவர்களை நிலையக் கலையகம் அழைத்து வந்திருக்கிறோம்.
என்ற அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பித்தார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள்.
சகோதரர் நஜிமுதீன் தனக்கும் அப்துர் ரஹ்மான் பஹ்ஜிக்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றி குறிப்பிடுகையில்:-
ஆரம்ப காலத்தில் ஜும்ஆ தொழுகை குறிப்பிட்ட பள்ளி வாசல்களில் தான் நடைபெற்றன அதில் எமக்கு கொழும்பு 12 வாழைத்தோட்டத்தில் உள்ள அனைவரும் கொழும்பு பெரிய பள்ளி வாசலுக்கே (மஸ்ஜிதுல் கபீர்) ஜும்ஆ தொழுகைக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மர்ஹூம் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) ரஹ்மகுமுல்லாஹ் அவர்கள் ஜும்ஆ நடத்துவார்கள். அந்த ஜும்ஆவின் மூலமாக அவருடைய அருமையான தமிழும் ஜும்ஆ ஓதும் விதமும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. கொழும்பு பெரிய பள்ளி வாசலின் பிரதான கதீப் இவர் தான்.
எங்களுடைய மஸ்ஜிதுன் நஜ்மி பள்ளி வாசலுக்கு ஒரு இமாம் தேவையாக இருந்தது. பெரிய பள்ளி நிர்வாகத்தினருடன் பேசி அவர்களுடைய ஒத்துழைப்புடன் 1996 ஆம் ஆண்டு அல் மஸ்ஜிதுன் நஜ்மி பள்ளி வாசலுக்கு பேஷ் இமாமாக வந்தார்கள். அத்தோடு இவர் கற்பித்துக் கொண்டிருந்த ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியிலிருந்து கொழும்பு மிகுந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திற்கு மாற்றலானார்.
இஸ்லாம் தமிழ் அரபு
ஆசிரியராக கடமையாற்றினார். மஸ்ஜிதுக்கு கடமைக்கு வந்த காலத்திலிருந்து அவர்களோடு நிறைய தொடர்புகள் இருந்தன. 27 ஆண்டுகள் எமது பள்ளியில் கடமையாற்றி பல சேவைகள் செய்து பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
முஸ்லிம் சேவையில் இவர் நடத்திய நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிடுகையில்:-
மர்ஹூம் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ரஹ்மகுமுல்லாஹ் அவர்கள் 1960 லிருந்து முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய சமய பாடசாலை, திருக் குர்ஆன் விளக்கவுரை, மணிமொழிகள், புர்தா சரீப், சமாய் திர்மிதி, கிலாபத் பற்றி தொடர் பேச்சும் பேசுவார்கள். மீலாத் நபி காலங்களிலும் மிஹ்ராஜுடைய மாதங்களிலும் ரமழான் காலங்களிலும் விசேட பேச்சுக்களும் ஜும்ஆ பிரசங்கம் பெருநாள் சொற்பொழிவு மற்றும் பல நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள்.
இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாறிய பின்னரும் நீண்ட காலமாக நடத்தி வந்தார்கள்.
வாழைத்தோட்ட மஸ்ஜிதிலிருந்து ஒலிபரப்பான வானொலி நேரடி ஒலிபரப்புகள் பற்றி குறிப்பிடுகையில்:-
எம். எச். எம். குத்தூஸ்,
இஸட். எல். எம். முஹம்மத் ஹாஜியார் போன்றவர்கள் பணிப்பாளர்களாக இருந்த காலத்தில் எங்கள் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன.
அனைத்தும் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ரஹ்மகுமுல்லாஹ் அவர்களால் நடத்தப்பட்டு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டன.
அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களது குடும்பம் பற்றி குறிப்பிடுகையில்:-
மர்ஹூம் அப்துல்லா அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்கள் 1933/08/23 ஆம் திகதி காலி தடாலடி கோப்பே என்ற கிராமத்தில் மௌலானா, உஸ்தாத், மௌலவி அப்துல்லாஹ் (தேவ்பந்தி) ரஹ்மகுமுல்லாஹ் அவர்களுக்கும்
மர்ஹூமா பாத்திமா பீபி என்ற பெண் மணிக்கும் மகனாகப் பிறந்தார்கள்.
இவருடைய மூத்த சகோதரர் தான் மர்ஹூம் நஜ்முல் அப்லாக் அல்ஹாஜ் மௌலவி முஹம்மத் (பஹ்ஜி) அவர்கள். மர்ஹூம் உஸ்தாத் மௌலவி அஹ்மத் (பஹ்ஜி) கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உப அதிபர் அப்துல் அஹத் அவர்கள் உட்பட 12 சகோதர சகோதரிகள் இருந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
ரஹ்மகுமுல்லாஹ் அவர்கள் வெலிகம வெலிபிடியவைச் சேர்ந்த சிஹாபுத்தீன் ஹாஜியார் தம்பதிகளின் செல்வப் புதல்வி நூருல் நஜீமா என்ற பெண்மணியை 1962/12/20 ஆம் திகதி வியாழக் கிழமை திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு 03 ஆண் பிள்ளைகளும் 04 பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அகில இலங்கை இஸ்லாமிய சோனக கலாச்சார நிலையத்தினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் பங்கு பற்றி 06 தடவைகள் முதலாம் இடத்தையும் 02 தடவைகள்
02 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அவர் ஓய்வு பெற்றதை பற்றி குறிப்பிடுகையில்:-
அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ரஹ்மகுமுல்லாஹ் அவர்கள் வாழைத்தோட்ட மஸ்ஜிதிலிருந்து ஓய்வு பெறவில்லை. தொடர்ச்சியாக இறுதி காலம் வரை சேவை செய்தார். ஒரு நாள் “சுபஹ்” தொழுகையின் பின் எழுந்து ஈமான், யெகீன், தொழுகை சம்பந்தமாக உருக்கமான ஒரு “பயான்” செய்தார்கள். அது 1996/03/10 ஆம் திகதி. அன்றைய தினமே தான் வாழும் கிராமமான வெலிகம வெலிபிட்டி ஊருக்கு சென்றார்கள். ஆனால் யாருக்கும் தெரியாது அது அவரது கடைசி சந்தர்ப்பம் என்று. யாருமே நினைக்கவில்லை அவர் திரும்பி வர மாட்டார்கள் என்று.
அங்கு ஊரில் தன்னுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், குடும்பத்தினரோடு உறவாடி விட்டு நித்திரைக்கு சென்ற போது திடீரென சுகவீனமுற்று இரவு 11.45 மணியளவில் திங்கற்கிழமை 1996/03/11 ஆம் திகதி தனது 63 வது வயதில் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்கும் நிலையில் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்கள் தூய கலிமா மொழிந்தவர்களாக கிப்லாவை முன்னோக்கிய நிலையில் அவரது உடலிலிருந்து உயிர் “தாருல் பFனா” வை விட்டு தாருல் “பBகா” வை அடைந்தது. “இன்னா லில்லாஹி வ யின்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறி தகவல்களைக் கூறி முடித்துக் கொண்டார்.
– – – – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…