Article

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.

Dr. PM Arshath Ahamed MBBS MD PAED குழந்தை நல மருத்துவர் அவர்கள் எழுதிய..    நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.

“சார் புள்ளைக்கி ரெண்டு வயாசுகுது இன்னும் பேசுறான்ல”.

“இவன் சரியான கரைச்சல். ஒரு இடத்தில இருக்க மாட்டான்”.

” நேர்சரி டீச்சர் சொல்றா இவள் படிக்கமாட்டாளாம். அறவே கவனம் இல்லையாம்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளுடன் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள்.‌ சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர் இன்டர்நெட்டில் தேடிக் களைத்து ஆட்டிசம் என்ற சொல்லை கண்டவுடன் பரிதவித்து போகிறார்கள். பலருக்கு இந்தச் சொல் பழக்கமாக இருந்தாலும் இன்னமும் பயம் குறைந்தபாடில்லை.

👉ஓகே. Autism (ஆட்டிசம்) என்றால் என்ன? நீங்களே சொல்லுங்களேன்.

🙂அது ஒன்றும் இல்லை. இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. சிலவேளை, ஒரு சில இலகுவான பிரச்சினைகளும், சில வேளைகளில் மிகச் சிக்கலான பிரச்சினைகளும் இருப்பதால் இதை “Autism Spectrum Disorders (ASD)” என்று அழைக்கிறோம். அது போல இருதயத்தில் மேல் அறையில் ஏற்படும் துளையையும் ASD(Atrial Septal Defect-‘ஹோல் இன் த ஹாட்’) என்றே அழைக்கிறோம். ASD என்பதை டயக்னோஸிஸ் காட்டில் பார்த்து விட்டு ‘ஹோல் இன் த ஹாட்’ உள்ளவர்கள் நரம்பியல் நிபுணரையும், ஆட்டிசம் உள்ளவர்கள் கார்டியொலிஜிஸடயும் வந்தடைந்த கதைகள் நிறைய உண்டு. (Dr Aakiff , Dr Haartheek அப்படித்தானே)

ஆட்டிசம் குழந்தைகளின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது. பேச்சாற்றலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில், தன் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதில் இயலாமையை உண்டாக்குகிறது. இது தான் பிரச்சினை.

இருந்தாலும், இது ஒரு நோய் கிடையாது. ஒரு குறைபாடு மாத்திரமே. நோய் என்றால் சுகப்படுத்தலாம். குறைபாடு என்றால் நிவர்த்திக்கலாம். ஆகவே அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

👉ஓகே. அப்படியானால்
ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

🙂இதை குழந்தையின் வளர்ச்சி செயல்பாடுகளை கவனமாக உற்று நோக்குவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். இதற்கான விஷேட பரிசோதனைகள் எதுவும் இல்லை.

குழந்தைகள், பொதுவாக, ஏனைய மனிதர்களைப் போலவே ஒரு சமூக விலங்கு. முக பாவனைகளுக்கு ஏற்றாற் போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கும் உண்டு. புன்னகைத்தால் புன்னகைப்பார்கள். முறைத்தால் அழுவார்கள். கையை விரித்து நீட்டி கிட்டப்போனால் ஓடி வருவார்கள். இது தான் அவர்கள் இயல்பு.

ஆனால், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய தனி உலகில் இருப்பார்கள். நமது அரசியல்வாதிகளை போல, யாரையும் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டார்கள். பெயர் கூறி அழைத்தால் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். பேச மாட்டார்கள். யாருடனும் ஒட்டி உறவாட மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தற்செயலாக, யாரோடாவது பேச நேர்ந்தாலும் எதிரில் பேசுபவரின் கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். (அப்படி ஒருவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கிறார். எந்த நாடு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.)

இவர்களுக்கு ‘மூட் ஸ்விங்ஸ்’ அதிகமாக இருக்கும். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏன் என்று தெரியாது. சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது. அதிகம் கோபமடைவார்கள். எடுத்ததற்கெல்லாம் இரிடேட் ஆவார்கள். சில வேளை கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். செல்லப்பிராணிகளை துன்புறுத்தி மகிழ்வார்கள்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Echolalia எக்கோலாலியா” விரும்பிகளாக இருப்பார்கள் – அதாவது சொன்ன வார்த்தையையோ(சில வேளை தூசனமாக , சில வேளை பாடலில் முதல் வரியாக, அவர்கள் பேசும் ஒரு வசனமாக இது இருக்கும்), அதையே திரும்பத் திரும்ப கூறுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் வாதிகள் திரும்ப திரும்ப தருகின்ற வாக்குறுதி போல, பெரும்பாலும், இதற்கு பொருளோ, காரணமோ இருக்காது.

உங்கள் குழந்தைகளிடமும் பின்வரும் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால், அது ஆட்டிசமாக இருக்கலாம். லாம். லாம்.லாம் என்பதை கவனிக்கவும்.

🌛எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

🌛கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது. Avoiding eye contact

🌛பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

🌛வழக்கமான குழந்தைகளின் விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

🌛தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

🌛சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.

🌛தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

🌛காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

🌛வலியை உணராமல் இருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகள் – கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது.

🌛பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

🌛பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது – அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

🌛எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

🌛தன்னந்தனியே சிரித்துக் கொள்வது.

🌛சுற்றக்கூடிய, சுழலக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

🌛வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

🌛சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.

🌛நாளாந்த செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது. ஒரே ப்ளேட், ஒரே கப் என, ஒரே இடம், ஒரே ஒடர் என பிடிவாதமாக இருப்பது.

🌛சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங் கூட்டத்தில் தனித்து இருப்பது. (சபையை தனிமையாக்கவும், தனிமையை சபையாக்கவும் உன்னால் ஒன்னுமா? என்று வைரமுத்து கேட்பது அது வேற ஸ்பெக்ட்றம் டிஸ்ஓடர் ப்ரென்ட்ஸ்)

இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படை அறிகுறிகள். இவைகள் இருந்தால் உங்கள் குழந்தைகளை உடனடியாக விஷயம் தெரிந்த வைத்தியரிடம், ஒரு சிறுவர் வைத்தியரிடம் காண்பிப்பது சிறந்தது.

👉ஆட்டிசம் உள்ள குழந்தைகளை என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்? அடித்து திருத்தலாமா?

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரண குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். மிக அதிகமாக தேவைப்படும். மனிதத் தொடர்பு மிக அதிகமாக தேவைப்படும். ஸ்க்ரீன் டிவைஸ்கள், டிஜிட்டல் சாதனங்களிலிருந்து அவர்களை தூரமாக்க வேண்டும். இது தற்போதைய காலத்து பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஆட்டிசம் அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளை கையாள பொறுமை மிக அவசியம். அவசியம் என்பதை விட அத்தியாவசியம் என்று சொல்லலாம்.

இவர்களை மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். மெனக்கட வேண்டும். அதுபோல, ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். Occupational therapy அளிக்க வேண்டும்.

இந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். இது அவர்களின் கற்றல் ஆற்றல் மேம்பட உதவும்.

குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர் Paediatric Neurologist, குழந்தை நல சமூக மருத்துவர் Community Paediatrician, குழந்தை நல மருத்துவர் Paediatrician போன்றவர்களகன் கண்காணிப்புடன்; Speech Therapy ஸ்பீச் தெரபி, Cognitive Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி, என பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை Multi Disciplinary team தேவைப்படும். நீண்ட காலம் எடுக்கும். பொறுமையுடன் சிகிச்சைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். இவர்களை அடிப்பதால் ஏசுவதால் எந்த பயனும் இல்லை.

👉ஓகே டாக்டர். என்ன காரணத்தினால் ஆட்டிசம் குழந்தைகளில் ஏற்படுகிறது என்று சொன்னால் நாங்கள் அவைகளை தவிர்க்கலாமே? அது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.

🙂( நாம சொன்னா உடனே பாஞ்சி உழுந்து செஞ்சிடப்போறாக. சரி அதையும் சொல்லுவமே)

ஆட்டிசம் ஏற்பட இதுதான் காரணம் என குறிப்பாக எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியிலான காரணங்கள் வெறும் 0.5% க்கும் கீழே தான் இருக்கின்றன. இருந்தாலும் சராசரி வயதை(20-30) தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது(80s 90sகிட்ஸ் உங்களை தான்). மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் (குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களிடம்), போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அதுபோல குழந்தைகளின்
மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (Structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (Chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகின்றன. இவை கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் ஏற்புடும் சிக்கல்கள் காரணமாக உருவாகும். உதாரணமாக கழுத்தில் மாக் கொடி சுற்றுதல் (Cord around the neck), முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல்(Meconium Aspiration), குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின்னாளில் ஏற்படும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளால், மூளைக்கு பாதிப்பு ஏற்படல் போன்றவற்றால் ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

👉இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்

🙂ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால் குழந்தைகள் சாதாரண வாழ்க்கை வாழ்வார்கள். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்படி இல்லாமல், அடையாளம் காணாது, கண்டும் காணாமலும் விட்டுவிட்டால், அது போல, பொறுமையாக இருந்து சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.

1943-ல் Dr. Leo Kanner ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் அந்த ஆய்வுக் கட்டுரைக்கு வைத்த தலைப்பு `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact). அந்த தலைப்பு ஒன்றே இதை விளங்கப்படுத்த போதுமானது.

பிற் குறிப்பு- இந்த ஆக்கத்தை மேற்பார்வை செய்து தந்த, ஆட்டிசம் குறித்து இந்த துறையில் விஷேட பயிற்சி பெற்ற Dr Phirarthana Kamalanathan.
Consultant Community Paediatrician
அவர்களுக்கு கோடி நன்றிகள்.

– Dr. PM Arshath Ahamed MBBS MD PAED

குழந்தை நல மருத்துவர்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top