Musilm

கொரோனா வைரஸ் முஸ்லிம்களின் நம்பிக்கை வழிமுறைகளை சவாலுக்கு உற்படுத்துகிறதா?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் முஸ்லிம்களின் நம்பிக்கை வழிமுறைகளை சவாலுக்கு உற்படுத்துகிறதா?

Dr.Mehmet Ozalp Phd., அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

கொரோனா வைரஸ்

மெஹ்மத் ஓசல்ப் ஒரு இஸ்லாமிய இறையியலாளர் மற்றும் பொது அறிவுஜீவி. அவர் 2011 இல் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் நாகரிகத்திற்கான மையத்தை நிறுவினார். 2009 இல் ஆஸ்திரேலியாவின் இஸ்லாமிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் நிறுவன இயக்குநராக உள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் PHD பெற்றார். அவர் மூன்று புத்தகங்களை எழுதியவர்.

கொரோனா வைரஸ் இன்றைய உலகை மிகப் பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. முஸ்லிம்களின் இயல்புநிலை, வணக்க வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம் மாற்றம் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடியது என்ற போதிப்பையும் நினைவூட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளில் இஸ்லாமிய கலாச்சார, ஆன்மீக மற்றும் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எண்ணற்ற வழிகளை இஸ்லாம் காட்டித்தந்திருக்கின்றது.

—-சூழ்நிலைக்கு ஏற்ற சமூக மாற்றம் —-

ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டுள்ளனர். அதேபோன்று குடும்ப உறவுகளை பேணுவதற்கும் அக்கறை செலுத்துகின்றனர். பெருமானார் (ஸல்) அவர்கள், வலுவான குடும்ப உறவுகளைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார்கள். அல்குர்ஆன், குடும்பங்களுக்கிடையில் தாராளமாக கொடுத்து உதவுவதை ஊக்குவிக்கின்றது. (16:90); அதே போன்று வயதானவர்களுக் இரக்கம் காட்ட ஏவுகின்றது. (17:23)

இத்தகைய போதனைகள், முஸ்லிம்கள் பெரிய குடும்பங்களாக ஒன்றாக வாழ்வதையும் அல்லது தொடர்ச்சியாக தமது உறவுகளையும் பெற்றோர்களையும் சந்திப்பதையும் வழக்கமாக கொள்வதற்கு நெறிப்படுத்தியிருக்கின்றது.

இன்றைய காலகட்டம் சமூக இடைவெளியைப் பற்றி அதிகம் சிரத்தை எடுக்க வேண்டிய காலகட்டமாக இருப்பதால், வழமையான நடைமுறைகள் மாற்றத்திற்குட்படும் என்பதும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை நெறிமுறை வழிகாட்டல்கள் கொண்டுள்ளமையும் புரிதலுக்குரியதாகும்.

சமூக இடைவெளியைக் குறைப்பதற்காக கைலாகு கொடுத்தல் மற்றும் அறிமுகமானவர்களிடையே முஸாபஃ செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது ஜாஹிலியாக் காலத்தில் இருந்து சமூக இடைவெளியைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றமாகும்

நோயுற்றவர்களைப் பார்த்து நலன் விசாரித்து அவர்களுக்காக பிராத்திப்பது பேணத்தக்க நடைமுறையாக கருதப்படுகின்றது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் இத்தகைய நடைமுறைகள் பொருத்தமற்றது என்பதுடன் மாற்று வழிகாட்டுதல்களும் உடையதாகும்.

–சுத்தம் ஈமானின் பாதியாகும் —

கொரோனா வைரஸை தடுத்து நிறுத்துவதென்பது முஸ்லிம்களின் இயல்போடு ஒன்றித்துப் போகும் சுகாதார அம்சமாகும். கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைப்புகளும் நிபுணர்களும் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகின்றனர். குறிப்பாக குறைந்தது 20 விநாடிகளுக்கு அடிக்கடி கைகளைக் கழுவுமாறு பரிந்துரைக்கின்றனர்.

இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக தனிப்பட்ட சுகாதாரத்தை ஊக்குவித்து வருகின்றதா? ஆம் !
“மேலும், உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக!” – 74:04
“..,தூய்மையாக இருப்பவர்களை இறைவன் நேசிக்கின்றான்…” – 2:222

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “சுத்தம் என்பது (ஈமானின்) விசுவாசத்தின் பாதி” என்பதை வலியுறுத்தியதுடன், உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவவும், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது குளிக்கவும் (திருமண உறவுகளுக்குப் பிறகு) தினமும் பல் துலக்கவும், மற்றும் நகங்கள் மற்றும் ஏனைய அகற்ற வேண்டியவற்றை அகற்றவும் முஸ்லிம்களை ஊக்குவித்திருக்கின்றார்கள்.

மேலும் நாள்தோறும் ஐவேளைத் தொழுகைக்கு முன்னர் முஸ்லிம்கள், தனது உடலின் அங்கங்களை சுத்தப்படுத்தவும் (வுழூ) செய்கின்றனர். இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னரே அவர்கள் தமது ஐவேளை வணக்கத்தில் ஈடுபடமுடியும்.

இவை நோய் பரவுவதை முற்றிலுமாக தடுக்காவிட்டாலும், ஆபத்தை குறைக்க உதவுகின்றது.

— மஸ்ஜித்களை மூடுதல் . . . —

தமது ஐவேளைத் தொழுகைகளை முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் மேற்கொள்வதை புனிதமாக கருதுகின்றனர். அதன்படி, கூட்டாக தோளோடு தோள் வரிசையாக நின்று தொழுகை இடம்பெறும். எனினும் தொற்று நோய் காலத்தில் இவை நிறுத்தப்பட்டு மஸ்ஜித்கள் மூடப்பட்டுள்ளன.

நாளாந்த ஐவேளைத் தொழுகைகளை மஸ்ஜித்களில் தவிர்த்து அதனை தமது இருப்பிடங்களில் நிறைவேற்றிக்கொள்வது இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரைக்கும் கடினமானதல்ல. ஆனால் வெள்ளிக்கிழமை தொழுகையை தொடர்பில் மாற்று ஏற்பாடு என்ன? என்ற கேள்வி பரவலாக மேலெழுந்துள்ளது. அதற்குப் பகரமாக வீடுகளில் இருந்து தொழுவதற்கு வழிகாட்டப்படுகின்றது.

முதன் முதலில் ஈரான் வெள்ளிக்கிழமை தொழுகையினை இடைநிறுத்துவதாக அறிவித்தது. Turkey, Indonesia ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை தொழுகையை நெருக்கமற்ற முறையில் தொடர்ந்து நடாத்திச் சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. வைரஸ் தொற்றின் பாரதூரத்தைத் தொடர்ந்து உலக அளவில் மஸ்ஜித்கள் மூடப்பட்டன.

மஸ்ஜித்கள் மூடப்படுவது என்பது முஸ்லிம்களின் நாளாந்தத் தொழுகைகள் நிறுத்தப்படுவது என்பது அர்த்தமல்ல. இஸ்லாத்தில், தனித்து வணங்குவதும் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளும் பெரும் பங்கினை வகிக்கின்றது.

முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் நாளாந்தம் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவது வலியுறுத்தப்பட்டதொன்றாகும். இதேநேரம் வீடுகளும் பிரார்த்தனைக்குரிய இடங்களாகும் என்பதுடன் அதற்கு இயல்பானதாக வீடுகள் பேணப்பட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.

— ரமழான் நோன்பும், ஹஜ் கடமையும் —

இஸ்லாத்தில் ரமழான் நோன்பும், ஹஜ் யாத்திரையும் ஐங்கடமைகளில் உள்ளதாகும்.

புனித ரமழான் நோன்பு இன்னும் சில வாரங்களில் எம்மை வந்தடைய இருக்கின்றது. ஏப்ரல் இறுதி வாரத்தில் அது எம்மை வந்தடைய இருக்கின்றது. இம் மாதத்தில், முஸ்லிம்கள் நாளாந்தம் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணல், குடித்தல் மற்றும் திருமண உறவுகளை தவிர்க்கின்றார்கள். இந் நடைமுறையில் கொரோன வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்திலும், தராவிஹ் எனப்படும் தொழுகையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகளுக்கு தங்கள் நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் இப்தார் நிகழ்விற்கு அழைத்து உணவுகளைப் பரிமாறுவர். அதே போன்று ஏனைய மத சகோதரர்களும் இவ்வாறு அழைக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. இன்றைய நிலைமையில் இவை சாத்தியமற்றுப் போகின்றன. மேலும் ஈத் பெருநாளும் இம்முறை அதிக மட்டுப்பாடுகளுக்குள்ளானதாக இருக்கும்.

–புனித யாத்திரை மீதான தாக்கம்… —

உம்ரா எனப்படும் புனித பயணம் வருடம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இது ரமழான் மாதத்தில் அதிகரித்துக் காணப்படும். ஈரான் கொரானா வைரஸினால் அதிகம் பாதிப்பைச் சந்தித்ததால், சவூதி அரேபியாவினுள் ஈரான் மற்றும் பிற நாட்டு யாத்திரிகர்கள் உள் நுழைவதை பெப்ரவரி 27 க்கு முன்னரே நிறுத்திவிட்டது.

முக்கிய புனித யாத்திரையான ஹஜ், ஜூலை பிற்பகுதியில் நிகழவிருக்கின்றது. ஜூலை மாதத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற அதேவேளை, பல்வேறு நாடுகளுடனும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுடனும் சம்பந்தப்பட்ட ஒரு யாத்திரையாக இது காணப்படுவதனால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும். எனவே 2020 ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரையை சவூதி நிறுத்தும் வாய்ப்பே காணப்படுகின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் 14 நூற்றாண்டுகளில், யுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற போக்குவரத்து போன்ற காரணங்களினால் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்றில் தொற்றுநோய் காரணமாக புனித யாத்திரை நிறுத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். மேலும் ஹஜ் பருவகால வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகின்றது.

— இறை நம்பிக்கைக்கும் முன்னெச்சரிக்கைக்குமான சமநிலை —

இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்து அதனை பரிபாலிப்பதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர். இந்த வைரஸ் தாக்கமும் இறைவனின் சோதனைகளில் ஒன்றாகும் என்பதும் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விடயமாகும். ஏனைய சமயத்தைச் சாந்தவர்கள் வாதிடுவதைப்போல, முஸ்லிம்களும் இது இறைவனின் சோதனைகளில் ஒன்று என்று கூறுகின்றனர். இத்தகைய சிந்தனை பயத்தின் உணர்வைக் குறைக்க உதவுவதோடு, மக்களின் உள நிலைமையை சீராக்க உதவும்.

அதே நேரம் இறைநம்பிக்கை பற்றிய ஒரு பிரபலமான ஹதீஸில், ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறை தூதர் அவர்களே, நான் என்னுடைய ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு அல்லாஹ்வின் மீது தவக்கல் (நம்பிக்கை) வைக்க வேண்டுமா? அல்லது அதை அவிழ்த்து விட்டு விட்டு அல்லாஹ்வின் மீது தவக்கல் (நம்பிக்கை) வைக்க வேண்டுமா?’ என கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒட்டகத்தைக் கட்டி விட்டு அல்லாஹ்வின் மீது தவக்கல் (நம்பிக்கை) வையுங்கள்.’ என்று கூறினார்கள். [திர்மிதி] இந்த ஹதீஸ் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூறத்தக்கதொன்றாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்துள்ளார்கள். நோய்களுக்கு சிகிச்சை பெறுவதனையும் ஊக்குவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்” (முஸ்லிம் 4084).

“அல்லாஹ்வின் தூதரே! (நோயுற்றால்) நாங்கள் மருத்துவம் செய்து கொள்ளலாமா?” என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் அடியார்களே! (நோயுற்றால்) நீங்கள் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! இறைவன் ஒரேயொரு நோயைத் தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்தை உருவாக்காமல் இல்லை” என்று கூறினார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! அந்த ஒரு நோய் எது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.” முதுமை” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி, நஸயீ, அஹ்மத், அபூதாவூத்)

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனிமைப்படுத்தல் குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தினார்கள்:
“நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து வெளியேறாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அப் பிரதேசத்திற்குள்ளும் நுழைய வேண்டாம்”. (புகாரி) என்று அறிவூட்டியுள்ளார்கள்.

இது போன்ற தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. தமது வருமானத்தையும், செல்வங்களையும், உயிரையும் இழக்கவேண்டி ஏற்படுகின்றது. துன்பங்களின் போது இழந்த சொத்து தர்மமாக கருதப்படும் என்றும், தொற்றுநோயால் இறப்பவர்கள் சொர்க்கத் தியாகிகளாக கருதப்படுவார்கள் என்றும் துக்கப்படுபவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுதல் வார்த்தையை அறிவுறுத்தினார்கள்.

உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போம். ஊருக்கும் உலகத்திற்கும் உங்களால் பயன் கிட்டட்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top