கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட மியான்மர் முஸ்லிம்கள் தமது மஸ்ஜித்களை வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மியன்மார் இஸ்லாமிய மத விவகார சபையின் செயலாளர் Tin Maung Than குறிப்பிட்டார்.
மியான்மரில் 1,000 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களும் மத்ரஸாக்களும் காணப்படுகின்றன. இதேபோன்று முஸ்லீம் வர்த்தகர்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இவ்வாரான கட்டிடங்களை வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்காலிக பயன்பாட்டிற்கு வழங்க முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர்.
தேவையேற்படின் மதக் கட்டடங்களை தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களாக பயன்படுத்தும் அனுமதியை வழங்கும் முடிவை தேசிய மற்றும் பிராந்திய அரசாங்கங்களுக்கும், சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கும், மியன்மார் இஸ்லாமிய மத விவகார சபை அறிவித்துள்ளது.
தாய்லாந்து, சீனா மற்றும் லாவோஸ் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து எல்லை வழியாக திரும்பிய மியான்மர் நாட்டினருக்கு அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலை விதித்தனர்.
இவ்வாறு திரும்பி வருபவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களை வழங்கி சுய-தனிமைப்படுத்தலுக்கு உதவுமாறு உள்ளூர் முஸ்லிம் சமூகத்தை, மியன்மார் இஸ்லாமிய மத விவகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து மியன்மார் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததை மியன்மார் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது. இது வரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படாததன் காரணமாக, வைரஸ் தொற்றாலர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் முன்னுதாரணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.