கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இஸ்ரேலிய சிறைச்சாலைகள் எவ்வளவுக்கு தகுதியற்றவை என்பதை எண்ணியும் சிறைகளில் தங்கியிருப்பவர்கள் மிகவும் ஆபத்தில் உள்ளனர் என்ற நிலையிலும் பலஸ்தீனியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பாலஸ்தீனத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலஸ்தீனியர்களின் உடல்நலம் மற்றும் உயிராபத்துக் குறித்து அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலஸ்தீனர்கள் சுகாதாரமற்ற நெரிசலான இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளமை குறித்தும் நியாயமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதே நேரம் இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டள்ள பலதீன் சிறைக் கைதிகளைக் கொண்ட சிறைச்சாலையிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, பலஸ்தீன் சிறைக் கைதிகளின் நிலை குறித்து மேலும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாலஸ்தீனிய கைதிகள் விவகாரக் குழு, இஸ்ரேலிடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் ஒரு கைதிக்கே கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 19 பலஸ்தீன் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அனைத்துக் கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, ஏனைய இரண்டு சிறைகளான மத்திய இஸ்ரேலில் உள்ள ராம்லே சிறை மற்றும் ஜெருசலேமில் உள்ள மொஸ்கோபியா தடுப்பு மையம் ஆகிய சிறைகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிரான முன்னேற்பாடு நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுக்கவில்லை என்று பலஸ்தீனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.