நியூஸிலாந்தில் ஜும்மாஆ தினத்தில் (2019.March.15) பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். 30 பேரளவில் காயப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட இச் சம்பவத்தின் பின்னர் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பிற மதத்தவர்களின் தற்போதைய அணுகுமுறை ஆய்வுக்குறியதாகும்.
இச் சந்தர்ப்பத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த பிறமதத்தவர்களின் எண்ண அலைகள் எத்தகையது என்பது நோக்கத்தக்கதாகும். முஸ்லிம்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டியவர்கள்தான் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கவில்லை. இதனை இன்னுமொரு முறையில் குறிப்பிட்டால், முஸ்லிம்களின் இருப்பினால் பிறமதத்தவர்கள் பாதிப்படையவில்லை. முஸ்லிம்களின் நடத்தைகளினால் பிறமதத்தவர்கள் அதிருப்தி கொள்ளவில்லை என்பதை தெளிவாக உணர முடிகின்றது. மாறாக முஸ்லிம்களினால் பிறமதத்தவர்கள் ஏதாவதொரு விதத்தில் பாதிப்படைந்திருந்தால் நியூஸிலாந்து பெண்கள் முஸ்லிம் பெண்களைப் போல் தலையை மறைத்து தமது அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.
அதேபோன்று பிறமதத்தவர்கள் ஏதாவதொரு விதத்தில் அதிருப்தியடைந்திருந்தால் குறிப்பிட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நியூஸிலாந்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு பிறமதத்தவர்களினால் மனிதச் சங்கிலி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்காது.
இஸ்லாத்தைப் பற்றி ஏதாவதொரு விதத்தில் அவர்கள் தம்முள் விதைத்து வைத்திருக்கின்றார்கள். அதனை எமது நடத்தைகளினால் தடுத்து விடக்கூடாது. ஒவ்வொரு முஸ்லிமும் தாம் வாழும் சூழலில் இஸ்லாத்தின் பிரதிநிதியாக விளங்குகின்றான். இஸ்லாத்தின் பிரதிநிதி என்பதற்காக வரிந்துகட்டிக்கொண்டு பிறரின் ஹிதாயத்திற்காக பாடுபடவேண்டிய அவசியம் தேவையற்றதாகும். நடத்தை ஒன்றே போதுமானதாகும். இனிய சொற்கள், கனிவான புன்னகை, விட்டுக்கொடுப்பு, பொறுமை, உதவிடும் மனப்பான்மை, இவ்வாறு பல. இவை ஒன்றும் எமக்கு புதிதல்லவே என்பதை நாம் உணர வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிவாசலில் ஒருவர் சிறுநீர் கழித்தபோது தன் கரங்களினாலேயே அதனை எம் பெருமானார் (ஸல்) அவர்கள் சுத்தப்படுத்தினார்கள் என்பதை மறந்திருக்கமாட்டோம். தம் மீது அழுகிய குடல்களை கொட்டிய போதும் சகித்துக் கொண்டார்களே என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம். இத்தனை முன்மாதிரிகள் எம்மிடம் இருக்க எதற்குப் பின்னடைவு ?!