Muslim History

மூதூரின் முதலாவது பஸ் போக்குவரத்து

மூதூர்

மூதூர் பகுதியில் முதலாவது பஸ் சேவையானது தனியாருக்கே உரித்துடையதாயிருந்தது.

மூதூர் பகுதியில் 1942 ஆம் ஆண்டு முதலாவது பஸ்சேவையானது ஆரம்பமானது. தனியார் முதலீட்டாளர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டிருந்த இப் பஸ் சேவையானது 1959 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

1942 ஆம் ஆண்டு சன்முகநாதன் பஸ் கம்பனியின் மூலமாகவே இந்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டு சேவையாற்றி வந்தது.

அப்போது உபயோகத்திலிருந்த பஸ் ஆனது “பென்ஸ்பஸ்“, “மூஞ்சிபஸ்” என அழைக்கப்பட்டது. சுவாரஸ்யம் என்னவென்றால் எமது ஊர் வழக்கில் “காராத்தல் பாண்” எனவும் அந்த பஸ்ஸை அழைத்திருக்குகிறார்கள்.

அக்காலங்களில் பஸ் சேவையானது, திருகோண மலை மற்றும் மட்டக்களப்பு வரையான போக்குவரத்தே அதிகளவு இடம்பெற்றிருந்தது.

இரு நேர போக்குவரத்து சேவையினைக் கொண்ட இவ் பஸ்கள், மட்டக்களப்பிலிருந்து காலை 6:00 மணிக்கு ஆரம்பித்து சுமார் 10:00 மணியளவில் திருகோணமலையை வந்தடையும் மீளவும் திருகோணமலையிலிருந்து மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு சுமார் 7:00 மணியளவில் மட்டக்களப்பை சென்றடையும் இவ்வாறாக இப் போக்குவரத்து சேவையானது தொடர்ந்ததாக அறிய முடிகிறது.

மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்டு திருகோணமலையினை அடையும் பஸ் ஆனது அதன் இடை நடுவே A15 வீதியில் 07 துறைகளைக்கடந்து செல்லும் ஒரு நிலையிருந்தது. ஒவ்வொரு துறையிலும் மிதவைப் பாதைகள் (Ferry) உபயோகத்திற்காக சேவைக்குட்பட்டிருந்தது.

1957 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமானது முதலாவதாக மூதூரில் பஸ் டிப்போ ஒன்றினைத்திறந்து வைத்தது. அப் பஸ் நிலையமானது தற்போதைய நீதி மன்றக் கட்டிடத்துக்கு எதிராக அமைந்திருந்ததாக அறிய முடிகிறது.

இவ் பஸ் நிலையத்தினால் மூதூரிலிருந்து தோப்பூர், கிளிவெட்டி, சேருவில மற்றும் கல்லாறு போன்றவற்றுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றிருந்ததோடு அக்காலங்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீ.குட்டி என்பவரின் லொரி வாகனமும், நீர்கொழும்பைச்சேர்ந்த டபில்யு.அல்பேட் என்பவரின் சீ.என். இலக்க போர்ட்காரும் மூதூர் கிளிவெட்டிகளுக்கிடையேயான பிரயாணிகள் சேவைக்காக ஈடுபட்டிருந்தன. இதன் மூலமாகவே பிரயாணிகளும், பொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன என்பதும் நினைவு கூறத்தக்கது.

தொகுப்பு:-
எம்.எம்.மனாஸீர்(நத்வி)
நெய்தல் நகர்
மூதூர்-01

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top