Muslim History

கழுகுக் கண் பார்வையில் துருக்கி

துருக்கி
கழுகுக் கண் பார்வையில் துருக்கி

துருக்கியின் அரசுக்கெதிராக சதிப் புரட்சியொன்று மேற்கொள்ளப்பட்டு அது முறியடிக்கப்பட்ட விடயம் அனைவருக்கும் மறந்திருக்காது.

தற்போது இன்னுமொரு விதத்தில் பொருளாதார பிரச்சினை ஒன்றை துருக்கி எதிர்நோக்கியுள்ளது.

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா  கடந்த வாரம் உயர்த்தியதிலிருந்து துருக்கியின் பண மதிப்பு (லிரா) வெகுவாகச் சரிந்தது.

மேலும் இந்த வரிவிதிப்பு குறித்து ட்ரம்ப், “துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன்.  நம்முடைய வலுவான டாலருக்கு முன், துருக்கியின் லிரா (லிரா – துருக்கி பணம்)  சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை”  என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அமெரிக்கா வரியைக் கூட்டியதன் பின்னணி என்ன ?

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது.

ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சற்று உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கி அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, நிலக்கரி மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. துருக்கி பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் கூறிள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “இந்த முடிவுக்கு துருக்கி நிச்சயம் வருத்தப்படும். வரியை உயர்த்தி துருக்கி தவறான முடிவை எடுத்துள்ளது” என்று கூறினார்.

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.

மேலும், ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று துருக்கி அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தது. துருக்கி மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது பழிவாங்கும் செயல் எனக் கண்டனங்கள் எழுந்தன.

“இந்த பதற்றத்துக்கெல்லாம் காரணம் என்ன? பொருளாதார காரணங்கள் ஒன்றும் இல்லை. இது துருக்கிக்கு எதிரான நடவடிக்கை” என்று எர்துவான் தெரிவித்துள்ளார்.

மேலும் நாணயத்தின் மதிப்பு கூட்டுவதற்கு துருக்கி மக்கள் டாலர்களை விற்று லிராவை வாங்கி நாணயத்தின் மதிப்பை கூட்ட வேண்டும் என எர்துவான் தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக நான் உற்பத்தியாளர்களிடம் கோருகிறேன்: டாலர்களை வாங்க வங்கிகளுக்கு செல்லாதீர்கள்…இந்த நாட்டை பேணுவது உற்பத்தியாளர்களின் கடமையும்கூட” என்று அவர் தெரிவித்தார்.

துருக்கியின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்குப் பதிலாக, அமெரிக்காவின் மின்னணு பொருள்களை நாம் புறக்கணிப்போம். அமெரிக்காவிடம் ஐ-போன்கள் இருக்கிறது என்றால், அதற்கு மாற்றாக தென் கொரியாவின் சாம்சங் போனைப் பயன்படுத்தலாம். அது போதாதென்று, உள்நாட்டு அலைபேசித் தயாரிப்பாளர்களான வீனஸ், வெஸ்டல் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

துருக்கியின் பொருளாதாரத்துக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. எனினும், அதற்கு அஞ்சி அமெரிக்காவிடம் துருக்கி ஒருபோதும் பணியாது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவது, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளை துருக்கி சந்தித்து வருவது உண்மைதான். அந்தப் பிரச்னைகளைக் களைய தீவிரமான பணிகள் நடந்து வருகிறது, என்று எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook பக்கத்தோடு இணைந்திருங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top