உலக அரங்கில் எண்ணெய் விலையின் போக்கினை ஆராய்ந்த OPEC அமைப்பு, கடந்த 8 ஆண்டுகளில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றது.
15ஆவது சர்வதேச சக்தி மாநாடு கடந்த வாரம் அல்ஜீரியாவில் நடைபெற்றது. இம் மாநாட்டில், மசகு எண்ணெய்யின் உற்பத்தியினை நாளொன்றுக்கு 8 லட்சம் பீப்பாய்களாக குறைத்துக் கொள்ளுவதற்கு OPEC அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. எண்ணெய் விலையில் தளம்பலற்ற உறுதி நிலையை பேணிக் கொள்வதற்காகவே இத்தகைய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய எண்ணெய் உற்பத்தியில் வரையரையைப் பேணிக்கொள்வதானது, எதிர்கால நோக்கத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டமையாமல் கடந்த காலத்தில் இழந்தவற்றையும் மீட்டிக்கொள்ளும் வகையில் அமைதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு OPEC அமைப்பிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு 110 டொலர்களாக இருந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இவ்வருடத்தில் 30 டொலர்கள் வரைக்கும் குறைந்து சென்ற இச்சந்தர்ப்பத்தில் OPEC அமைப்பின் இந்தத் தீர்மானம் பல அங்கத்துவ நாடுகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
எவ்வளவு காலத்திற்கு இந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவு எண்ணெய் விநியோகம் பேணப்படும் என்று எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எண்ணெய் விலையில் நிலையான தன்மை பேணப்படும்வரை இத்தகைய மட்டுப்பாட்டினை OPEC அமைப்பு கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.