Muslim History

30 வருடங்களாக எவ்வித ஊதியமுமின்றி தன் சமூகத்திற்காக உழைக்கும் நபர்!

Mohammad Ayub
30 வருடங்களாக எவ்வித ஊதியமுமின்றி தன் சமூகத்திற்காக உழைக்கும் நபர்!

இக் கட்டுரை ஏதோ ஓர் ஈரத்தை உங்கள் உள்ளங்களில் தூவிவிடக்கூடும். அதில் எதை நடுவது என்பது உங்களைப் பொறுத்தது….

பாகிஸ்தான் நாட்டவரான Mohammad Ayub என்பவர் வாழ்க்கையுடன் போராட்டம் நடத்தியவர்; தற்போதும் போராடிக்கொண்டிருப்பவர். இவரது தந்தையின் மரணத்தின் பின்பு வறுமைப் புயலில் இவரது குடும்பமும் சிக்காமல் இருக்கவில்லை. தானும் தனது உடன்பிறப்புக்களும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு கடுமையான போராட்டத்திற்கு முகம் கொடுத்தார். தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கவேண்டிய பொறுப்பும் இவரைச் சார்ந்ததாகவே இருந்தது. இக்கட்டான சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு கல்வி ஒன்றே போதுமானது என்ற முக்கியத்துவத்தினை காலம் இவருக்கு கற்றுக் கொடுத்தது. எனவே எந்தவொரு நபரும், குழந்தையும் கல்வி கற்கும் வாய்ப்பை தன் கண் முன்னே இழக்கக்கூடாது என்று திடசங்கற்ப்பம் பூண்டார்.

Mandi Bahauddin மாவட்டத்தில் அமைந்துள்ள தனது கிராமத்தில் இருந்து தலைநகரான Islamabad க்கு வேலை தேடி 1986 ஆம் ஆண்டு புறப்பட்டுச் சென்றார். தீயணைப்புப்படை வீரராக தொழிலைப் பெற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு Rawalpindi இல் வெடிமருந்துக் கிடங்கு வெடிப்பு அனர்த்தம் இடம்பெற்றது. அவ் வெடிப்பில் 1,300 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த துன்பவியல் நிகழ்வு ஏற்பட்டு சிறிது காலத்தின் பின்னர் சில அநாதரவான சிறுவர்கள் குப்பைகளைக் கிளரி, பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதை Mohammad Ayub கண்ணுற்றார். இச் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி அதிக கவலை Mohammad Ayub ஐ ஆட்கொண்டது. இச் சிறுவர்களுக்கு முதலில் எழுதவும் வாசிக்கவும் சொல்லிக்கொடுப்பதற்கு Mohammad Ayub தீர்மானித்தார்.

தனது மாதாந்த சம்பளத்தினை 3 பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். அதில் ஒரு பங்கை அநாதரவான சிறுவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைக்கு ஒதுக்கிக்கொண்டார். அடுத்த ஒரு பங்கை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ள பங்கினை தனது செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டார். முதலில் Mohammad Ayub இன் நடவடிக்கை குறித்து மக்கள் சந்தேகம் கொண்டனர்; அல்லது இது இடை நடுவில் கைவிடப்பட்டுவிடும் என நினைத்துக் கொண்டனர். பின்னர் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்ட ஏனைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும் Mohammad Ayub இடம் கற்றுக் கொடுக்கும்படி அனுப்பிவைத்தனர்.

“எனது குடும்பத்தினர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். நான் இங்கு நகரில் தனிமையில் இருக்கின்றேன். எனவே எனது எஞ்சியுள்ள நேரத்தினை பிரயோசமான முறையில் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தேன்.” என்று Mohammad Ayub தெரிவித்தார்.

58 வயதையுடைய Mohammad Ayub வருடாந்தம் 200 மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றார். இப் பணியில் இன்று நேற்றல்ல, 30 வருடங்களாக அவர் எவ்வித ஊதியமும் இன்றி ஈடுபட்டு வருகின்றார். அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களில் இருவர் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் உதவிவருகின்றனர்.

இவர்கள் தமது கல்வி நடவடிக்கையினை Islamabad இல் உள்ள பொது பூங்கா ஒன்றில் நடாத்திவருகின்றனர். இவ் இடம் பாகிஸ்தான் Parliament அமைந்துள்ள இடத்தில் இருந்து ஓரிரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 30 வருடங்களாக 1,000 கணக்கானோர் கல்வியில் தேர்ச்சி பெற்று அரச அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று வருகின்றனர். அதே போன்று கௌரவமான தொழில்களில் இணைந்து வருகின்றனர். இப்பேறுகளுக்குப் பின்னால் Mohammad Ayub இனால் இலவசமாக கொடுக்கப்பட்ட கல்வி உள்ளது என்பது போற்றுதலுக்குரிய உண்மையாகும்.

நிரந்தர பாடசாலைக் கட்டடம் ஒன்றுக்காக அப் பாடசாலைச் சமூகம் கற்களை சேகரித்து வருகின்றது. அதே போன்று அன்பளிப்பு நிதியுதவிகளும் சேமிக்கப்பட்டு வருகின்றது.

சுயநலம் இல்லாத ஒரு சிலர் அவ்வப்போது உலகின் போக்கை மாற்றிச் செல்கின்றனர். நாங்கள் எங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்வியொன்றும் உள்ளது. அதுதான் “நான் எந்த வகை.. ?” என்ற கேள்வியே அது.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top