ஒருவரின் வெளித்தோற்றத்தின் அடிப்படையில் நாம் ஏன் தீர்ப்பளிக்கக்கூடாது என்பதையும், நல்லடியார்களுக்கு அல்லாஹ் எவ்வாறு உதவுகிறான் என்பதையும் சித்தரிக்கும் அழகான உண்மைக் கதை.
இக்கதை 17ஆம் நூற்றாண்டில். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் பேரரசராக இருந்த சுல்தான் முராத் IV (July 27, 1612 – February 8, 1640) அவர்கள்பற்றியது. சுல்தான் முராத் IV, கி.பி.1623 முதல் கி.பி.1640 வரை இஸ்லாமிய கிலாபத்தின் ஆட்சியாளராக இருந்தார். முராத் IV துருக்கியில் மது, புகையிலை,காபி ஆகியவற்றை தடை செய்தார். அவர் அடிக்கடி மாறுவேடத்தில் சென்று நாட்டு மக்களின் நிலைமையை கவனித்து வந்தார். ஒரு நாள் மாலைவேளையில், அவர் தெருவில் உலாவிக்கொண்டிருக்கும்போது நகரின் பரபரப்பான ஓர் இடத்தில் ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். சுல்தான் அவரை அணுகி அவருடன் பேசியும் அவரை குலுக்கியும் பார்த்தார், ஆனால் அவர் இறந்துவிட்டார் எனக்கண்டார். மனிதர்கள் அரக்கப்பரக்க அவரவரின் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். தரையில் இறந்து கிடக்கும் மனிதனைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை.
சுல்தான் சுற்றும் முற்றும் இருந்த மக்களை அழைத்தார். ஆனால் யாரும் சுல்தானிற்கு செவிசாய்க்கவில்லை. யாரும் அவரை அடையாளம் காணவும் இல்லை. அவருக்கு இக்காட்சி வேதனயாக இருந்தது. “ஏன் இந்த மனிதர் இங்கே வீழ்ந்து கிடக்கின்றார்? நீங்கள் யாரும் ஏன் கவலைப்படுவதில்லை? இவரின் வீடு,குடும்பம் எங்கே இருக்கின்றது?” எனக்கேட்டார். அவர்கள் சுல்தானைப்பார்த்து பதவிதக்கதைகளை கூறினர். அவர் குடிகாரன், விபச்சாரம் செய்பவன் என்றெல்லாம் கூறினார்கள்.
சுல்தான் சுமாரான புத்திசாலியாக இருந்தார். அவர் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தைச் சேர்ந்தவர் அல்லவா? . அவரோ இந்த மனிதனுக்கு உதவவேண்டும் என ஏங்கினார். எப்படியோ மக்களை சம்மதிக்கவைத்து அம்மனிதனின் வீட்டைத்தேடி அம்மனிதனின் உடலை அங்கு கொண்டு சென்றார்.
அவர்கள் அவ்வீட்டை அடைந்ததும் அனைவரும் கிளம்பிச் சென்றனர், எவரும் அங்கே தரித்திருக்க விரும்பவில்லை. சுல்தானும் அவரது உதவியாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
சுல்தான் அவ்வீட்டின் கதவை தட்டினார். அப்போது இறந்த மனிதனின் மனைவி வெளியே வந்தார். அப்பெண் இறந்த மனிதனின் உடலை கண்டதும் விம்மி விம்மி அழுதார்.அழுகையினூடாக அப்பெண் அவரின் இறந்த கணவனைப்பார்த்து;
“உங்கள் மீது அல்லாஹ் அருள்புரிவானாக!. ஓ…அல்லாஹ்வின் நண்பனே!..நான் நீங்கள் நேர்வழிபெற்றவர் என சாட்சிபகர்கின்றேன்” என்றார்.
அந்த விதவையின் பேச்சைக்கேட்ட சுல்தான் ஆச்சரியப்பட்டார். அவரால் அவரது ஆர்வத்தை அடக்கிக்கொள்ளமுடியவில்லை. அப்பெண்ணிடம் கேட்டேயாகவேண்டும் என்று;
“உங்கள் கணவனைப்பற்றி மக்கள் இப்படி இப்படி எல்லாம் சொல்கின்றனரே? அதனால்தான் அவர் இறந்ததைக்கூட மக்கள் பொருட்படுத்தவில்லை, இப்படியிருக்க எப்படி அவர் நீங்கள் சொல்வது போல நேர்வழியை அடைந்தவராக இருக்கின்றார்?” எனக்கேட்டார்.
அதற்கு அவ்விதவைப்பெண்மணி, “நான் எதிர்பார்ததுதான். என் கணவர் தினமும் இரவு மதுபானக் கடைக்குச் சென்று தன்னால் முடிந்த அளவு மதுவை வாங்கி வருவார். பின்னர் அதை வீட்டிற்கு கொண்டு வந்து சாக்கடையில் கொட்டுவார். அப்போது அவர், “இன்று நான் முஸ்லிம்களை பாவத்திலிருந்து கொஞ்சம் காப்பாற்றினேன்” என்று கூறுவார். விபச்சாரியிடம் சென்று அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து காலை வரை கதவை மூடச் சொல்லிவிட்டு வருவார். அதன் பிறகு அவர் இரண்டாவது முறையாக வீட்டிற்குத் திரும்பி, “இன்று நான் ஒரு இளம் பெண்ணையும் விசுவாசிகளின் இளைஞர்களையும் விபச்சாரம் எனும் பெரும் பாவத்திலிருந்து காப்பாற்றினேன்” என்று கூறுவார்.
“மக்கள் அவர் மது வாங்குவதைக் கண்டார்கள், அவர் விபச்சாரிகளிடம் செல்வதைக் கண்டார்கள், அதன் விளைவாக அவர்கள் அவரைப் பற்றி தவறாகப் பேசுவார்கள் என்றேன். ஒரு நாள் நான் அவரிடம், நீங்கள் மரணித்தால் உன்னைக் குளிப்பாட்ட யாரும் வரப்போவதில்லை, உங்களுக்காக தொழுவிப்பதற்கோ, உங்களை அடக்கம் செய்வதற்கோ யாரும் வர மாட்டார்கள்” என்றேன்.
அதற்கு அவர் புன்னகைத்து பதிலளித்தார்;
“பயப்படாதீர்கள்! விசுவாசிகளின் சுல்தான், இறைவிசுவாசிகளுடன் சேர்ந்து என் உடல் மீது தொழுகை நடாத்துவார்கள்.” எனக்கூறினார்.
அவரது வார்த்தைகள் சுல்தான் முராத்தை உலுக்கியது. சுல்தான் அழ ஆரம்பித்தார். அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் உண்மையைச் சொன்னார், ஏனென்றால் நான் சுல்தான் முராத். நாளை அவரைக் குளிப்பாட்டி, பிரார்த்தனை செய்து, அடக்கம் செய்வோம்” என்றார்.
மறுநாள் சுல்தான் முராத் உடன் , உலமாக்கள், அறிஞர்கள், வெகுஜனங்கள் என எல்லோரும் கூடி தொழுகை நடாத்தி அம்மனிதரை அடக்கம் செய்தனர்.
நாம் பார்ப்பதையும் மற்றவர்களிடம் இருந்து கேட்பதையும் வைத்து மக்களை மதிப்பிடுகிறோம். ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் என்ன மறைந்திருக்கின்றது என்பதை நாம் அறியோம்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
(அல்குர்ஆன் : 49:12 )
AKBAR RAFEEK
– – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…