அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி, தத்துவஞானி, சிந்தனையாளர் ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக் குரியதன்று. இந்த வகையிலேயே வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது சிந்தனையின் ஒரு முக்கிய துறையாக விளங்கியது.
இக்பாலுக்கு முன்னர் வாழ்ந்த, இஸ்லாமியப் பண்பாடும் நாகரிகமும் உன்னத நிலையிலிருந்த காலப் பிரிவைச் சார்ந்த முஸ்லிம் வரலாற்று அறிஞர்களின் பாரம்பரியம் பற்றிய மிகத் தெளிவான அறிவும் பரிச்சயமும் அவரில் காணப்பட்டது.
வரலாறு என்பது ஆட்சியாளர்கள், அரண்மனை வாழ்வு, படையெடுப்புகள் பற்றிய ஒரு பதிவாக அன்றி, மக்கள் சமூகத்தின் செயற்பாடு, மாற்றங்கள் பற்றிய விளக்கமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம் வரலாற்றறிஞர்கள் பலர் கொண்டிருந்தனர். ‘ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைவார்கள். ஆனால் சமூகங்கள் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்’ என்ற வரலாற்று உண்மையை இக்பால் அவரது ‘பயாம் மஷ்ரிகில்’ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“மாவீரன் அலெக்ஸான்டர் மறைந்தார்.
அவருடன் அவரது வாள், போர்க்கொடி,
அவர் வெற்றிகொண்ட நாடுகளிலிருந்து
பெற்ற வரிகள், முத்து, இரத்தினம்
அனைத்தும் மறைந்துவிட்டன.
ஆனால்-
சமூகங்கள் மன்னர்களை விட
நிலைத்திருக்கும் சக்தி படைத்தவை.
ஈரானிய மாமன்னன் ஜெம்ஷித்
இன்று இல்லை.
ஆனால் ஈரானிய சமூகம்
இன்றுவரை நிலைத்து நிற்கிறது”
இக்பாலின் இந்த வரலாற்றுத் தத்துவம் மத்தியகால முஸ்லிம் வரலாற்றறிஞர் இப்னு மிஸ்கவையின் கருத்தோடு ஒத்துள்ளது. இப்னு மிஸ்கவை பின்வருமாறு கூறுகின்றார்:
“எங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களின் நிகழ்வுகள், அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளை நான் படித்தபோதும், அச் சமூகத்தின் ஆட்சியாளர்கள், அவர்களது நகரங்கள், அதனைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி நான் அறிந்தபோதும், ஒரு முக்கிய வரலாற்று உண்மை எனக்குப் புலனாகியது. ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவை, அவற்றினை ஒத்தவை, மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்பதே இந்த உண்மையாகும்.”
இப்னு மிஸ்கவை இதன் காரணமாகவே அவரது வரலாற்று நூலை “இனங்களின் அனுபவங்களும் முயற்சிகளின் முடிவுகளும்” (தஜாரிபுல் உமம் வ அவாகிபுல் ஹிமம்) எனப் பெயரிட்டார். இனங்கள், சமூகங்களின் அனுபவங்களின் தொகுப்பே வரலாறாகும் என்ற கருத்தை இப்னு மிஸ்கவை கொண்டிருந்தார்.
இப்னு மிஸ்கவையின் இந்த வரலாற்றுத் தத்துவத்தை ஒத்த கருத்தை இக்பால் அவரது ‘அஸ்ராரேகுதி’யில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“உனக்கு வரலாறு என்றால்
என்ன என்பது தெரியுமா?
அல்லது உன்னைப் பற்றியாவது
உனக்குத் தெரியுமா?
அது ஒரு வெறும் கற்பனை- புராணக் கதை
என்று நீ எண்ணுகிறாயா?
இல்லை! அது உன்னைப் பற்றி
நீயே அறியத் துணைபுரிகின்றது.
உனது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்தி
உன் சாதனைகளுக்கான பாதையை
அமைத்துத் தருகின்றது.
அது வாளைப்போன்று
உன்னைக் கூர்மையாக்குகின்றது.
பின்னர் அது உன்னை
உலகத்துடன் போராட வைக்கின்றது.
அது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட
கண்களைப் போன்றது.
இறந்த காலத்தை வாசித்து
மீண்டும் அதனை சிருஷ்டித்து
உனக்கு முன்னால் அது சமர்ப்பிக்கிறது
உன் கடந்த காலம் நிகழ்காலமாய்
வெடித்து
அதிலிருந்து உன் எதிர்காலம் உருவாகிறது.
நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்,
உன் இறந்த காலத்தை
நிகழ் காலத்திலிருந்தும்
எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே!”
“வரலாற்றை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து அது மனித ஆத்மாவின் அசைவும் இயக்கமுமாகும். ஏனெனில், மனித ஆத்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட சூழல் இல்லை. முழு உலகமுமே அதன் சூழலாகும். எனவே வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு, தேசத்திற்கு உரியதாகக் கொள்வது குறுகிய மனப்பான்மையாகும்” என இக்பால் கருதுகின்றார்.
எனவே இக்பாலின் கருத்துப்படி, வரலாறு அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. அது அனைவருக்கும் போதனை செய் கின்றது. அது அனைவருக்கும் சொந்தமான ஒரு புதைய லாகும். நாடுகளுக்கு இடையில் காணப்படும் எல்லைகள் என்பன வெறும் சடத்தோடு தொடர்புடையன.
ஆனால் ஆத்மாவுக்கோ அத்தகைய எல்லைகள் இல்லை. அது காலம், இடம் என்ற எல்லைகளுக்குக் கட்டுப்படாதது. எங்களால் காலத்தைத் துண்டு துண்டாக வெட்டிவிடல் முடியாது. எங்களால் கடந்த காலத்தை நிகழ்காலத்திலிருந்து துண்டித்துவிட முடியாது.
நாம் எமது வசதிக்காகவும், சௌகரியத்திற் காகவும் தொடர்ச்சியான காலத்தை (செரிஅல் டிமெ) ஓர் உண்மையாக ஏற்றுக்கொண்டு, வருடங்கள், மாதங்கள், நாட்கள், மணித்தியாலங்கள், நிமிடங்கள், வினாடிகள் என உருவாக்கியுள்ளோம். ஆனால் காலம் என்பது இவ்வாறு பாகுபாடு செய்ய முடியாதது என இக்பால் கூறுகின்றார். இக்பால் காலத்தோடு தொடர் புடைய தனது இந்த வரலாற்றுத் தத்துவத்தை ‘தர்பே கலீம்’ என்னும் தனது கவிதை நூலில் பின்வருமாறு விளக்குகின்றார்:
“காலம் என்பது ஒன்று
வாழ்க்கை என்பது ஒன்று
பிரபஞ்சமும் ஒன்றே!
பழைமை, புதுமை என்ற பாகுபாடு
குறுகிய நோக்கின் விளைவு”
இக்பாலின் கருத்துப்படி, வாழ்வு என்பது தொடர்ச்சியான அசைவும், இயக்கமுமாகும். அது மனிதனுக்கு அவனது ஆற்றல்கள், திறமைகளை சோதித்துப் பார்த்து, அவனது பெறுமதியை வெளிப் படுத்துவதற்கான செயற்பாட்டுக் களமாக உள்ளது.
ஒவ்வொரு கணமும் நாம் காணும் பிரபஞ்சம் ஒரு புதிய பிரபஞ்சமாகும். எனவே, எந்த ஒரு மனிதனும் உடல்ரீதியாகவோ உளரீதியாகவோ செயலற்று, அசைவற்று இயங்காது இருத்தல் முடியாது. அவன் இயங்கிக்கொண்டும் விழிப்புடனும் இருத்தல் வேண்டும். காலம் என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் விசேட சலுகை வழங்குவதில்லை. படைப்பின் நுட்பத்தையும் மாற்றத்தையும் புரிந்து கொண்டவர் எதை, எப்படி, எப்பொழுது செய்தல் வேண்டும் என்பதை அறிவர். அவர்கள் காலத்தை தங்களது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவர். இந்த வகையில் செயல்படாதோர் காலத்தால் அடிமைப்படுத்தப்படுவர்.
அறிவைப் பெற்று வெற்றிகொள்வோரும் உள்ளனர். அறிவைப் பெறாது செயல்படுவோரும் உள்ளனர். பின்னையோர் பிறரால் அடிமைப்படுத்தப் படுவர். அவர்களுக்கு ஏற்படும் சோதனை பிறர் பாடம் படிப்பதற்கு ஓர் எச்சரிக்கையாக அமைகின்றது. இயற்கை விதிகள் பற்றிய அறிவுமட்டும் மனிதனுக்கு உண்மையைத் தெரிந்துகொள்ளத் துணைபுரியாது. மனிதனின் தார்மீக, ஆத்மீக அம்சங்களும் போஷித்து வளர்க்கப்படல் வேண்டும்.
இந்த வகையில் செயல்படாதபோது நாங்கள் உயிர் வாழும் இந்த உலகைப் பற்றிய எமது அறிவு சரியானதாக அமைய மாட்டாது. அப்போது நாங்கள் உருவாக்கிக்கொண்ட கருத்துக்கள், கோட்பாடுகள் என்பவை பக்குவமடையாத உள்ளங்கள் உருவாக்கிக் கொண்ட ஆசைகளின் வெளிப்பாடாக அமைவதால் அவை இந்தப் பூமியை நோக்கி உடைந்து சிதறிவிடும். அப்போது மனிதனின் தோல்விகளைப் பதிவுசெய்துள்ள நூலுக்கு இன்னொரு துயர அத்தியாயம் இணைக்கப் படும். வரலாறு என்பது இது அல்லாத வேறு எதுவாக இருக்க முடியும்?” இவ்வாறு இக்பால் வினா எழுப்பு கின்றார்.
மனித சமூகங்களின் வரலாற்றை உயிர் வாழும் ஒரு பொருளை நாம் அறிவியல் ரீதியாக அணுகி ஆராய்வது போன்று விளக்குதல் முடியும் என்ற உண்மையை உணர்த்துவதாக இக்பால் கருதுகின்றார். அதாவது ஓர் உயிருள்ள பொருளின் தோற்றத்திற்கு ஏற்கனவே உயிருள்ள ஒரு பொருள் காரணமாக அமைகின்றது. இது போன்றே மனித சமூகத்தைப் பொறுத்தளவிலும் ஒரு பரம்பரை முன்னைய பரம்பரையோடு தொடர்புள்ளது. இது வரலாறு பற்றிய ஒரு பெரும் உண்மையை உணர்த்துவதாக இக்பால் கருதுகின்றார். அதாவது வரலாறு என்பது தொடர்ச்சியான ஓர் இயக்கமாகும். இது வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்கின்றது. அதனை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப் பாகுபாடு செய்தல் முடியாது. காலத்தின் இயக்கத்தைப் பகுதிகளாக வகைப்படுத்தல் முடியாது. ஒரு விதை மரத்தில் மறைந்துள்ளது. இது போன்றே ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் காணப்படும் சிறுவன், இளைஞன், முதியவன் என்ற படித்தரங்கள் அக்குழந்தையில் உள்ளார்ந்து அமைந்துள்ளன. குழந்தை, சிறுவன், வாலிபன், முதியவர் அனைத்தும் உயிர்ப் பொருளே. சமூகம், தேசம், மனித இனம் அனைத்தும் இதே நிலையில் உள்ளன.
1932ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் செனட் சபையானது, இந்தியர்களுக்கு இந்திய வரலாறு மட்டுமே கற்பிக்கப்படல் வேண்டும் எனவும், இஸ்லாமிய வரலாறு நீக்கப்படல் வேண்டும் எனவும் ஒரு பிரேரணை கொண்டுவரும் முயற்சியை மேற் கொண்டது. அக்காலப் பிரிவில் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்திய ஹிந்துக்களின் தீவிர அழுத்தம் காரணமாக அப்போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலை வராக இருந்த பேராசிரியர் புரூஸ் இப்பிரேரணையைக் கொண்டுவரத் திட்டமிட்டார்.
இதற்கு எதிராக 1932 ஜூன் 11ஆம் திகதி லாகூரில் முஸ்லிம்கள் ஓர் எதிர்ப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்திய இக்பால், வரலாறு பற்றிய தனது விரிந்த விசாலமான நோக்கைப் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்:
“வரலாற்றை அதன் முழுமைத்துவ நோக்கில் நாம் அணுகினால் அதனை மனித ஆத்மாவின் இயக்க மாக நாம் காணமுடியும். மனித ஆத்மாவிற்கு ஒரு குறிப் பிட்ட சூழல் என்பது இல்லை. அது ஒரு குறிப்பிட்ட பௌதீக சூழலுக்குக் கட்டுப்பட்ட தன்று. முழு உலகமும் அதன் சூழலாக உள்ளது. வரலாறும் இது போன்றதே. அதனை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு உரித்தானதாகக் கொள்ள முடியாது. அது முழு மனித இனத்திற்கும் சொந்த மானது.”
இக்பால் குர்ஆனில் வரலாற்றுத் தத்துவத்தின் மூல வித்துக்கள் காணப்படுவதாக மிக உறுதியாக விசுவாசித்தார். இப்னு கல்தூனின் வரலாற்றுப் பெருநூலான “முகத்திமா”விற்கான தூண்டுதலை குர்ஆனிலிருந்தே அவர் பெற்றுக்கொண்டதாகவும் இக்பால் கருதுகின்றார்.
பொதுவாக அனைத்து முஸ்லிம் வரலாற்றாசிரியர் களும், பெரும்பான்மையான கீழைத்தேயவாதிகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தத்துவத்தின் ஆரம்பம், வளர்ச்சிக்கான மூலத் தூண்டுதலாகக் குர்ஆனையே காண்கின்றனர். இக்பால் இக்கருத்தை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன், ஒருவன் ஒரு விடயத்தை அல்லது செய்தியைக் கேள்வியுற்றால் அதன் உண்மையை, ஆதார பூர்வமான தன்மையை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது:
“வரலாறு அறிவியற் பண்பைப் பெறுவதற்கு, வரலாற்றின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய உண்மைகள் ஆதாரபூர்வமாக அமைதல் மிக அவசிய மாகும். இந்த வகையில், ஆதாரபூர்வமான தன்மை அவற்றை அறிவிப்போரிலேயே தங்கியுள்ளது. வரலாற்று விமர்சனத்தில் முதலாவது அடிப்படையாக அமைவது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை, குண நலன்கள் போன்றவையாகும். இதனை வைத்தே அவரது அறிவிப்பின் ஆதாரபூர்வமான தன்மை தீர்மானிக்கப் படுகின்றது.”
இக்பாலின் வரலாற்று நோக்கு எந்த வகையில் குர் ஆனியக் கோட்பாடுகளின் செல்வாக்கினால் உருவாகியது என்பதையும் குர்ஆன் அவரது ஆளுமையிலும் சிந்தனை யிலும் செலுத்திய தாக்கத்தினையும் 1929ஆம் ஆண்டு அலிகார் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பின்வரும் உரை மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது:
“நான் வலியுறுத்த விரும்பும் இன்னொரு முக்கிய அம்சமாவது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது பற்றியதாகும். நான் கடந்த காலத்தை மட்டும் நேசிக்கும் பிரிவினர்களைச் சார்ந்தவனல்லன். நான் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவன். எதிர்காலத்தை விளங்குவதற்கு எனக்கு நிகழ்காலம் அவசியப்படு கின்றது. இன்றைய இஸ்லாமிய உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சரியான முறையில் கிரகித்து விளங்கு வதற்காக, எமது நாகரித்தினதும் பண்பாட்டினதும் மூல ஊற்று பற்றிய தெளிவான அறிவைப் பெறுதல் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
இந்த காரணம் பற்றியே நான் உங்களைக் கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறும்படி வலியுறுத்து கின்றேன். நவீன பண்பாட்டினதும் நாகரிகத்தினதும் அடிப்படைகள் பற்றிய அறிவையும் பரிச்சயத்தையும் நாம் பெற்றிராததால் நவீன அறிவைத் தேடிப் பெறு வதில் பிற இனங்களை விட நாங்கள் பின்தங்கியுள்ளோம். எனவே, எங்கள் கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைப்பதைத் துண்டித்த அம்சங்கள் பற்றி நீங்கள் கவனம் செலுத்துதல் வேண்டும். இவ்வாறு துண்டிக்கப் பட்ட ஒரு முக்கிய அம்சமே நவீன அறிவியலில் கையாளப்படும் ‘தொகுத்தறிவு முறைமையாகும்.’ இந்த விசாரணை முறை குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கிய பேரருளாகும். இந்த தொகுத்தறிவு முறையின் பலன்கள், விளைவுகள் இன்று மிகத் தெளிவாக உள்ளன. நான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாகக் குர்ஆனை மிக உன்னிப்பாகப் படித்து வந்துள்ளேன். அதன் திருவசனங்களை நாள்தோறும் ஓதுகின்றேன்.
ஆனால் அதில் சில அத்தியாயங்களையாவது நான் உரிய முறையில் விளங்கினேன் என என்னால் கூற முடியாது. இன்ஷா அல்லாஹ், இறைவன் எனக்குப் போதிய நேரத்தையும் சக்தியையும் தந்தால், நான் குர்ஆன் வகுத்தளித்த ஆய்வின் அடிப்படைகளை விருத்தி செய்து நவீன உலகம் எவ்வாறு இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்தது என்பது பற்றி விளக்கு வதற்கு ஒரு விரிவான நூலை எழுதுவேன். குர்ஆனை ஆழமாகக் கற்பதற்கு தங்களை அர்ப்பணிக்கும் ஒரு பிரிவினரை இந்தப் பல்கலைக் கழகம் உருவாக்கும் என நம்புகிறேன்.”
“அறிவு என் தலையில் சிலைகள்கொண்ட ஒரு கோயிலைக் கட்டியெழுப்பியது – ஆனால் இப்றாஹீமை ஒத்த அன்பு அச்சிலைகளின் வீட்டை ஒரு கஃபாவாக மாற்றியது.”
ஐரோப்பாவில் இருந்துகொண்டு ஆசியாவைப் பார்த்த இக்பாலுக்கு அங்கு அப்பிக்கிடந்த இருள் நன்கு புலனுட்பட்டது. அதனை அகற்றி ஒரு தீப்பந்தம் ஏற்ற வேண்டியதன் அவசியத்தை தனது பேனா முனையால் வார்த்தெடுத்தார். மேற்கின் அறிவியலும் விஞ்ஞான முன்னேற்றமும் இஸ்லாத்தின் ஆன்மிகமும் ஒருசேர எழுச்சிபெறவேண்டும் என்பதில் அவர் அவாவி நின்றார். கிழக்கில் இருள் படிந்துள்ளது பற்றி அவர் தனது நண்பர் அப்துல் காதிருக்கு எழுதியதொரு கவிமடலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம்.”
மேல்நாட்டுப் படிப்பின் பிற்பாடு 1908ஆம் ஆண்டு இக்பால் இந்தியா திரும்பி சிறிதுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதன்போது தன் ஆன்மீகத்தை உரமூட்டவும் மக்களைத் தட்டியெழுப்பி புத்துணர்வூட்டவும் ‘அன்ஜுமானே ஹிமாயத்’ என்ற இஸ்லாமியப் புத்திஜீவிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல சேவைகளில் ஈடுபட்டார். 1919ஆம் ஆண்டு அதன் பொதுச் செயலாளராகவும் தெரிவானார்.
விரிந்த இலக்கிய உலகில் தனது கவித்துவப் படைப்பாற்றலால் முழு உலகையுமே அதிரவைத்தவர் தாம் கவிஞர் அல்லாமா இக்பால். சமூகத்தின் எழுச்சிப் பிரளயமாகவே இவரது கவி வீச்சுக்கள் அமைந்துள்ளன. கருத்தாழமுள்ள, தத்துவார்த்தமான பல கவித்தொகுப்புக் களையும் ஆய்வு முடிவுகளையும் இவ்வுலகுக்கு யாத்துத் தந்துள்ளார்.
இக்பால் 1903இல் முதன்முதலாக ‘இல்முல் இக்திஸாத்’ பொருளாதாரக் கல்வி என்ற உருது மொழி யிலான நூலை எழுதினார். அவர் தனது முதலாவது கவிதைத் தொகுப்பான ‘அஸ்ராரே குதி (இதயப் புதையல்)’ என்ற தொகுப்பை 1915ஆம் ஆண்டில் பிரசவித்தார். அதன்பின் ‘ரூமூஸே பிகுதி (உள்ளத்தை இழப்பதன் இரகசியம்)’ என்ற நூலை 1917இலும் 1923இல் ‘பயாமே மஷ்ரிக் (இழப்பதன் ரகசியம்)’ என்ற நூலையும் ‘ஸபூரே அஜம் (கிழக்கின் செய்தி)’ என்ற நூலை 1927இலும் ‘ஜாவித் நாமா (இக்பாலின் இளைய மகனின் பெயர். பாரஸீகத்தில் ‘நித்தியத்துவம்’ என்று பொருள்)’ என்ற நூலை 1932இலும் பஸ்-சாய்-பாயத்-கர்த் அக்வாமே ஷர்க்’ என்ற நூலை 1936இலும் மற்றும் ‘அர்முகானே ஹிஜாஸ்’ என்ற தொகுப்பை 1938இலும் எழுதி வெளியிட்டார். இவை பாரஸீக மொழியிலான கவி நூற்களாகும்.
முதலாவது உருது மொழிக் கவிதையான ‘பாங்கே தாரா (பாலைவன மணியோசை)’ஐ 1924ஆம் ஆண்டு வெளியிட்டார். இது உலகப் பிரசித்திபெற்ற ஒரு கவிதை. அதனைத் தொடர்ந்து 1935இல் ‘பாலே ஜிப்ரீல்’, 1936இல் ‘ஸர்மே கலின்’ போன்ற நூல்களையும் எழுதினார். இக்பால் பல மொழிகளிலும் விற்பன்னராக முகிழ்ந்தார். அரபு, பாரஸீக மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவாறே பின்பு ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழி களிலும் புலமைபெற்றார். தனது தாய் மொழியில் மாத்திரம் அவரது சொல்லாட்சி நயக்கவில்லை. ஆங்கிலத்திலும் சொற்புலமைகண்ட விற்பன்னராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய இரு நூல்கள் அம்மொழியிலான அவரது புலமையைக் காட்டுகின்றன.
ஆரம்பமாகவே பாரஸீக மொழியில் புலமைபெற்ற இக்பால் அத்துறையிலும் கவிதை எழுத முனைந்தார். பாரஸீக மொழி பல பெரிய கவிஞர்களால் வளப்படுத்தப் பட்ட மொழி. அது மெருகேற்றப்பட்ட வார்த்தைகள் சொரியும் மொழி. தனது தத்துவார்த்தக் கருத்துக்களை அழகு ததும்ப மொழிய மிகப்பொருத்தமான மொழி அதுதான் என்பதை நன்குணர்ந்து பல கவிதைத் தொகுப்பு களை அப்பாரஸீக மொழியிலேயே எழுதியுள்ளார். ஈரானியர்கள் இக்பாலைத் தமது மொழிக்கு வளம் சேர்த்து உரமூட்டிய புலவராகக் கருதுகின்றனர்.
இக்பால் தேசியத்துக்குள் சுருங்கிய, ஒரு துறை யோடு மாத்திரம் ஒதுங்கிய கவிஞரல்லர். அவர் உலகறிந்த சர்வதேசியக் கவிஞர். பலராலும் மெச்சப் படும் அறிஞர். மாபெரும் அறிஞர்களாக மதிக்கப்படும் மௌலானா மௌதூதி, மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி, முப்தி முஹம்மத் ஷபீஃ, அல்லாமா பின்னூரி மற்றும் ஷஹீத் ஸெய்யித் குதுப் என பல அறிஞர்களாலும் ஆகர்சிக்கப் பட்டவர்தாம் கவிக்கோ அல்லாமா இக்பால் அவர்கள்.
கவிஞரின் அல்குர்ஆனுடனான தொடர்பைக் கண்ட மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வியவர்கள் அவரை ‘ஷாஇருல் குர்ஆன்’, ‘அல்குர்ஆனியக் கவிஞர்’ என வர்ணிக்கிறார். “உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற குறிப்பாய்க் கூறத்தக்க ஒரு கவிஞர்தான் இக்பால்” என முஹம்மத் அலி ஜின்னாஹ் அவர்கள் இக்பாலைப் பாராட்டியுள்ளார்கள். ‘அஸ்ராரே குதி’ கவிதை நூலின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்த மேநாட்டு கவித்தலைகள் “இக்பால் கீழ்நாட்டின் இணையற்ற தத்துவ சாஸ்திரக் கவிஞர்” என்று பாராட்டினர்.
முஸ்லிம் சமூகத்தின் அடித்தளத்தின் இயக்கவியல் அசைவுபற்றி அல்லாமா இக்பால் அவர்கள் பெரிதும் சிந்தித்துள்ளார்கள். ஒரு கவிப்புரட்சியின் மூலம் மக்களைச் செயலாற்றுவதின்பால் தீவிரப்படுத்தினார்கள். இக்கொள்கை அவரது கவிதைகளில் இழையோடி யிருப்பதைக் காணலாம்.
“செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்; ஒரு கணமாவது ஓய்பவர்கள் சதா சுழன்றுகொண்டே இருக்கும் காலச் சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்.”
மானிட சுயம் சார்ந்த தத்துவார்த்தக் கருத்துக்களின் மூலம் தனிமனித சுதந்திரம், தனிமனித அபிவிருத்தி, ஆன்மிக வளர்ச்சி, இலட்சிய மனிதன் போன்ற கோட் பாடுகளைத் தனது கவிதையின் அடிநாதமாகக்கொண்டு செயலாற்றும் சமூகத்துக்கு அடித்தளமிட்டார். அது மட்டுமன்றி சமூக ஒருமைப்பாடு பற்றியும் எடுத்தியம் பினார்.
“தனிமனிதன் ஒரு சமூகத்தின் அங்கமாகவே இருக்கின்றான். தனித்த நிலையில் அவன் ஒன்றுமே இல்லை. அலைகள் சமுத்திரத்தில்தான் அலை மோது கின்றன; சமுத்திரத்திற்கு வெளியில் அது வெறுமையே!”
சமூகக் கட்டுப்பாடு, மனித நேயம், இஸ்லாமிய சமூக ஒழுங்கு, ஜனநாயகம், சர்வாதிகாரம், பொது நலவாதக் கோட்பாடுகள், தேசியவாதம், இஸ்லாத்தில் பெண்களுக்குள்ள உயர் உரிமைகள், கல்வியின் முக்கியத்துவம், நவீனம், கலை, இலக்கியம் என சமூக, பொருளாதார, சமய, கலாசார அம்சங்களை மனித சமூகத்துக்கு விட்டுச்சென்றுள்ளார்.
அல்லாமா இக்பால் அவர்கள் தமது அந்திம காலத்தில் மரணப்படுக்கையில் இருந்தவாறு மரணம் பற்றி இவ்வாறு கூறினார்.
“உண்மை விசுவாசியின் அடையாளத்தை நான் சொல்கிறேன்; மரணம் வரும் காலையில் அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும்” என்றார். அந்நாள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உலகம் போற்றும் சர்வதேசியக் கவிஞர் இக்பால் அவர்கள் தனது 65ஆம் வயதில் லாகூரில் உயிர் நீத்தார். எளிமையாகவும் பணிவாகவும் வாழ்ந்தவர். தன்னை பக்கீர் (ஏழை) என்றே அழைத்துக்கொண்டார். கவிஞன் என்று தன்னைப் பிரஸ்தாபிப்பதை அவர் விரும்பவில்லை. அவரது கவிதைகள் இன்றும் தூங்கிக்கிடக்கும் உள்ளங்களை உசுப்பி விடுபனவாய் உள்ளன.