புனித ரமழான் காலத்தில் அல் – அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் சிறு குழுக்களாக தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன.
கொரோனா தொற்றினைத் தொடர்ந்து, முன் பாதுகாப்பு நடவடிக்கையாக மஸ்ஜித்தின் உட்புற மற்றும் வெளிப்புறப் பகுதிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புனித ரமழான் காலத்தை முன்னிட்டு சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிறு வியாபார நிலையங்களுக்கும் வியாபார நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்று கூடுவதற்குரிய தடை நீடிக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழுகைகள் மஸ்ஜித்தின் வெளிப்புறத்திலேயே நடைபெற்று வருகின்றது. 2 மீற்றர் இடைவெளியில் கூடியது 19 பேர் மாத்திரமே இதற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
ரமழான் காலத்தில் பல்லாயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் அல்-அக்ஸா மஸ்ஜித்தில் தராவிஹ் தொழுகைக்காக ஒன்றுகூடுவது வழமையான நிகழ்வாகும். கொரோனா தொற்றை அடுத்து வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அல் – அக்ஸா மஸ்ஜித் பிரதேசம், இஸ்லாமிய நம்பிக்கை சபையொன்றினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடைகள் மாலை 6 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. Delivery சேவைகள் இத்தகைய மட்டுப்பாடுகள் எதுவும் இன்றி செயற்பட்டு வருகின்றன.
புனித ரமழான் காலத்தில் ஸஹரைத் தொடர்ந்து மஃரிப் வரை மக்கள் ஒன்றுகூடுவது வழமையாகும். இதனைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு பலஸ்தீன் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 6 வாரகாலமாக இத்தகைய மட்டுப்பாடுகளை பலஸ்தீன் அதிகார சபை விதித்து வருகின்றது.
இச்செய்தி பதியப்படும்வரை பலஸ்தீனில் 353 கொரோனா தொற்றுள்ளோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2 இறப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.