நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு மஸ்ஜிதுகள் மீது நடாத்தப்பட்ட தீவிரவாத துப்பாக்கித் தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மஸ்ஜித் ஒன்று உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை நேரம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இராணுவ உடை அணிந்திருந்த துப்பாக்கிதாரியாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. நண்பகல் தொழுகை நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். 15 நிமிடங்களாக தொழுகையாளிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. பலர் ஓடி உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய நபர், தன்னால் நடாத்தப்படும் துப்பாக்கித் தாக்குதலை Facebook மூலம் live ஆக ஒலி-ஒளி பரப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 49 பேர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படும் அதேவேளை 20 பேர்வரை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடந்து வருகிறது. ’’இன்னும் இங்கு ஆபத்து ஓய்ந்துவிடவில்லை’’ என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் ஒரு தற்செயல் அல்லது திட்டமிடப்படாத நிகழ்வொன்றல்ல. இது வரலாற்றுச் சங்கிலியின் ஒரு சுற்றுவட்டமாகவே குறிப்பிடத்தோன்றுகின்றது. தீவிரவாதியினால் பயன்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் குறிக்கப்பட்டிருந்தவைகள் அந்த வரலாற்று ரேகைகளை அழியாமல் பறைசாற்றுகின்றன.
turkofagos என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு “துருக்கி கொலைக்காரர்கள்” என பொருள்
Miloš_Obilić- 1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்
John_Hunyadi – காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் || வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயர்
Vienna_1683- உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு
இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத் திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்
இவைமட்டுமல்லாமல், ‘Refugees welcome to Hell’ என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது…
இது புத்தி நலம் இல்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான ஃபாஸிஸ_தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்…
இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில்,
“நியூஸிலாந்தில் இதற்கு முன்னர் இதுபோன்ற மோசமான வன்செயல்கள் நடைபெற்றிருக்கவில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய துக்ககரமான நிகழ்வினைத் தொடர்ந்து, நியூஸிலாந்தின் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந் நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கின்றது.