பலஸ்தீன் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸா, உலக முஸ்லிம்களின் 3வது புனிதத் தளமாகும். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அல் அக்ஸா மசூதி மற்றும் டோம் ஆஃப் தி ராக் வழிபாட்டு தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அல்-அக்ஸாவின் வெளிப்புறத்தில் தொழுகைகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்படவில்லை.
“இஸ்லாமிய வக்fப் சபையானது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக மறு அறிவித்தல் வரும்வரை புனித அல் அக்ஸாவின் உட்புறப்பகுதியை வழிபாட்டாளர்களுக்கு மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அனைத்து வழிபாடுகளும் வெளி வளாகத்தில் இடம்பெறும்.” என பள்ளிவாசலின் பணிப்பாளர்களில் ஒருவரான Omar Kiswani குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேலதிக அறிவிப்பு வரும் வரை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசங்களில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் தேவாலயங்களை மூடுமாறு வக்fப் மற்றும் மத விவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ பலஸ்தீனிய Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழமையான தொழுகைக்கான அதான் அறிவிப்பைத் தொடர்ந்து வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு முஸ்லிம்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரைப் பகுதியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மொத்தமாக 44 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பலஸ்தீன் அதிகார சபையின் பேச்சாளர் Ibrahim Melhem குறிப்பிட்டார்.