கொரோனா தொற்றுத் தாக்கத்தினால், சவுதியில் தொழில் புரிவோருக்கு பாதிப்பு ஏற்படுமா ? அது எத்தகைய பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்ற விடயம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறி வருகின்றது.
அவ்வாறு தொழிலாளர்களை சம்பந்தப்படுத்தி ஆராய்வதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
சவுதியின் பொருளாதார மூலமாக எண்ணெய்யும், மக்காவுக்கான வழிபாட்டு யாத்திரையும் திகழ்கின்றது.
எண்ணெய்யின் விலை குறைவும், மக்கா யாத்திரைகள் ரத்துச் செய்யப்பட்டமையும் சவுதியின் பொருளாதார அடித்தளத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டது.
சவுதி என்ன செய்யப் போகின்றது ?
எனவே தமது பொருளாதார வீழ்ச்சியை நிலைநிறுத்துவதற்காக, ஊதியம் மற்றும் செலவு ஆகிய இரண்டு விடயங்களிலும் சவுதி கவனம் செலுத்தி வருகின்றது. அதே போன்று சவுதி பொருளாதாரச் சரிவை சந்திக்கும் நேரமெல்லாம், சவுதியில் இருந்து வௌிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரி விதிப்பது பற்றிய ஊகங்கள் எழுந்துள்ளன.
கொரோனா தொற்றுத் தாக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜட்டில் நிதி வெட்டுக்களைச் செய்வதற்கு சவுதி எதிர்பார்க்கின்றது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் டிசம்பரில், ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 60 டொலர் என பட்ஜட் தயாரிக்கப்பட்டிருந்தது.
தற்போது உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் Lockdown முடக்கத்தின் விளைவாக, கச்சா எண்ணெய்க்குறிய கேள்வி குறைந்ததை அடுத்து பீப்பாய் ஒன்றின் விலை 25 டொலருக்கு குறைவாக விலை போனது.
ரஷ்யாவிற்கு எதிராக சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆரம்பித்த எண்ணெய் விலைப் போரின் விளைவாகவும் எண்ணெய் விலையில் குறைவு ஏற்பட்டது. குறைந்த விலைக்கு சந்தையில் மசகு எண்ணெய்யை விற்பதன் மூலம் ரஷ்யா, அதன் எண்ணெய் உற்பத்தியை தக்கவைத்துக் கொள்ளாமல் தடுமாறும் என சவுதி எதிர்பார்த்தது.
இந்த நடவடிக்கையினால் எண்ணெய் விநியோக உற்பத்தி கூடிச் சென்றதோடு, எதிர்வரும் ஆண்டில் எண்ணெய் விலை குறைப்புக்கான உத்தரவாதத்தையும் அளித்தது. யாரும் எதிர்பாராத விதமாய் இந் நடவடிக்கை சவுதியின் பொருளாதாரத்தையே நிர்க்கதி நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.
மேலும் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நோக்குடன், உம்றா – ஹஜ் வணக்கங்களும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் விலை குறைவும் சர்வதேச மட்டத்தில் எண்ணெய்க்கான கேள்வி குறைந்துள்ளமையும், யாத்திரிகர்களிடம் இருந்து கிடைக்கும் வருமானம் கிடைக்காமல் போனமையும் சவுதியின் பொருளாதாரத்தில் ஒரு கடிவாளத்தினை இட்டுள்ளது.
சவுதி தமது வெளிநாட்டு சொத்து பெறுமதியில் கை வைப்பதற்கு தற்போது வரை முடிவு செய்யவில்லை என்றே அறிய முடிகின்றது.
ஏனெனில் 2014 ஆம் ஆண்டில் 746 Bபில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டுச் சொத்துப் பெறுமதி, தற்போது 473 Bபில்லியன் டொலர்களாக குறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனியார் துறையில் 40 சதவிகிதம் வரை சம்பளக் குறைப்புச் செய்வதை சவுதி ஆராய்ந்து வருகின்றது. இது மேலதிக நேரக் கொடுப்பனவிலும் தாக்கம் செலுத்தும்.
சவுதியில் சுமார் 10 Mமில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனிசமான அளவு தொழில் புரிந்து வருகின்றனர்.
பணிக்குறைப்பு அல்லாமல் சம்பளக் குறைப்பை மேற்கொள்ளவே எதிர்பார்ப்பதாக, சவுதியின் நிதி அமைச்சர் Mohammed al Jadaan சுட்டிக்காட்டி இருப்பது ஓரளவு ஆறுதலான விடயம்தான்.