ஏற்கனவே அமெரிக்க போர் விமானப் படைப்பிரிவுகள் இரண்டு, வளைகுடாப் பிராந்தியத்தை விட்டு வெளியேறி இருந்த நிலையில், சவுதியில் இருந்து அமெரிக்கா வெளியேறத் தயாராகி வருகின்றது.
கடந்த ஆண்டு ஈரானில் இருந்து சவுதியின் எண்ணெய் வயல்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன.
இதன்போது தானியங்கி ஏவுகனைத் தடுப்பு சுடுகலன்களை சவுதியில் அமெரிக்கா நிறுவி, அந் நாட்டிற்கு உதவியது.
தற்போது ஈரானின் அச்சுறுத்தல்கள் குறைந்து விட்டதாகக் கூறியே, சவுதி எண்ணெய் வயல்களில் உள்ள தானியங்கி ஏவுகனைத் தடுப்பு சுடுகலன்கள் மற்றும் இராணுவ உபகரணங்களையும் அங்கு நிறுத்தப்பட்டிறுந்த அமெரிக்க இராணுவத்தினரையும் அகற்றுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
இதேபோன்று வளைகுடாவில் உள்ள கடற்படையினரின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது.
இந்தக் குறைப்பு நடவடிக்கைகள், ஈரானால் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு உடனடி அச்சுறுத்தல்கள் ஏற்படாது என்று சில அதிகாரிகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களின் கேள்விகளுக்கு சவுதி அதிகாரிகள் உடனடி பதில்கள் எதனையும் வழங்கவில்லை.
இதேவேளை கடந்த ஆண்டில் சவுதி எண்ணெய் வயல்களின் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் தமது நாடு சம்பந்தப்படவில்லை என ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.
ஈரானின் ஜெனரல் Qassem Soleimani ஆளில்லாத விமானத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டமை, ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட வேலைநிறுத்தம், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று போன்ற காரணங்களினால் ஈரானின் திறன்கள் பிராந்தியத்தில் குறைந்துவிட்டதாக அமெரிக்கா நம்புகின்றது.
இதேவேளை ஆசியாவில் விரிவடைந்துவரும் சீனாவின் இராணுவச் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான முயற்சியாக தமது இராணுவத் தளபாடங்களை நகர்த்தும் திட்டத்தினையும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.
அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பாரம்பரியமான உறவுநிலை சமீபத்திய வாரங்களில் சிதைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
ரஷ்யாவும் சவுதியும் எண்ணெய் விலை நிர்ணயத்தில் முரண்பட்டுக் கொண்டதாலும், உலகளாவிய கொரோனா தொற்றுக் காரணமாகவும் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல அமெரிக்க நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, அமெரிக்காவும் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காவிட்டால், அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான சட்டம் இயற்றப்படுவதை தன்னால் தடுக்க இயலாமல் போய்விடும் என்று ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் டிரம்ப் கூறியிருந்தார்.
சுருக்கமாகக் கூறினால் அனைத்து நகர்வுகளுக்கும் கொரோனா தொற்றின் தாக்கம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது என்பதே புறக்கணிக்கமுடியாத உண்மையாகும்.
சவுதியில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கு, இன்றைய அமெரிக்காவின் பொருளாதாரமும் முக்கிய காரணியாகும்.