இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய பல்வேறு பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் மர்ஹூம் தா. காசீம் அவர்கள்.
1960 முதல் 1990 வரை இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்திய கவிஞர் எழுத்தாளரும் தா. காசீம் அவர்கள்.
*தீன்குலக்கண்ணு எங்கள் திருமறைப்பொண்ணு…
*தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
*மதினா நகருக்கு போக வேண்டும்…
*உலகத்தில் நான் உன்னருளை…
*தாயிப் நகரத்து வீதியிலே…
*அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே…
*கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..
*வான்மறை சோலையில் வள்ளல் நபி பாதையில்….
*எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்…
*வெள்ளிப்பனிமலை உருகுதல் போல்
உள்ளம் உருகி பாடுகிறேன்….
என்று காலத்தால் அழியாத பாடல் வரிகளைச் செதுக்கி எழுதிய பெருந்தகை கவிஞர் தா. காசீம்..
கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் காலம் முதல் சிறாஜுல் மில்லத் காலம் வரையிலான முஸ்லிம் லீக் மேடைகளை கவிதைகள் மூலமும் சிலேடையான நகைச்சுவை கலந்த பேச்சாற்றல் மூலமும் கலகலக்க வைத்த பெருமையும் தா. காசீம் அவர்களுக்குண்டு. முஸ்லிம் லீக் கட்சியின் பிரச்சார பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறார்..
கவிபாடும் புலமையை பாராட்டி காயிதேமில்லத் வழங்கிய சிறப்பு ”சமுதாயக்கவிஞர்” பட்டம்..
முஸ்லிம் லீக் கட்சியின் ஆரம்பகால பத்திரிகையான அறமுரசுவில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சரவிளக்கு என்ற பெயரில் சொந்தமாக பத்திரிகை நடத்தியதும், பிறைக்கொடி என்ற பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது கவிதைகளை தொகுத்து ”உதயங்கள் மேற்கே” எனும் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார்.
முஸ்லிம் லீக் தலைவர்கள் மீது மிகுந்த அபிமானம் காரணமாக சென்னை மண்ணடியில் நடத்தி வந்த அச்சகத்திற்கு காயிதேமில்லத் அச்சகம் என்று பெயர் சூட்டிய தா. காசீம், தனது பிள்ளைகளுக்கு சமது சாகிப் தந்தை பெயரான அப்துல் ஹமீத், முன்னாள் எம் பி றிஃபாய் சாகிப் நினைவு கூறும் அகமது ரிபாய், முகமது இஸ்மாயீல், வடகரை பக்கர் நினைவாக அபுபக்கர் என்றும் பெயர் சூட்டியுள்ளார்..
கலைஞர் மு. கருணாநிதி மிகவும் விரும்பி கேட்கும் பேரறிஞர் அண்ணா மரணம் நினைவாக நாகூர் ஹனிபா பாடிய…
எங்கே சென்றாய் எங்கே சென்றாய்
எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்…
என்ற திமுக வின் உணர்ச்சி பொங்கும் பாடல் வரிகளின் சொந்தக்காரரும் கவிஞர் இவர் தான்..
சென்னையில் தங்கியிருந்த போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தா. காசீம் அவர்களின் மரணத்தையொட்டி சென்னை பர்மா பஜார் முழுவதும் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்..
திருப்பத்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி தாவூத் ராவுத்தரின் மகனான தா. காசீம் குளச்சலில் மணமுடித்து நீண்டகாலம் குளச்சலில் வசித்து வந்தார். தற்போது கவிஞரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோட்டாறு இளங்கடை பகுதியில் வகிக்கின்றனர்…
ஆக்கம் : Colachel Azheem
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment