மருத்துவ உலகில் இதுவரை கண்டறியப்படாத வைரஸ் பலரின் நுரையீரலை தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
- கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா ?
இதுவரை இல்லை என்பதே பதில். கொரோனா வைரஸை குணப்படுத்தவோ, அல்லது அது வரும்முன் தடுத்து நிறுத்தவோ தற்போது வரை மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதத்தில் இருந்து சில ஆண்டுகள் ஆகலாம்.
2002 ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸுக்குக் கூட தற்போதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது மருத்துவமனைகளில் ‘ஆன்டிபயடிக்’ மருந்துகள் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை வைரஸை குணப்படுத்தவோ, வைரஸ் பரவுவதை தடுக்கவோ உதவாது. ஆனால் வைரஸை எதிர்த்துப்போராட உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். Lopinavir, Ritonavir ஆகிய மருந்துகளின் கலவை சார்ஸ் வைரஸ் பரவலின் போது மிகப் பெரிய பலனை அளித்தது. தற்போது சீனா கொரோனா வைரஸுக்கும் இதனை முயற்சி செய்து பார்க்கிறது.
- வெயில் காலத்தில் கொரோனா தாக்காதா ?
ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல் குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கும். எனவே வெயில் காலத்தில் கொரோனா பாதிப்பு குறையக்கூடும் என நம்பப்படுகின்றது. எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் சவுதி அரேபியாவில் வெயில் காலத்தில் அதிகம் பரவியது குறிப்பிடத்தக்கது. என்றாலும் குளிர்காலமாக இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் காணப்பட்டிருக்கும் என்ற விடயமும் மறுப்பதற்கில்லை.
- கொரோனாவின் அறிகுறி என்ன ?
கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் மெல்லிய காய்ச்சல் வரட்டு இருமலோடு ஆரம்பிக்கும் பின்னர் ஒரு வாரம் கழித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு மூச்சுப் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு வைரஸ் காரணமாக நிமோனியா, சுவாசப் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு என்பன ஏற்படலாம். இறுதியில் மரணம் கூட ஏற்படலாம். ஆனால் பலருக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படும் முன்னரே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாக சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறி இல்லாத நோயாளிகளே கொரோனா பரவ மிகப்பெரிய காரணி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- யாரையெல்லாம் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். ஏற்கனவே மூச்சுத் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள். அல்லது இதய நோய் போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தவர்களையே கொரோனா அதிகம் தாக்கியுள்ளது.
நல்ல ஆரோக்கியமானவர், நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைரஸ் தாக்கத்தின் வீரியம் குறைவாகவே உள்ளது. அவ்வாறானவர்கள் விரைவில் குணமடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ளலாம் ?
கைகளை நன்கு சவர்க்காரம் போன்றவற்றைப் பயன்படுத்தி கழுவுதல். இருமல், தும்மலின் போது மூக்கையும் வாயையும் திஸு பயன்படுத்தி மூடுங்கள். சளி, வைரஸ் காய்ச்சல் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். முட்டை அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள்.
- மாஸ்க் பயன்படுத்தினால் தப்பிக்க முடியுமா ?
மாஸ்க் அணிவதால் கொரோனாவில் இருந்து முற்றிலும் தப்பிக்க முடியாது. ஆனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை ஓரளவு குறைக்க முடியும்.
- கொரோனா வந்தால் மரணம்தானா ?
WHO வின் கருத்தின்படி முன்னதாக 17,000 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது 3% பேர்தான் அதி தீவிர பாதிப்பில் இருந்ததாக குறிப்பிடுகின்றது. பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடும்போது மரணம் அடைபவர்களின் வீதம் மிகக்குறைவானதாக இருந்தாலும் இவ் எண்ணிக்கை நம்பகமானதல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்னமும் 1000 கணக்கானவர்கள் நோயாளர்களாக இருப்பதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மரண வீதம் அதிகரிக்கக்கூடும்.
வரும் முன் காத்து எச்சரிக்கையுடன் செயற்பட்டால் கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். நோய் எதிர்ப்பு சக்தியுடைய உணவுகளை இப்போதிலிருந்தே எடுத்துக் கொள்ளுங்கள்.