சத்தமில்லாமல் உலகின் பசியை ஹஜ் வணக்க வழிபாடு போக்கி வருகின்றது. 27 நாடுகளில் உள்ள 10 கோடி மக்களின் பட்டினியைப் போக்கிய குர்பான் இறைச்சி …
கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஹஜ்ஜின்போது குர்பான் செய்யப்பட்ட இறைச்சிகளை பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் 84 மணித்தியாலத்தினுள் 1 மில்லியன் கால்நடைகளின் இறைச்சியை 27 நாடுகளில் உள்ள முஸ்லிம்களுக்கு சவுதி பகிர்ந்தளித்துள்ளது.
Islamic Development Bank (IsDB) இத் தகவல்களை வெளியிட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை 1983 ஆம் ஆண்டில் இருந்து IsDB நிர்வகித்து வருகின்றது.
குர்பான் இறைச்சிகளை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கலாம் என்று வழங்கப்பட்ட ஃபத்வா வைத் தொடர்ந்தே இத் திட்டத்தினை சவுதி அமுல்படுத்தத் தொடங்கியது.
இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில், 63,000 கால்நடைகள் குர்பானுக்காக அறுக்கப்பட்டன. கடந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியனை எட்டும் வரை யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால், இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஈத்-அல்-அல்ஹாவின் முதல் நாளிலிருந்து Haram பகுதியில் உள்ள ஏழைகளுக்கு குர்பான் இறைச்சி விநியோகம் செய்யப்படுகின்றது. முஹர்ரம் மாதத்தின் முதல் நாளிலிருந்து கப்பல்களின் மூலம் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு இவ் இறைச்சி அனுப்பி வைக்கப்படுகின்றது.
கடந்த வருடம் Ministry of Labour and Social Development அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்ற 250 தொண்டு நிறுவனங்கள் ஊடாக, இறைச்சிகள் குளிர்சாதனங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு சவுதியில் தேவையுடையோருக்கு விநியோகம் செய்யப்பட்டன.
சவுதியில் மாத்திரம் இவ்வாறு 150,000 கிலோகிராம் இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
இன்றுவரை 100 மில்லியன் முஸ்லிம் மக்களுக்கு 33 மில்லியன் கால்நடைகளின் இறைச்சி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் தோல் மற்றும் இறைச்சியை சுத்தம் செய்தல், வெட்டுதல், போக்குவரத்து, பொதியிடல், பாதுகாத்தல், விநியோகம் மற்றும் பதப்படுத்தல் ஆகிய ஒருங்கிணைந்த பணிகளுக்கு ஊடாகவே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவற்றிற்கு ஒருங்கிணைந்த தானியங்கி அமைப்புடன் கூடிய இறைச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தள திறனை சுமார் ஐந்து மில்லியன் கால்நடைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்துடன் 1.5 மில்லியன் அறுக்கப்பட்ட கால்நடைகளை வைத்துக்கொள்வதற்கான மைய வளாகமும் காணப்படுகின்றது.
இவ்வாறு பல கட்டங்களையும் தாண்டி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பசியால் வாடும் முஸ்லிம் மக்களுக்கு இவ் குர்பான் இறைச்சிகள் சென்றடைகின்றன.
இவ்வருடம் சர்வதேச மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, ஹஜ் வணக்க வழிபாடுகள் நடைபெற வாய்ப்புகள் இல்லாமையால், பட்டினியால் வாடும் மக்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.
அனைத்து நிலைமைகளும் சீரடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.