ஒஸ்லோ ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதைத் தொடர்ந்து அனைத்து உடன்படிக்கைகளிலிருந்தும் பலஸ்தீன் வெளியேறுகின்றது. இது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து உடன்படிக்கைகளிலிருந்தும் பலஸ்தீன் வெளியேறுகின்றது.” என்று பத்திரிகைகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (19.05.2020) நடைபெற்ற கூட்டமொன்றின்போது, “இஸ்ரேல், அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலிருந்து பலஸ்தீன் வெளியேறுகின்றது…” என்று பலஸ்தீன் ஜனாதிபதி Mahmoud Abbas அறிவித்துள்ளார்.
மேலும் “இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளுக்கு இஸ்ரேலே பொறுப்புக் கூற வேண்டும்.” என்றும் Mahmoud Abbas தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் நான்காவது ஜெனீவா மாநாட்டின்படி “பொதுமக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும்” பொறுப்பு இஸ்ரேலுக்கு இருக்கின்றது என்று Mahmoud Abbas கூறினார்.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது முடிவு எடுக்கப்பட்டதாக அப்பாஸ் கூறினார்.
இஸ்ரேல் ஏற்கனவே பலஸ்தீன் மண்ணை அபகரித்துள்ள நிலையில், ஒஸ்லோ ஒப்பந்தத்தை மீறி மேலும் பலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் குடியிருப்புக்களுடன் இணைக்கும் திட்டத்தை அப்பாஸ், கடுமையாகச் சாடினார்.
பாதுகாப்பு ஒருங்கிணைப்பு
இஸ்ரேலுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் யாவும் வெறும் வெற்றுக் காகிதங்களாகவே காணப்படுகின்றன என்று பலஸ்தீன் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையானது பலஸ்தீன் சமூகத்திற்குள் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரியதாகவே நோக்கப்பட்டு வந்துள்ளது. பலஸ்தீனின் மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல், கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளில் அத்துமீறி நடந்துகொள்வது இவ்வாறு சர்ச்சைகளை உருவாக்கியது.
கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை விட இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பலஸ்தீனை அதிகம் பாதித்துள்ளது.
மேற்குக் கரையின் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பலஸ்தீன் அதிகாரிகளின் நடமாட்டம் போன்ற மிக சாதாரணமான விஷயங்கள் கூட இஸ்ரேலுடன் முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஆனால் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு என்ற விடயத்தை வைத்து, பலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் கைது மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
Ramallah வில் உள்ள Mahmoud Abbas இன் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து Bethlehem இல் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பதாக இருந்தால்கூட, Mahmoud Abbas எந்தப் பாதைகளின் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்ற விடயத்தினை இஸ்ரேலுக்கு அறிவித்தல் வேண்டும்.
பாலஸ்தீனிய அதிகார சபையின் முடிவு
ஒஸ்லோ ஒப்பந்தம் ரத்தானால் உண்மையில், அது பாலஸ்தீனிய அதிகாரசபையையும் அதன் அனைத்து நிறுவனங்களையும் கலைப்பதைக் குறிக்கிறது. தற்போது இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பலஸ்தீன் அதிகாரசபை தனது அரசாங்கத்தை விருப்பத்துடன் கலைப்பதற்கும், அதன் அதிகாரத்தை இழப்பதற்கும், அரசாங்க தொழில்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை பணிநீக்கம் செய்வதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.