அண்மையில் ஒருவருடைய ஜனாசா குழிப்பாட்டும் இடத்தில் உதவிக்காக நின்றுகொண்டிருந்தேன் முஅத்தினார் குழிப்பாட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் எந்தளவிற்கென்றால் தன்னுடைய இடக்கையில் வெள்ளைப்பிடவையை சுற்றிக்கொண்டு ஜனாசாவின் பின்புறப்பகுதியை சுத்தம் செய்தார் மாதக்கணக்கில் நோயுற்றிருந்தவருடைய ஜனாசா அது, நெருங்கிய உறவினர்கள்கூட கைகட்டி நின்றுகொண்டும் சிலர் தண்ணீர் ஊற்றும் பங்களிப்பையும் செய்துகொண்டிருந்தார்கள்.
முஅத்தின் என்பவர்கள் மிக கண்ணியமாக பார்க்கப்படவேண்டியவர்கள் என்பதற்காக மஃசர் மைதானத்தில் முஅத்தின்களின் கழுத்து உயர்ந்ததாக இருக்கும் என நபி (ஸல் அலை) அவர்கள் கூறியதுமாத்திரமல்லாது கறுப்பின அடிமை என்று வர்ணிக்கப்பட்ட பிலால் (றழி) அவர்களை கண்ணியமான கஃபாவின் முகட்டில் ஏற்றி பாங்கு சொல்லும் பணியை கொடுத்தார்கள்.
ஆனால் நமது பள்ளி முஅத்தின்களோ பள்ளியை கூட்டிப்பெருக்குவதற்கும், நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு சேவகம் செய்வதற்கும், மையத்து கடமை செய்வதற்குமென பயன்படுத்திவிட்டு மேலதிக ஒரு பொறுப்பாகத்தான் அதான் சொல்லும் பணி கொடுக்கப்பட்டுள்ளது
முஅத்தின் பணி என்பது ஒரு 24 மணிநேர பணியாக பார்க்கப்படுகின்றது காலை சுபஹ் அதானில் ஆரம்பித்து இரவு 9.00 மணிக்கு பள்ளிவாயில் கதவுகள் மூடும் வரையான அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும் பள்ளி மின்குமிழ் எரியாவிட்டால் எங்க முஅத்தின்? பள்ளி காபட்டில் தூசு கிடந்தால் எங்க முஅத்தின்?, வுழூசெய்யும் டெப்பில் நீர் வருவது கொஞ்சம் குறைந்துவிட்டால் எங்க அந்த முஅத்தின், பள்ளி தலைவர் அழைக்கிறார் என்ற தகவல் முஅத்தினை அடையுமுன் கூப்பிட்டா இந்த முஅந்தின் வரமாட்டான் என்று ஒருசத்தமும் என்று இவர்கள் படும் பாடு வார்த்தைகளால் சொல்லமுடியாது. இது இத்தனைக்கும் இவர்கள் பெறும் ஊதியம் வெறும் 12,000 ரூபா தொடக்கம் 27,000.00 வரைதான் இந்த வருடம் 1,000.00 ரூபாவைக்கூட்டி கொடுக்க தீர்மானம் ஒன்றை நம்பிக்கையாளர் சபையில் முன்மொழிந்தால் வரும்பாருங்க ஒரு சத்தம் என்னமோ பள்ளி உறுதிய முஅத்தின் பெயருக்கு மாற்றக் கேட்டதுபோல.
ஆக மொத்தத்தில் முஅத்தின்களின் பணி என்ன என்பதை ஜும்மாக்களிலும் இதர பயான்களிலும், பொது நிகழ்வுகளிலும் உணர்த்தப்பட வேண்டும் இவர்களுக்கான ஒரு நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கடமைப்பட்டியல், குறைந்த மாதாந்த ஊதியத்தின் அளவு என எல்லா விடயங்களையும் ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரிப்பதனூடாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஊரின் முக்கிய நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக தொண்டு அமைப்புக்கள் முன்வருமாக இருந்தால் எதிர்காலத்தில் நல்ல குரல் வளம்மிக்க, மார்க்க அறிவு நிறைந்த இளைஞர்கள் இப்பணிக்காக முன் வருவார்கள்.
Eng. Shibly Farook Mohamed
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்