News

இலங்கைத் திரு நாட்டின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி – C Media

சுதந்திர
இலங்கைத் திரு நாட்டின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி - C Media

ஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன. அந்த வகையில், 1948ம் ஆண்டு, பெப்ரவரி 04ந் திகதி எமது இலங்கைத் திரு நாடு, பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தது. இத்தினத்தில் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து, ஜனநாயக குடியரசு நாடாக உருவெடுத்த இலங்கை, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தனது 71வது சுதந்திர தினத்தை அமைதியாகவும் வெகு விமர்சையாகவும் கொண்டாடும் இத்தருணத்தில், சற்று பின்னோக்கினால் எமது சுதந்திரம் இரத்தக் களரி இன்றி கிடைத்த ஒன்றாக இருந்தாலும், பெறுமதியற்று வெறுமனே கிடைக்கபெற்றதொன்றல்ல. இதன் பெருமை இனம், மதம், மொழி, ஜாதி வேறுபாடின்றி களத்தில் போராடிய எமது மூத்த தலைவர்களையே சாரும்.

சுதந்திரப் போராட்டத்திற்கு நமது சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் பங்களிப்பு வழங்கினர். இம்மூவின மக்களின் தலைவர்கள், தமது பொது எதிரியாக ஆங்கிலேயர்களை இனங் கண்டு, சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டு அவர்களுக்கெதிராக போராட்டம் நடாத்தி வெற்றிபெற்றனர்.

சகல இனத்தவர்களும் அன்று ஒன்றுபட்டு போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை அவ்வாறே இன்றுவரை எம்மால் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிகமான அரசியல் வாதிகள் சகல இனங்களையும் ஒன்றுபடுத்தி ஆட்சியமைப்பதற்கு பதிலாக இனங்களிடையே பிளவுகளை உருவாக்கி ஆட்சியை அமைத்தனர். இதனால் ஒவ்வொரு இன மதங்களை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் உருவாகின.

அவர்கள் செய்ததெல்லாம், தேர்தல் வாக்குகளைப் பெற்றுகொள்வதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தை மேலோங்கச் செய்து ஏனைய இனங்களை கீழ்ப் படுத்தியமையே ஆகும்.

இதனால் இனங்களிடையே பிரிவினை மனோ நிலை ஏற்படத் துவங்கியது. இந்திய நாட்டு மக்கள் தம்மை இந்தியர் என்றும் அமெரிக்க பிரஜைகள் தம்மை அமெரிக்கர்கள் என்றும் நினைக்கும் போது…. ஏன் நாம் எம்மை இலங்கையர்கள் என்று நினைக்க முடியாமல் போனது.

நாம் எம்மை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று நினைப்பதற்கு முன்னர் நாம் எல்லோரும் எம்மை இலங்கையர்கள் என்று நினைப்பது எமது கடமையாகும்.

இது எமது புதிய தேசத்தின் உதய நாள், உதய தேசத்தின் ஆரம்ப நாள். 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், இன மத பேதங்களை மறந்து நாம் இலங்கையர்கள் என்று கூற முற்படுவோமாக! நாட்டுப்பற்றுடன் மற்றும் சமூகநல்லிணக்கத்துடன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி தேசப்பற்றை வளர்ப்போம்!

மௌலவி M F பஸ்ருல் ரஹ்மான் ( மஹ்ழறி)
செயலாளர் – C மீடியா ஊடகப் பிரிவு

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top