வாகன எரிபொருளுக்கான QR – Code பெறுவதில் சிக்கலும் தீர்வும்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலானவர்கள் எரிபொருளைப் பதுக்கி வைத்துள்ளனர்.
ஒரே நபர் பலமுறை எரிபொருளைப் பெற்று, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3000 ரூபா தொடக்கம் 5,000 ரூபாவுக்கு மேலாகவும் விற்பனை செய்த விடயமும் பரவலாக அறியப்பட்ட விடயமாக மாறிவிட்டது.
இத்தகைய விடயங்களை கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக QR குறியீட்டு முறைமையை எரிசக்தி அமைச்சு அறிமுகப் படுத்தியது.
இவ்வாறு QR குறியீட்டு முறையை, இலட்சக்கணக்கானோரினால் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. போக்குவரத்து திணைக்களத்தின் சில பிராந்திய மற்றும் மாவட்ட பிரிவுகளின் ஊடாக வாகன உரிமங்களைப் பெற்ற வாகனங்களுக்கு இவ்வாறு QR குறியீட்டு முறையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக அறியமுடிகின்றது. பிராந்திய மற்றும் மாவட்ட பிரிவுகளில் பதியப்பட்ட ஆவணங்கள், கொழும்பிலுள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான வலையமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படாமையே இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு QR குறியீடு முறையை கைத்தொலைபேசியூடாக பெற்றுக்கொள்ளமுடியாமல் போன பாடசாலை அதிபர் ஒருவொர், வாகனத்தின் ஆவணங்களைப் பதிவுசெய்த பிராந்திய நிலையத்துக்கு தமது ஆவணங்களுடன் சென்று வினவியபோது, “உங்களது பதிவுகள் கொழும்பிலுள்ள பிரதான திணைக்களத்துடன் இணைத்துக் கொள்ளப்படவில்லை… வேண்டுமென்றால் File ஐ உங்களிடம் தருகின்றோம்… கொழும்புக்குச் சென்று உங்களது தரவுகளை பிரதான காரியாலயத்தின் தரவுத் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்… ” என்று பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று புத்தக வடிவில் காணப்படும் (பழைய) வாகன சான்றிதழ் படிவத்தைக்கொண்ட 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கும் QR குறியீட்டினைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரியவருகின்றது.
தீர்வு
இத்தகைய நிலைமைகளை கருத்திற் கொண்டு, வாகனங்களின் ஆண்டு வருமானப் பத்திரத்தினையும் (Revenue License) உட்புகுத்தி, எரிபொருளுக்கான QR குறியீட்டினை கைத்தொலைபேசியில் தரவிறக்கம் (Download) செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
-தகவல்-
தாஜுதீன் நிஸ்தாஜ்
நன்றி.