மூதூரின் முதலாவது கலாநிதி கல்விப் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த முதன்மையாளராக அல்ஹாபிழ் எல்.எம்.முபீத் (அஸ்ஹரி) அவர்கள் திகழ்கிறார்.
இவர் தனது ஆரம்ப கால கல்வியினை மூதூர் மத்திய கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை அதே பாடசாலையிலேயே கற்றார்.
1991 ஆம் ஆண்டு தனது ஆன்மிகக் கல்வியினைக் கற்றுக் கொள்வதற்காக மூதூரின் முதலாவது அரபுக் கலாபீடமான நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் இணைந்தார்.ஆரம்பத்தில் அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக ஹிப்ழு(மனனம்) பகுதியில் இணைந்து மூன்று வருடங்களில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து அல்ஹாபிழானார்.
2012 ஆம் ஆண்டு தனது கலாநிதி கற்கையினைத் தொடர்ந்து “நிதிக் கொள்கைக்கும் நாணயக் கொள்கைக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துவதற்கான பொறி முறைகள்” (Mechanism Of Coordination Between Fiscal And Monetary Policies) எனும் தலைப்பின் கீழ் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வுகளை மேற் கொண்டு 2016-12-23 அன்று தனது கலாநிதிப் பட்டத்தினை தனது 36 வது வயதிலே முழுமையாக பூர்த்தி செய்து முடித்தார்.இதனால் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறிய வயதிலே கலாநிதிப் பட்டம் பெற்றவர் எனும் பெருமையினை இலங்கை தாய் நாட்டுக்கு பெற்றுக் கொடுத்ததோடு எமது மூதூர் மண்ணுக்காவும் பெற்றுக் கொடுத்தார்.
அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று கலாநிதிகளாக இதுவரைக்கும் இலங்கையைச் சேர்ந்த 06 மாணவர்களே வெளியாகியிருக்கிறார்கள் அவர்களில் ஆறாவது நபராகவும் அல் குர்ஆனை மனனம் செய்து அல் ஹாபிழ் பட்டம் பெற்ற ஒரேயொரு இலங்கை கலாநிதி மாணவனாகவும் “இஸ்லாமிய பொருளாதார மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கைகள்” எனும் கற்கை நெறியிலே கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரோயொரு இலங்கையராகவும் திகழ்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரால் கலாநிதி கற்கை நெறிக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையானது சுமார் 600 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியீடு செய்யப்பட்டிருந்தது.
இந் நூலானது இஸ்லாமிய உலகில் ஓர் முன்னோடி நூலாக கருதப்படுகிறது.இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதன் முதல் பகுதியானது “சர்வதேச நிதிக் கொள்கைகளும் அதன் சித்தாந்தங்களும்” எனும் பகுதியினூடாகவும் அதன் இரண்டாவது பகுதியானது ” நாணயக் கொள்கைகளும் அதன் இயைபாக்கங்களும்” எனும் பகுதியினூடாகவும் அதன் மூன்றாவது பகுதி “நிதிக் கொள்கைக்கும் நாணயக் கொள்கைக்குமிடையேயான இணைப்பு” எனும் பகுதிகளினூடாகவும் அமையப் பெற்றுள்ளது.
2016 ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் இராணுவ ஆட்சியின் போது அந்நாட்டின் பணவீக்கமானது சுமார் 60% வீதத்தினால் அதிகரித்திருந்தது. இந்நிலையில் கலாநிதி எல்.எம்.முபீத் அவர்களின் மூலமாக “நாணயத் தாள்களின் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான இஸ்லாமிய தீர்வுகள்” எனும் தலைப்பின் கீழ் நூல் ஒன்று எழுதப்பட்டது.
இந்நூலானது எகிப்திய சர்வதேச இஸ்லாமிய பொருளாதார நிலையத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. இது அந்நாட்டின் பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை முன்வைத்த நூலாகவும் பலராலும் ஈர்க்கப்பட்டு வாசிக்கப்பட்ட நூலாகவும் இருக்கிறது.
மேலும் கலாநிதி முபீத் அவர்களினால் தொகுக்கப்பட்ட பல ஆய்வறிக்கைளும் தொகுப்புகளும் அரபு மொழி மூலமாக தொகுப்பாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் எதிர்வரும் காலங்களில் தமிழ் மொழி பெயர்ப்புகளோடு நூற்களாக வெளிவர இருக்கின்றது.
தற்போது கலாநிதி எல்.எம்.முபீத்(நத்வி) அவர்கள் தனது கல்லூரியான நத்வதுல் உலமா அரபுக் கலாசாலையிலே விரிவுரையாளராக பணியாற்றுவதோடு நத்வாவின் எதிர் கால முன்னேற்ற திட்டங்களை முன்வைக்கும் ஓர் முதன்மை ஆலோசகராகவும் செயல்படுகின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தொகுப்பு:-
M.M.MANASEER(NATHWI)
NEITHAL NAGER
MUTUR-01
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment