எண்ணெய் விலையின் சரிவைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் பொருளாதாரம் சிறிய அளவு அதிர்வினை எதிர்கொண்டிருந்தது. இந்த பொருளாதார அதிர்வு சவுதியில் சற்றுக் கூடுதலாகவே தாக்கம் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து சவுதி அரசாங்கம் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்குடன் முதலில் அரச அலுவலர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைப்பதற்கான அறிவிப்பை விட்டிருந்தது.
சவுதி அரசின் இத்தகைய நடவடிக்கை இரண்டு விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என துறை சம்பந்தப்பட்ட ஆர்வளர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.
1. மத்திய கிழக்கின் ஏனைய எண்ணெய் வள நாடுகளும் இத்தகைய கொள்கை ஆக்கத்தினை வகுக்கக் கூடும்,
2. அரச துறையைத் தொடர்ந்து தனியார் துறையிலும், குறிப்பாக தொழிலாளர் குறைப்பு நடவடிக்கையிலும் அரசு தலையிடக் கூடும்,
என்றும் எதிர்வு கூறல்கள் வெளியிடப் பட்டிருந்தன.
ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கத்தின் பின்னர், ஈரான் எடுத்த எடுப்பிலேயே அளவுக்கு அதிகமாக எண்ணெய்யை சந்தைப்படுத்தி வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட அளவொன்றினைப் பேணிக் கொள்ளுமாறு OPEC அமைப்பு விடுத்த கோரிக்கையையும் ஈரான் கண்டுகொள்ளவில்லை.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏனைய எண்ணெய் வள நாடுகளும் அதிக அளவில் எண்ணெய்யை சந்தைப்படுத்தியது. இதன் விளைவாக எண்ணெய் விலை கனிசமான அளவு குறைந்தது மாத்திரமன்றி பொருளாதாரத்திலும் நலிவுப் போக்கைக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து அவசரமாக கூடிய OPEC அமைப்பு, எண்ணெய் விநியோகத்தில் மட்டுப்பாட்டினைக் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்துக்கு கொள்கை அளவில் உடன்பாட்டுக்கு வந்தது. இத்திட்டம் நவம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், எண்ணெய் விலை திடுதிப்பென்று 5 சதவீத உயர்சிப் போக்கைக் எட்டியிருக்கின்றது.
எதிர்காலத்தில் எண்ணெய் விலை உயரக்கூடும் என்பதை எதிர்பார்க்கலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். சவுதி அரசின் அண்மைய பொருளாதார சீரமைப்பு நடவடிக்கையானது, அரச உத்தியோகத்தர்களின் நலனைப் பாதிக்காத வகையில் தமது அறிக்கையினை வெளியிட்டு இருந்தது.
“மேலதிக பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களுக்கு அமர்த்தப்படுவர்.” என்ற அம்சம், சவுதி அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றது. பொதுவாக பொருளாதார பின்னடைவைச் சந்திக்கின்ற நாடுகள் முதலில் செய்கின்ற வேலைதான், ‘பணியாளர் குறைப்பு’ நடவடிக்கையாகும். ஒரு குறிப்பிட்டளவு விடுவிப்புத் தொகையை கட்டம் கட்டமாக வழங்கி பணியாளர் நீக்கம் செய்வதாகும்.
அத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொள்ளாது அரச தொழிலாளர்களின் நலனை கருத்திற் கொண்டிருப்பதானது, தனியார் பணியாளர்களிடத்திலும் சவுதி அரசு கடும்போக்கை கடைப்பிடிக்காது என்பதை எதிர்பார்க்கலாம்.
தனியார் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள விளையுமாயின், தொழிலாளர் விரும்பினால் மாத்திரம் தமது நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடியும் முன்னர் பணியில் இருந்து விடுபட்டுச் செல்லலாம் என்ற அம்சத்தை முன்வைக்கும் திட்டம் சவுதி அரசிடம் இருந்தது.
எது எப்படியோ OPEC ன் எண்ணெய் விநியோகம் மட்டுப்பாடு அறிவித்தலைத் தொடர்ந்து, 5 சதவீதம் எண்ணெய் விலை அதிகரிப்பும், நவம்பர் மாதத்தில் இது தொடர்பாக OPEC மேற்கொள்ளவுள்ள கைச்சாத்தின் பின்னர் எண்ணெய் விலையில் அதிக ஏற்றத்தையும் காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே சவூதியின் பொருளாதார நிலைமை விரைவில் வழமைக்குத் திரும்பவுள்ளது. இந்த நகர்வு குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களைப் பொறுத்தவரைக்கும் ஆறுதலான விடயமாகும்.