பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் Facebook கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரும் Facebook நிறுவனம் முடக்கியிருந்தது. கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சிறிது காலம் இத்தகைய செயற்பாடுகளை Facebook நிறுத்தியிருந்தது.
தற்போது மீண்டும் பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் கணக்குகளை Facebook முடக்கிவருகின்றது. Palestinian Information Centre என்ற அமைப்பின் 10 Facebook கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும். Palestinian Information Centre அமைப்பினை Facebook ஊடாக 2 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அபிமானிகளாக இருந்து வருவதையும் கருத்தில் கொள்ளாது Facebook நிறுவனம் முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை பரவலாக விமர்சனத்திற்குட்பட்டு வருகின்றது.
Facebook கணக்குகள் முடக்கப்பட்டமைக்கான காரணங்களை வினவியபோது “உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்கள் சமூகத் தரம் வாய்ந்ததாக இருக்கவில்லை. இதனால் நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு எக் காரணத்திற்காகவும் மீட்டித் தரப்படமாட்டாது.” என்ற பதிலை Facebook முன்வைத்துள்ளது.
பலஸ்தீன் இஸ்ரேல் என்று வரும்போது Facebook நிறுவனம் இரட்டை நிலைப்பாட்டை பேணிவருவதாக கண்டனங்கள் மேலெழுந்துள்ளன.
பலஸ்தீன் ஆதரவு சமூகவலைத்தளக் குழுக்கள் இதற்காக வேண்டி பதில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. முதலில் ஒழுங்குபடுத்திக்கொள்ளாத தனிநபர்களை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருவதும், Facebook க்குப் பதிலீடாக twitter போன்ற சமூகவலைத் தளங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்புக்கள் அதிகரிக்கும் போது அதற்கு எதிரான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படும் என்பதுவும் நிதர்சனமாகும்.