இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டதை அடுத்து, துருக்கி ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் முதன்முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணம் உலகிற்கு பல செய்திகளை முன் வைத்துள்ளதாக ஆய்வாளர் லத்தீப் மீரா தெரிவித்துள்ளார். துருக்கி சொல்ல வரும் முதலாவது செய்தி அமெரிக்காவுக்குரியதாகும். நாங்கள் உங்கள் அணிக்குரியவர்கள் அல்ல என்ற பிரகடனம் தான் அந்தச் செய்தியாகும். அமெரிக்கா, ரஷ்யா அணிசேர்ப்பு ராஜதந்திரம் அந் நாடுகளின் உள்நாட்டு அரசியல் தலைமை தெரிவுகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இது உடைந்து போன ரஷ்ய சோவியத் யூனியன் உயிரோடிருந்தபோது வல்லரசுத் தன்மை என்ற பாத்திரத்தின் எஞ்சிய மீதிகளை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை ரஷ்யாவுக்கு வழங்கி இருக்கிறது. காரணம் இன்றைய துருக்கியின் கொள்கைகள் எதுவும் பிற நாடுகளுடன் சேர்ந்து பயணிக்கலாம், ஆனால் அடிபணிதல் அல்ல என்ற அடிப்படையை உடையது. அதை விட கோடிட்டுக் காட்ட வேண்டியது யாதெனில், துருக்கியின் இன்றைய இயல்பை ரஷ்யா நாடி பிடித்துப் பார்த்து, இதில் தமது நலன் பற்றியும் ஆய்ந்து நோக்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். ஏனெனில் இஹ்வான்களின் ஆட்சி அதிகாரங்களை எகிப்தின் சீசி அதிகாரம் அடக்கியதன் பின்னர், முழு முஸ்லிம் உலகின் அங்கீகாரத்திற்குட்பட்டவராகவே துருக்கி அதிபர் தயிப் எர்டாகன் நோக்கப்பட்டு வருகின்றார். துருக்கி, முஸ்லிம் உலகின் தலைநகராக இருக்க வேண்டும் என்பதுதான் தயிப் எர்டோகானின் இறுதி இலக்காக இருத்தல் வேண்டும். ஆனால் அந்த இலக்கை நோக்கிய துருக்கியின் உறுதியான நகர்வு ஆர்பாட்டமில்லாத தீவிரத் தன்மை இல்லாத பக்குவத் தன்மையுடையதாக இருக்கின்றமையானது துருக்கிக்கு எதிரான கை நீட்டல்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது. முஸ்லிம் உலகின் அங்கீகாரம் அல்லது தலைமை என்ற மையக் கருதுகோளை தமக்கு பாதகமாக்கிக் கொள்ள ரஷ்யா ஒருபோதும் விரும்பியிருக்காது. எனவேதான் துருக்கியோடு சேர்ந்து இருப்பதையே ரஷ்யா விரும்புகிறது.
கடந்த நவம்பரில் ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானம் துருக்கி எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, உலக அரங்கு இந்த சம்பவத்தை அதிக முக்கியத்துவம் கொடுத்து நோக்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆவேசமான தொனியில் துருக்கிக்கு எதிராக தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஏதோ நடக்கப் போகின்றது என்று அமெரிக்காவும் ஆவலுடன் காத்திருந்தது. என்றாலும் துருக்கியின் பெறுமானம் அனைத்து நிலைமைகளையும் தனித்திருக்கிறது.
துருக்கியில் சிறு தொகையினரான ராணுவத்தினரின் அரசுக்கு எதிரான புரட்சியும் பல்கோண சிந்தனைக்குரியது. முக்கியமாக புரட்சிக்கு பின்னணியில் உள்ள சக்திகள் எவை ? என்ற தேடல் ஒரு புறம் இருக்க, தமது அரசுக்கும் ஒரு சர்வதேச ஆதரவு பின்னணி ஒன்றின் தேவை பற்றியும் துருக்கி தம்முள் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கக்கூடும். அவற்றில் ஒரு விடைதான் துருக்கியின் ரஷ்ய விஜயம்
Islam Mohamed