அரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு முறைகள், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு முறைகள் போன்றவை பற்றிய அறிவை பெறுவதே அரசியல் கல்வி எனலாம். இன்றைய தலைமுறையினர் நவீன உலகின் விஞ்ஞான வளர்ச்சி, பாரிய தொழில்நுட்ப புரட்சி, உலகமயமாக்கல் போன்றவற்றை எதிர் கொண்டு வருகின்றனர். இவ்வாறு எதிர்கொள்ளும் தலைமுறை “நாட்டின் பிரஜைகள்” என்ற கட்டத்தில் இருந்து “சர்வதேச பிரஜைகள்” என்ற கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றனர். இதனடிப்படையில் ஒவ்வொருவரும் சிறந்த பிரஜைகளாக திகழ்வதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் அரசியல் கல்வியறிவு என்பது இன்றியமையாதொன்று என்றால் அது மிகையாகாது.
இன்றைய தலைமுறையினருக்கு பாடசாலை பருவத்தில் இருந்தே அரசியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமது அரசியல் ஆளுமைகளையும் விழுமியங்களையும் விருத்தி செய்து கொள்வதுடன் மட்டுமல்லாது அவர்கள் சிறந்த அரசியல் உயிரிகளாக வாழ வழி வகுக்கிறது. இதுவே நாட்டின் நட்பிரஜைகளை உருவாக்க சிறந்த அடித்தளமாகும்.
இதில் ஒவ்வொருவரினதும் தனிமனித உரிமைகள், நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் என்பன உள்ளடங்குவதால் ஒவ்வொரு மாணவரும் தமது சிறுவயது தொட்டு மிக தூய்மையான சமூக வாழ்வியலை கற்றுக்கொள்கின்றனர். பல்வேறுபட்ட ஆட்சியமைப்பு முறைகள், அரசாங்க முறைகள், அரசியலமைப்புகள் பற்றிய தெளிவு போதிக்கப்படுவதால் தங்களது சூழ்நிலைகளுக்கு பொருத்தமான நாட்டின் ஆட்சி முறையை தெரிவு செய்யவும், தங்களுக்கு பொருத்தமான தலைவரை தெரிவு செய்யவும் இந்த அரசியல் கல்வி தனது செல்வாக்கை செலுத்துகிறது.
தேர்தல் முறைகள், பிரதிநிதித்துவ முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கும் அரசியல் கல்வி, சிறந்த தெரிவுகளுக்கு வாக்களிக்கவும் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் வழி வகுக்கிறது. இவர்களை மாணவ பருவத்தில் இருந்தே அரசியல் சமுதாயபடுத்துவதன் மூலம், ஒவ்வொரு அரசியல் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கான சிறந்த அரசியல் விளைவுகளை ஒவ்வொரு குடிமகனும் பெறுகிறான்.
அரசியல் கல்வியில் நாட்டின் அடிப்படை சட்டங்கள் தொடர்பாக போதிக்கப்படுவதால், ஒரு நாட்டின் குடிமகன் என்ற வகையில் தங்களுக்கான அடிப்படை உரிமை சட்டங்கள், பொது உரிமை சட்டங்கள் போன்ற ஒரு குடிமகன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை தனது சிறு வயதிலேயே கல்வியூட்டப்படுகிறான். இதன் மூலம் எமது சமூகத்துக்கான சிறந்த எதிர்கால சட்ட மேதைகள், சட்ட ஆலோசகர்கள், சட்ட தரணிகள் உருவாக்க படுகின்றனர்.
இக்கல்வியில் நாட்டின் வளங்கள், வளங்களை பாதுகாத்தல், வளங்களை மேம்படுத்தல் மற்றும் வளம் சார் அமைப்புக்கள் தொடர்பான அடிப்படை அறிவு போதிக்கப்படுகிறது. இவ்வாறான கல்வியை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் நாட்டின் வளங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை தந்து எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்த தவற மாட்டார்கள் என்றால் மிகையாகாது!
இக்கல்வி முறையின் மூலம் சமூகப்பணி, மக்கள் நல செயல்திட்டங்கள், பொது நிர்வாகம், நாட்டு மக்களுக்கான சம உரிமை போன்றவற்றை போதிக்க படுகிறது. இதனடிப்படையில் எங்களுக்கான சிறந்த எதிர்கால சமூகப்பணியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள், இந்த செயல் பாடுகளினால் எமது சமூகம் முன்னோக்கி நகர்த்தப்படுகிறது. நாளைய தலைவர்களை உருவாக்கிறது. இனம், மதம், சாதி, மொழி பாகுபாடில்லாத ஒற்றுமையான சம உரிமை உடைய ஒரு சிறந்த சமூகம் கட்டி எழுப்பப்படுகிறது.
சுருக்கமாக கூறுவதாயின் ஒரு சமூகத்தில் வாழும் அன்றாட மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் உள்ளடங்கியுள்ளது. இது பற்றிய கல்வி முறையே ஒவ்வொரு மனிதனையும் நாட்டின் சிறந்த குடிமகன்களாக மாற்றும். இதில் அரசியல் அறிவியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் வரலாறு அடங்கும். ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தும், ஒன்றையொன்று சார்ந்தும் விளங்குகிறது. அரசியல் அறிவை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக பார்ப்போமாயின் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட சமூகத்தில் வாழும் பிரஜைகள் இரண்டு முறைகளை கொண்டு தமது அரசியல் அறிவை வளர்க்கின்றனர். அவை, முறை சார் அரசியல் கல்வி மற்றும் முறை சாரா அரசியல் கல்வி என்ற இரு வழி முறைகளே ஆகும்.
முறை சார் அரசியல் கல்வி என்பது ஒருவன் கல்லூரியில், பல்கலை கழகத்தில் அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களில் முறைப்படி அரசியலை கற்பது ஆகும், இங்கு நேர முகாமைத்துவம், அரசியல் சார் இணை பாடவிதானம், கற்கைக்கான கால எல்லை என்பன ஒருங்கமைக்கப்பட்டு இருக்கும். இங்கு அரசியல் தலைவர்களின் கோட்பாடுகள் பயிற்றுவிக்கப்படும், கோட்பாடுகளுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் அலசப்படும். ஒரு நாட்டின் குடிமகனுக்கான அனைத்து அடிப்படை சட்ட திட்டங்களும் பயிற்றுவிக்கப்படும். இது முறை சார் அரசியல் கல்வி ஆகும்.
முறை சாரா அரசியல் கல்வி என்பது ஒரு ஒருங்கமையாத, நேர முகாமைத்துவபடுத்தப்படாத வழக்கை பாதையில் நடைபெறும் பல்வேறு அன்றாட நிகழ்வுகள் மூலம் அரசியலை கற்பது ஆகும். அது அனுபவம் சார்ந்த கல்வி ஆகும். அதாவது ஒருவன் தமது குடும்பம் மூலம் அரசியல் அறிவை பெறுகிறான், பல்வேறு மத அமைப்புக்களில் நடைபெறும் நிகழ்வுகள், சங்கங்கள், தேர்தல் பிரசாரங்கள், செய்திகள், பத்திரிகைகள், பகிரங்க விவாதங்கள், அரசியல் கட்சிகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது, தனிப்பட்ட விரோதம் மூலம், பொது இடங்களில் நடக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அரசியல் அறிவு பெறப்படுகிறது. இது முறை சாரா அரசியல் கல்வி ஆகும்
மிகச்சிறந்த அரசியல் நிலவும் ஒரு நாட்டில் பொது மக்களால் சிறந்த ஒழுங்குகள் பேணப்படும், வாழ்வாதாரம் மேம்படும், தனிமனித கல்வி விகிதாசாரம் அபிவிருத்தி அடையும். பகைகள் ஒடுக்கப்பட்டு சிறந்த பண்பாடுகள் வளரும். இதனடிப்படையில் இன்றைய அரசியல் தலைவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை சீர் திருத்தவும், சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும், சிறந்த நாளைய அரசியல் தலைவர்களை உருவாக்கவும் இந்த அரசியல் கல்வியானது இன்றய தலைமுறையினருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
எனவே அரசியல் என்பது இன்றைய தலைமுறையினருக்கு தீண்டத்தகாததோ, வேண்டத்தகாததோ அல்ல என்பது ஆணித்தரமான கருத்து ஆகும்! அரசியல் ஒரு சாக்கடையா? ஆம், அதை பூக்கடையாக மாற்றலாம்! நாம் ஒவ்வொருவரும் அணி திரண்டால்..
– ஷம்ரான் நவாஸ் (துபாய்) –
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment