Muslim History

சவுதி கைதுகளின் பின்னணி…!!!

சவுதி
சவுதி கைதுகளின் பின்னணி...!!!

சவுதி அரேபியாவில் நடைமுறைத் தலைவராக இருக்கும் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அந்நாட்டின் சிரேஷ்ட இளவரசர்கள் சிலரைக் கைது செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை என்றாலும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அரசியலில் உச்சநிலை அதிகாரத்திற்குச் செல்வதற்காக இரக்கமற்ற நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு இளவரசராக அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு வகைகளில் தமது எதிர்ப்பாளர்களாக, போட்டியாளர்களாக இருப்பவர்களை மௌனமாக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை இதில் பலியாகி இருப்பது, சவுதி அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள். அதிலும் தனது சித்தப்பாவான முன்னாள் உள்துறை அமைச்சர் இளவரசர் அஹமது பின் அப்துல் அஜீஸ், ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னால் பட்டத்து இளவரசர் மற்றும் உள்துறை அமைச்சருமான முஹம்மது பின் நயீப் ஆகியோரும் இதில் அடங்குவர்.

குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும், தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிப்பதற்காக, அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் தற்போது பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை. தனது மகன் முஹம்மத் பின் ஸல்மான் மகுடம் சூட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 2017 ஆம் ஆண்டு முஹம்மது பின் நயீப்பை திடீரென மன்னர் சல்மான் பதவிநீக்கம் செய்தார்.

எதிராளிகள் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக ஸல்மான் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார் என்று பலருக்கும் கேள்விகள் எழலாம். இதற்கான உண்மையான பதில், அவருக்கு மட்டுமே தெரியும்.

சவுதி அரேபியாவின் அரசியல் வட்டாரங்களில் இருந்து முழு உண்மையையும் வெளிக்கொணர்வது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. உள்நாட்டிலோ அல்லது சர்வதேச மட்டத்திலோ இதனால் பெரியளவில் பிரச்சினைகள் எதுவும் வராது என்பதனை இந்த முடியரசர் அறிந்து வைத்திருக்கின்றார்.

இஸ்தான்புல் நகரில் சவுதி தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்சி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் தொடர் அவமானங்கள் ஏற்பட்ட நிலையில் முஹம்மது பின் ஸல்மானுக்கு சிறிது அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஸல்மானுக்கு பூரண ஆதரவளிக்கிறது. பிரான்ஸ், பிரிட்டன் என்பன விமர்சனம் செய்தன. என்றாலும் சவுதியுடன் பொருளாதாரத் தொடர்பில் உள்ளன. சீனாவும் ரஷ்யாவும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனவே முஹம்மது பின் ஸல்மான் அதிகாரத்தை எய்துவதை உறுதிசெய்துகொண்டு வருகின்றார். தனக்கு இடையூறாக இருக்கும் விடயங்களை அவர் அகற்றி வருகின்றார். அவர்கள் மத குருமார்களாக இருந்தாலும், உறவினர்களில் போட்டியாளர்களாக இருந்தாலும், தொழிலதிபர்களாக இருந்தாலும் செல்வாக்கு மிக்க குழுக்களாக இருந்தாலும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொன்றாக நசுக்கி வருகின்றார்.

அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் பணிவானவரைப் போல தன்னை வெளிப்படுத்தி வருகின்றார். இவ் அனைத்துச் செயற்பாடுகளும் ஒரு இலக்கை நோக்கிய பயணத்தின் தொகுப்புக்கள் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top